சனி, 12 ஜூலை, 2014

ஏழையின் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட்!


1. பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மையில்லாதவை. 2. இதன் அடிப்படை நிதிக் கொள்கை என்பது, இந்த நாட்டு ஏழை-எளிய மக்களின் மீது சுமையை ஏற்றி, அந்த பலன்களை இந்த நாட்டில் நல்ல நிலையில் உள்ள செல்வந்தர்களுக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு, உயர்தட்டில் உள்ள நடுத்தர மக்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 3. நாட்டின் பொருளாதாரத்தை மிகப் பெருமளவில் தனியார்மயமாக்கலுக்கு உட்படுத்தும் அம்சத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவது “பொது-தனியார் கூட்டு” என்பதைச் சார்ந்த திட்டமிடல் பரவலாக அனைத்துத் துறைகளிலும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, பொதுத் துறைகளின் பங்கு விற்பனை என்பது மிகப் பெருமளவில் திட்டமிடப்பட்டுள்ளது. 4. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதுதான் இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று தெரியப்படுத்தினாலும், இந்தியப் பொருளாதாரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற, நெருக்கடியில் தள்ளியுள்ள மந்த நிலையையோ அல்லது பணவீக்கத்தையோ குறைப்பதற்கான எந்த நம்பிக்கையையும் இந்த பட்ஜெட் அளிக்கவில்லை என்று விவரிக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழ
புதிய அரசின் பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும், 2014-2015ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியை விட்டுப் போகும் முன்பு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் புள்ளிவிவரங்களும் ஒன்றே என்பது நாம் கவனிக்கத்தக்கது. இடைக்கால பட்ஜெட்டில் வருவாயாகக் காட்டப்பட்டிருந்த அம்சங்கள் அதீத நம்பிக்கையுடன் முன்வைக்கப்பட்டவையாக இருந்தன. அதில் கூறப்பட்டிருந்த புள்ளிவிவரங்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. தற்போதைய பட்ஜெட் நேரடி வரிகளில் ரூ. 22,200 கோடியை நிகர வருவாய் இழப்பாகக் காட்டுகிறது. மறைமுக வரிகளைப் பொறுத்த வரையில் நிகரவருவாய் ஈட்டாக ரூ. 7,525 கோடியைகாட்டுகிறது. எனில், ஒட்டுமொத்த நிகரவருவாய் இழப்பு என்பது ரூ. 14,776கோடியாகும். நிதியமைச்சர் அருண்ஜெட்லி, எந்த செலவினங்களையும் தமது அரசாங்கம் வெட்டவில்லை என்றுகூறுகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தத் தொகையை முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதம் என்று காட்டிய அளவிலேயே தற்போதைய பட்ஜெட்டின் புள்ளிவிவரமும் இருக்கிறது. எனவே தற்போதைய புள்ளிவிவரங்களும் நம்ப முடியாதவையாக, சந்தேகமளிப்பவையாகவே உள்ளன.

பட்ஜெட் ஆவணங்களே சாட்சி

இதையே வேறு கோணத்தில் பார்ப்போம். 2014-15ம் ஆண்டிற்கான மொத்தவரி வருவாயையும் வரியல்லாத வருவாய்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், அந்தத் தொகையானது 2013-14ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டினை விட 16 சதம் அதிகமாகும். இது நிச்சயம் சாத்தியமில்லை. ஏனெனில், வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும்போது, மொத்தஉள்நாட்டு உற்பத்தியின் உண்மை மதிப்பில் ஒரு 5 சதமானம் உயர்வு இருக்கும்போது, பண வீக்க விகிதம் 11 சதமானத்திற்கு உயர்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். 2013-14ம் ஆண்டைவிட, தற்போது 2014-15ம் ஆண்டில் அனுமானிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 13.4 சதம் மட்டுமே அதிகமாகும். இப்படி 13.4 சதம் மட்டுமே உயரக் கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சத நடப்பு வருவாய் உயர்வு என்பது வரி விகிதத்தில் எந்த உயர்வும் இல்லாமல் சாத்தியமாகாது என்பதை பட்ஜெட் ஆவணங்களே தெளிவாக்குகின்றன.

அதிக நிதிப்பற்றாக்குறை நிதிமூலதனத்திற்கு ஆகாது

எனவே, 2014-15ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் செலவு விகிதங்கள் சரிக்கட்டப்படும் என்று கொண்டால், தற்போது நிதிப்பற்றாக்குறையாகக் காட்டப்படும் 4.1 சதத்தை விட நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும். உண்மையில் இது ஒன்றும் பெரியவிஷயமல்ல. ஆனால், இப்படிப்பட்ட ஒரு முடிவை நிதி மூலதனம் விரும்பாது. நிதி மூலதனம் நிதிப்பற்றாக்குறையினை விரும்பாது என்ற ஒரே கட்டாயத்தினால்தான், அரசாங்கம் செலவினங்களை சுருக்குகிறது. ஏழை-எளிய மக்களுக்கென்று குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை சுருக்கிக் கொள்கிறது.

வரிவிலக்குகளும்உயர்தட்டு மக்களுக்கே!

இரண்டாவதாக, இங்கே நாம்கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் உள்ளது. இந்த பட்ஜெட்டில் கலால்மற்றும் சுங்க வரிகள் அனைத்துமே உள்நாட்டு உற்பத்தியாளர்களின் லாப விகிதத்தை மட்டுமே அதிகரிக்கும் வகையில் வரையறை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் என்று சொல்லும்போது, அவர்களில் நிச்சயம் கார்ப்பரேட் முதலாளிகள் பிரதானமாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேரடி வரியைப் பொறுத்த வரையில் அதில்ஏற்படுத்தப்பட்டுள்ள அத்தனை மாற்றங்களும் அந்நிய ஊக முதலீட்டாளர்களுக்கும், உயர் மத்திய தர வர்க்கத்தினருக்கும் வரிச் சலுகையை வழங்கும் விதத்திலுமே அமைந்துள்ளன. வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சம் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனளிப்பதாக கருதப்படும். ஆனால், உண்மையில் மத்தியதர வர்க்கப் பிரிவில் உள்ள உயர்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த வருமான வரி விலக்கு என்பது வெறும்ரூ.50,000 அல்ல, மாறாக ரூ.1,50,000ஆகும். இதில் கூட ஒரு பிற்போக்குத்தனமான அணுகுமுறை இருப்பது தெளிவாகிறது. (இந்த ரூ.1,50,000 என்பதில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன. வருமான வரிவிலக்கிற்கான உச்ச வரம்பு ரூ. 2லட்சம் என்பதில் இருந்துரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வசதிக் கடனுக்கான வட்டிவிகிதத்திற்கான விலக்கு என்பதில் இன்னொரு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளளது. முதலீடு வகையில் விலக்கு உயர்வாக இன்னொரு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது. இப்படி இவை அனைத்துமே நடுத்தர வர்க்கத்தின் உயர்தட்டிற்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது). மாறாக, இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் சமூக நலத்துறையைப் பொறுத்த வரையிலும் சரி, அல்லது கிராமப்புற அபிவிருத்தித் துறையைப் பொறுத்த வரையிலும் சரி, ஒரு கருமித்தனமான அணுகுமுறையே காணப்படுகிறது. நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீட்டுத் தொகையும் குறைக்கப்படவில்லை என்று சொல்லியுள்ள போதும், இங்கே மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பிரிவினருக்கு அளிக்க வேண்டிய கவனம் போதுமான அளவில் வழங்கப்படவில்லை.

வசதிபடைத்தவருக்கு சாதகமானகுரூர மனோபாவம்

பணவீக்க விகிதத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்தோமானால், ஒட்டு மொத்தசமூக நலத்துறை சார்ந்த பயன்களுக்கும் அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தெளிவாகும். அரசாங்கம் இந்த செலவினங்களை மிகக் கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் கடைப்பிடித்துள்ள நிதிக் கொள்கை என்பது வசதி படைத்தவர்களுக்கு கூடுதல் லாபத்தை அளிப்பது என்பதும்,அதே நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டிச் சுருக்குவது என்பதும் ஆகும். ஆனால், இதற்கு நேர் எதிர் மாறாக, தொலைக்காட்சிப் பேட்டிகளில் நிதியமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் பாஜக கூட்டணி செல்வந்தர்களுக்கு சாதகமான குரூர மனோபாவத்துடன் இருக்கும் என்ற பொதுவான மதிப்பீட்டிற்கு பாதகமில்லாமல் நடந்து கொண்டுள்ளது.

அந்நிய முதலீட்டை49 சதமாக்கும் முயற்சி

மூன்றாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கும் முயற்சியை இந்த பட்ஜெட் மிகத் தெளிவாக்கியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டை26 சதத்தில் இருந்து 49 சதமாகஉயர்த்துவது என்பதில் இராணுவத்திலும், இன்சூரன்சிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் மற்றும்தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும்) எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்று நம்பச் சொல்வது அபத்தமானது. இது தான் உண்மை என்றால், அரசாங்கத்திலேயே கூடதனியார் பங்குகளுக்கான பாதுகாப்பு எல்லை என்பது 26 சதம் என்று நிர்ணயம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை, அர்த்தமும் இல்லை. 26 சதத்திற்கு அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரருக்கு வீட்டோ அதிகாரம் (ரத்து அதிகாரம்) கிடைக்கும் என்பது ஒரு புறம். அது மட்டுமல்லாமல், ஒரு பங்குதாரர் 49 சதமானம் பங்குகளை வைத்திருந்தால், அவரை சாதாரணமாக புறக்கணித்துவிட முடியாது. எனவே, 49 சதமானத்திற்கு அந்நிய பங்குகளை அனுமதிப்பது என்பது பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் நலன்களை உயர்த்துவதற்கான முயற்சியாகும்.
அர்த்தமற்ற வாதம்

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டினை உயர்த்த நிதியமைச்சர் வைக்கும் வாதம் - “இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக நாமே தயாரித்துக் கொள்ளலாம். அப்படி நாமே இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து கொள்ளலாம் எனும்போது, இந்த 49 சதமான அந்நிய பங்குகள் என்பது உள்நாட்டு சுய தேவையை பூர்த்தி செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும். அந்நியச் செலாவணியைப் பேணுவதற்கும் கூட இது உதவும்“ - என்றெல்லாம் நிதியமைச்சர் வாதிடுகிறார். ஆனால், இப்படி “இறக்குமதிக்குப் பதிலாக அந்நிய முதலீடு” என்ற வாதம் 49 சத அந்நிய மூலதன முதலீட்டிற்கான வாதமாக மட்டும் இருக்காது; அதையும் தாண்டிப் போகலாம்.கிருஷ்ணமேனன் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோதே, இப்படி இராணுவத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்வது என்ற முயற்சி எழுந்தது. ஆனால், அப்போது 49 சதமானம் அந்நிய நேரடி மூலதனம் என்பது இராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் தேவை என்ற பேச்சு எழவில்லை. ஒரு வேளை இப்படி அந்நிய நேரடி மூலதன முதலீட்டை அனுமதிக்காவிடில் தொழில்நுட்பம் வராது என்ற வாதத்தை முன் வைக்கலாம். ஆனால், தற்போதைய நிதியமைச்சர் தான் இராணுவ இலாகாவிற்கும் பொறுப்பு வகிக்கிறார் என்ற சூழலில், அவர் இந்த வாதத்தை முன்வைக்கவில்லை. மேலும், நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், இராணுவத் தளவாட உற்பத்தியில் நம் சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்றால், உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, 49 சதமானம் அந்நிய மூலதனத்தை அனுமதிப்போம் என்பது அர்த்தமற்றது, ஆபத்தானது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கோரிக்கை

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தனியார் பங்குகளை அனுமதிப்பதற்கு வைக்கப்படும் வாதங்களும் அர்த்தமற்றவை.உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். நமது அரசாங்கம் வங்கிகளின் முதலீட்டு ஆதாரங்களை உயர்த்துவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து அது அச்சடித்து வைத்துள்ள தொகையை, அரசாங்கப் பத்திரங்களின்பேரில் கடனாக வாங்கிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி வாங்கப்படும் பணம் செலவு செய்யப்படாது. மாறாக கையிருப்பாக வைக்கப்படும்.

எனவே, இப்படி அச்சடிப்பது பணவீக்க விகிதம் உயர்வதற்கு வழிவகுத்துவிடும் என்று யாராலும் வாதம் செய்ய முடியாது. அமெரிக்க நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டபோது, அமெரிக்க நிதித்துறையை தூக்கி நிறுத்துவதற்கு 13 டிரில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது. ஒபாமா நிர்வாகம் பல உத்தரவாதங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் அமெரிக்க நிதித்துறைக்கு முட்டுக் கொடுத்து நின்றது. ஆனால், இந்த அளவிற்கான நிதியிருப்பை அது உருவாக்குவதாகச் சொல்லவில்லை. இந்த அளவு நிதியும் செலவிடப்படவில்லை. ஆனால், 13 டிரில்லியன் டாலர்கள் இருந்தால் மட்டுமே அமெரிக்க நிதித் துறையின் நெருக்கடி சமாளிக்கப்படும் என்றுசொல்லப்பட்டது. அதே போல,இந்திய அரசாங்கமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வங்கி கையிருப்பு தொடர்பாக வலிந்து மேற்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் படி வைத்திருக்க வேண்டிய தொகையை அப்படியே நாணய வடிவில் வைக்கவேண்டியதில்லை.
இந்த “நிபந்தனைகள் மற்றும் வரையறைகள்” எல்லாம் நெருக்கடி நிலைக்கானவை. எனவே, மேலே கூறப்பட்ட முறையில் பணத்தைஅச்சடித்துக் கொள்வது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இப்போதும் அமெரிக்கவில் கடுமையான நெருக்கடி உள்ளது. எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனம், தனது நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள, இந்தியாவிடம் இப்படியொரு நீண்ட கால கோரிக்கையினை வற்புறுத்துகிறது. இதை நியாயப்படுத்துவதற்கு பாஜகஅரசாங்கம் வைக்கும் சாக்குப் போக்குதான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயப்படுத்தும் முயற்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நெருக்கடியை தொடரச் செய்யும் பட்ஜெட்

“நிதி பலப்படுத்துதுல்” என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது. அதற்காக, ஏழை மக்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட பொது முதலீட்டினை வெட்டிச் சுருக்கிவிட்டு, வசதிபடைத்தவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இந்த நிதி பலன்களை அதிகரிக்கும் திசை வழியில் உள்ள பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்உள்நாட்டு சந்தையை விரிவாக்க உதவாது. அதே போல தொடர்ந்து கொண்டிருக்கும் உலக முதலாளித்துவ நெருக்கடியால் வெளிநாட்டுச் சந்தைகளிலும் ஒரு தேக்க நிலையே நீடிக்கிறது. இதனால் அங்கும் பொருட்களுக்கான விற்பனை மந்தநிலையில் உள்ளது. எனவே, கிராக்கி குறைந்துள்ள நிலையில் இந்த நெருக்கடி இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தணிக்க முடியாது. மேலும் தற்போது உள்ள பணவீக்க விகிதம் என்பது அதிக கிராக்கியினால் ஏற்பட்டதல்ல. மாறாக விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்பட்டது. அதே போல, உணவு தானியங்கள் வெளிச் சந்தைகளில் விற்கப்படுவதால் ஊக வணிகம் மேலும் ஊக்கப்படுத்தப்பட்டு பணவீக்க விகிதம் குறைவதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டது. எனவே, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இனியும் தீவிரமாகத் தொடரும்.
தமிழில் :………ஆர். எஸ்.செண்பகம், திருநெல்வேலி.

கருத்துகள் இல்லை: