செவ்வாய், 8 ஜூலை, 2014

மதச்சார்பற்ற பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்--= ஜோதிபாசுஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் களங்கரை விளக்கம். மார்க்சிய இயக்கத்தின் மகத்தான வழிகாட்டி. புகழ்மிகு தலைவர். மங்காத ஜோதி தோழர் ஜோதிபாசு. 1998 நவம்பர் 16 அன்று புதுதில்லியில் ஆற்றிய நேரு நினைவுச் சொற்பொழிவில் அவர் கூறியதாவது:
நிலச் சீர்திருத்தம் இல்லாமல், ஜனநாயக அதிகாரப் பரவல் இல்லாமல் ஒருசிலர் கரங்களில் செல்வமும், அதிகாரமும் அதிக அளவுக்குக் குவிவது நீடித்துக் கொண்டே போகிறது. கையாள முடியாத அளவுக்கு அதிகார வர்க்கம் பெருகிக்கொண்டே போகிறது.அதே சமயத்தில் பெருமளவு மக்கள் வறுமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் செயல்பாடுகளிலுள்ள பிறழ்வுகள், பொருளாதார முன்னேற்றத்தில் அசமத்துவம், ஒரு மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வு போன்றவைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இவை சில சமயங்களில் மையத்துக்கு எதிராகக் குமுறல்களை ஏற்படுத்தி விடுகின்றன.சாதீய மற்றும் மதவாத வாக்கு வங்கிகளை உருவாக்குவது, பணத்தைப் பயன்படுத்துவது, உயர்மட்டங்களில் லஞ்ச லாவண்யம், குண்டர்களைப் பயன்படுத்துவது மற்றும் கிரிமினல்கள், அரசியல்வாதிகள் கூட்டு ஆகியவை நம்முடைய சமூக அரசியல் வியாதிகளில் ஒருசில. 80ம் ஆண்டுகளிலிருந்து நடை பெற்றுவரும் சம்பவங்கள், நல்லெண்ணங்கொண்ட சக்திகள் அனைத்துக்கும் மிகுந்த கவலை அளிக்கிறது.
21வது நூற்றாண்டில் நாம் நுழையவிருக்கும் நேரத்தில் இந்தத் தவறான போக்குகளை திருத்துவதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் தேவைப்படுகின்றன.1992ம் ஆண்டில் பாபர் மசூதியை தகர்த்த அருவருக்கத்தக்க செயல், அடிப்படைவாதிகளால் செய்யப்பட்டது என்பதுடன் அதனுடைய வகுப்புவாத விளைவு இந்தியாவின் மரியாதையையே களங்கப்படுத்திவிட்டது. பிஜேபியினரால் தலைமை தாங்கப்படும் அரசாங்கம் உண்மையான மதச்சார்பின்மை என்று அது கூறிக்கொள்வதை உயர்த்திப் பிடிக்கப்போவதாக, அதனுடைய தேசியத்திட்டத்தில் பிரகடனம் செய்துள்ளது; உண்மையில் அது, மதச்சார்பின்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டை மாற்ற வேண்டுமென்பதற்கான அறைகூவல்தான்.
நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல் மதச்சார்பின்மை என்பதன் அடிப்படையான கோட்பாடுகளையே அப்பட்டமாக மீறுவதாகும். வகுப்புவாத மற்றும் செக்டேரியன் அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகால போற்றுதலுக்குரிய பாரம்பரியமான மதங்களை மதிக்கும் தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அச்சுறுத்துவது ஆழ்ந்த கவலைக்குரிய ஒன்று. இந்து மதம் என்பது பிஜேபியால் திரித்துக் கூறப்படுகின்றது.தேசத்தைக் கட்டுவதற்கான ஒரு மாற்றுப் பாதையை நாடு தேடிக் கொண்டிருக்கும்போது அது மேற்குவங்க, கேரளா மற்றும் திரிபுராவின் இடது முன்னணி அரசுகளின் மாதிரி நிர்வாகத்தைக் காணவேண்டிய தேவை உள்ளது. உபரி நிலங்களை மீட்டு அதை விநியோகம் செய்வதில் மேற்குவங்கம் ஒரு புதிய சாதனையை படைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
நாங்கள் தற்பொழுது எங்களுடைய நிர்வாகத்தை நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் மூலம் கிராம மட்ட அளவுக்குஅதிகாரப் பரவல் செய்திருக்கிறோம். இன்றுமாநிலத்தில் வருடாந்திர திட்டச் செலவில் 50 சதவீதம் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ்யமுறை மூலம் செலவிடப்படுகிறது. நிர்வாகப்பரவலை செய்தது ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்த தலைமை தோன்றுவதற்கு உதவியுள்ளது. அது உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பெண்களுக்கு அரசியல் வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. இந்த விதி, பின்னர் பஞ்சாயத்து சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கிராமப்புற நிலையில் குணரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளதன் தவிர்க்க முடியாத விளைவாக மேற்குவங்க மக்களின், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாங்கும் சக்தி ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இது பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின், அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் கூட்டு என்ற அடிப்படையில் தொழில்மயமாக்கல் என்ற ஒரு புதிய உணர்வுக்கு தேவைப்படும் சமூக தளத்தை உருவாக்கியுள்ளது.சுயநல சக்திகளுக்கெதிரான மக்கள் இயக்கங்கள் மூலம் கிராமப்புறங்களில் இந்த மாறுதல்கள் ஏற்படுவது சாத்தியமாகியுள்ளது. நல்ல கலாச்சார இயக்கங்களை ஆதரித்து உற்சாகப் படுத்துவதன் மூலம் நாங்கள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க முடிந்துள்ளது.
இன்று (ஜூலை 8) தோழர் ஜோதிபாசுவின் 101வது பிறந்தநாள்

கருத்துகள் இல்லை: