வியாழன், 30 அக்டோபர், 2014

“மேக் இன் இந்தியா” யாருக்காக?




சமீபத்தில் இந்தியப் பிரதமர் திரு வாளர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தை முன் வைத்து 500 இந்திய பெரு நிறுவன அதிபர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். “மேக் இன் இந்தியா” கவர்ச்சியான முழக் கந்தான். எதை உருவாக்கப் போகி றோம்?யாருக்காக உருவாக்க போகிறோம்? என்பதெல்லாம் மிகப் பெரும் கேள்விகள்தாம். வெற்று முழக்கங்களை கனஜோராக உருவாக்குவதில் உள்ள பெரிய அனு கூலம், அம்முழக்கங்களின் ஊடேபாதகமான உண்மைகளை முழுக்கமறைத்து, ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து விடுவது என்பது தான்.உடல் முழுவதும் இயந்திர பாகங்கள் சுழலும் சிங்கத்தின் படத்தை “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு சின்னமாக அறி முகப்படுத்திய மோடி “இது சிங் கத்தின் முதல் அடி” என்றார்.

அதாவது இந்தியா எனும் சிங்கம் இப்போதுதான் தன்னை சிங்கமாக பாவித்து, முதல் அடியை எடுத்து வைத்திருக் கிறது என்று அவருக்கே உரிய பாணியில் நீட்டி முழக்கி, நுட்பமான உடல் மொழியால் பிரஸ் தாபித்தார். உண்மையில் பெரு முதலாளிகளின் உலகம் இவரைஎந்த நோக்கத்திற்காக முன்னிலைப் படுத்தி பிரதமர் ஆக்கியதோ, அந்தநோக்கத்தை நிறைவேற்ற மோடிஎடுத்து வைக்கும் முதல் தப்படி தான் இது.இந்நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தலைவர் சைரஸ் மிஸ்ரி, பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, உள்ளிட்ட இந்தியாவின் 500 பெருநிறுவன முதலாளிகள் பங்கேற்றனர்.

இந்தியத் தொழில் துறையின் எதிர்காலம் இந்த 500 முதலாளிமார்களிடம்தான் உள்ளது. என்ற தோற்றத்தை உரு வாக்குவதே இதன் நோக்கம், “இந்த நாடு உங்களுடையது, நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாறவேண்டும், நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் உலகம் முழுக்க வலம் வரவேண்டும், நம் தேசம்இறக்குமதிகளை நிறுத்திவிட்டு, ஏற்றுமதிகளை பெருமளவில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தடை யாக உள்ள எல்லா விசயங்களும் அடித்து நொறுக்கப்படும்”என்றும் முழங்கியுள்ளார் மோடி.

அமெரிக்காவில் இவ்விசயம் குறித்து மிக வெளிப்படையாகவே உரை நிகழ்த்தியுள்ளார் மோடி. “இனி அரசுகள் தொழில் செய்ய முயற்சிக்கக் கூடாது, அரசுகளின் வேலை தொழில்களுக்கு உறு துணையாக இருப்பது மட்டுமே” இப்படி உறுதுணையாக இருக்க தற்போதுள்ள சட்டங்கள் தடை யாக இருக்குமானால் அவற்றை தூக்கியெறியவும் தயாராக இருக் கிறேன். எனவே தொழில் துவங்க இந்தியா வாருங்கள் , உங்களுக்கு தோதான இந்தியா தயாராக இருக் குமென உரையாற்றியுள்ளார்.

இந்தியாவில் தேவையற்ற சட்டங்களாக மோடி கருதுவது, சட்ட புத்தங்களிலாவது இன்னும்உயிரோடு இருக்கும், சுரண்டலுக்கு எதிரான சட்டங்கள் நீர், நிலம், வனம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு சார்ந்தும், தொழிலாளர் நலன் சார்ந்தும் இருப்பவைதான். பெரு நிறுவனங்களின் எல்லையற்ற கொள்ளைக்கு தடையாக இருக்கும் இச்சட்டங்களைத்தான் நீக்குவது, அல்லது திருத்தி நீர்த்துப் போக செய்வதற்கான உத்தரவாதங்களைத்தான் மோடி அமெரிக்காவில் வழங்கியுள்ளார்.மோடி அரசின் தொழில் மற்றும் ஊக்குவிப்புத்துறை செயலாளர் அமிதாப் காந்த், குழுவின் கையில் இப்படி தூக்கியெறியக் கூடியவை என்ற பட்டியலில் 22 தொழிலாளர் நலச்சட்ட விதிகள் உள்ளன.

இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களின் வரலாறு என்பது வங்கம், சென்னை மற்றும் மும்பை மாகாணத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்களின் ஒன்று பட்ட இயக்கங்களின் பயனாக உருவானது. நிரந்தர ஊழியர்கள் 100 பேருக்கு மேல் பணியாற்றும் ஒரு ஆலையை மூட தீர்மானிக்கும் முன் தொழிலாளர் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி தற்போது உள்ளது. இந்த விதியை 1000 பேருக்கு மேல் பணியாற்றும் ஆலைக்குத்தான் என திருத்த மோடி அரசு முயல்கிறது.

அதாவது நோக்கியா போன்ற ஆலையில் 999 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருக்கும் நிலை யில் எந்த அறிவிப்பும் அனுமதியும் இன்றி மூடிவிடலாம் என்பதுதான். தற்போது அந்த ஆலை மூடப்பட்டு விட்டது.இந்த படுபாதக சட்டத் திருத்தங்களை இந்தியாவில் நடைமுறைப் படுத்த பாஜக ஆளும் மாநிலமான இராஜஸ் தானில் முன்னோட்டம் பார்க்க முயன்றுள்ளது மோடி அரசு.இம் மாநிலத்தில் மத்திய தொழிலாளர் சட்டங்களான, தொழில்துறை தகராறு சட்டம் 1947, ஒப்பந்தத் தொழிலாளர் கட்டுபாடு சட்டம் மற்றும் தொழிற்சாலை சட்டம் 1948 ஆகிய மூன்று முக்கிய சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தொழில்துறை யினை தாராளமய மாக்கும் நோக் கிலேயே இச் சட்டங் களை திருத்தம் செய்துள்ளது இராஜஸ்தான் மாநில அரசு மேலும் பிரநிதித்துவபடுத்தும் தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டுமெனில் தொழிலாளர்கள் 15 சதவீதம் வாக்களித் தால் போதுமென்ற தற்போதைய விதி 50 சதவீதமாக மாற்றப்பட் டுள்ளது.

இதே போல ஒரு நிறு வனத்தில் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் அமல்படுத்த வேண்டு மெனில் ஒப்பந்த தொழிலாளர் களின் எண்ணிக்கை 20 இருந்தால்போதுமென்ற தற்போதைய விதி 100 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தொழிற் சாலை சட்ட அமலாக்கத்திற்கான தொழிற்கூடங்களின் வரையறை களையும், ஷரத்துக்களையும் மிக மோசமான வகையில், தொழிலாளர்களை பாதிக்கும் விதத்தில் திருத்தம் செய்துள்ளது இராஜஸ்தான் மாநில அரசு. 

இதே போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தும் சட்ட விதிகளிலும், விவசாயிகளை பாதிக்கும் விதத்திலேயே திருத் தங்களை செய்துள்ளது இம்மாநில அரசு இவை யாவும் தனியார் அந்நிய முதலாளிகளின் நலன்களுக்காக தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் அப்பட்டமான வெளிப்பாடாகும். இந்த நிகழ்ச்சி நிரலைத்தான் நாடு முழுவதும் விஸ்தரிக்க முயலுகிறது மோடியின் பாஜக அரசு.
- என்.பகத்சிங்    ......நன்றி தீக்கதிர் 30.10.2014.

27.11.2014 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்- தமிழக JAC முடிவு


தவல் பலகைக்கு பதிவிறக்கம் செய்ய  :-Click Here

புதன், 29 அக்டோபர், 2014

BSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்-FORUMமுடிவு

தகவல் பலகைக்கு பதிவிறக்கம் செய்ய :-Click Here

போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்போம்!



நேற்றைய தொடர்ச்சி....
ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தற்போது போட்டிபோட்டு வருகின்றன. தற்சமயம் அநேகமாக அனைத்துத் தொழிற் பிரிவுகளிலுமே 50 சதவீதத்திற்கும் அதிக மானவர்கள் ஒப்பந்த மற்றும் கேசுவல் தொழிலாளர்கள்தான். நவரத்தினா பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்புநிலக்கரிக் கார்ப்பரேஷனில் சென்ற செப்டம்பர் 3லிருந்து கடந்த 45 நாட்களுக்கும்மேலாக 14 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர் கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கே 12 ஆயிரம் பேர்கள் மட்டுமே நிரந்தரத்தொழிலாளர்கள். இவ்வாறு ஒப்பந்தமுறை யில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகபணியாற்றி வருகிறார்கள். உச்சநீதிமன்றத் தின் கட்டளைப்படி ஊதிய உயர்வு மற்றும் முறைப்படுத்தல் கோரியே இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நாட்டில் சுரண்டல் என்பது மிகவும் மூர்க்கத்தனமாக உள்ள நிலையில்தான், வேலையளிப்பவர்களும் அவர்களின் ஊதுகுழல்களும் தொழிலாளர் சட்டங்களில் மேலும் சலுகைகள் வேண்டும் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் முந்தைய பிரதமர் அவர்கள் அத்தகைய சுரண்டலை நியாயப்படுத்தியதானது வெட்கக் கேடானதாகும். ஒப்பந்தத்தொழி லாளர்கள் நவரத்தனா கம்பெனியில் பயன் பாடுகள் மறுக்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அவரிடம் சுட்டிக்காட்டியபோது, அவர், அவ்வாறு இருப்பதால்தான் அது நவரத்தனா நிறுவனமாக வளர்ந்திருக்கிறது என்று கூறினார். தற்போதைய அரசாங்கம் இதில் மேலும் அரக்கத்தனமாக இருந்திட விரும் புகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. 40 தொழிலாளர் களுக்கு மேல் பணிசெய்தால்தான் சிறு தொழில்கள் என்ற அமைப்பின்கீழ் வரும்என்பதுபோன்று புதிய சட்டம் கொண்டுவரப்பட விருக்கிறது. 

மேலும் இத்தொழில் பிரிவுகளுக்கு தொழிற்சாலை சட்டம்,தொழில் தகராறுகள் சட்டம், இஎஸ்ஐ,இபிஎப் மற்றும் மகப்பேறு மருத்துவப் பயன்பாடு சட்டம் போன்று 14 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அநேகமாக அனைத்துத் தொழில் பிரிவுகளுமே இச்சட்டத்தின்கீழ் தப்பித்துக் கொள்ள வழியுண்டு. இவ்வாறு நாட்டிலுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலான வர்களை தொழிலாளர்நலச் சட்டங்களின் அதிகார வரம்பெல்லைக்குள்ளிருந்து விலக்கி வைப்பதற்கே அரசாங்கம் இந்த வேலைகளில் இறங்கி இருக்கிறது. மாறாக இத்தகைய `சிறிய’ தொழிற்பிரிவுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சில அற்பப் பயன்களே அளிக்கப்பட இருக்கின்றன.
இபிஎப் மற்றும் இஎஸ்ஐ போன்ற திட்டங்கள் கூட ஐஆர்டிஏ முறைப்படுத்தியுள்ள பங்களிப்பு ஓய்வூதிய மற்றும் நலத் திட்டங்களின் (உடிவேசiரெவடிசல யீநளேiடிn யனே hநயடவா ளஉhநஅநள)கீழ் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத்தெரிகிறது. மோடி அரசாங்கம் தற்போ திருந்து வரும் வேலையளிப்பவர்களை மட்டும் அல்ல, இனி முதலீடு செய்ய விருக்கும் முதலீட்டாளர்களையும் முகஸ்துதி செய்வதற்காகவும் அவர்களின்கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய விதத்திலும், அனைத்துவிதமான `தடை களை’யும் அகற்றிடவும், `முதலீட்டை’ எளிமையாக ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக் கிறது. தங்கள் குறிக்கோளை எய்து வதற்காக தான் மேற்கொள்ளும் தொழி லாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும், வஞ்சகமான வார்த்தை ஜாலங்களால் மூடி மறைத்திடவும், அவற்றை தங்களுடைய ஊடகங்களின் வாயிலாக சந்தைப் படுத்திடவும் இறங்கியுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களில் சிற்சில திருத்தங்கள் போதாது, மாறாக அனைத்துத் தொழிலா ளர் நலச் சட்டங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கார்ப்பரேட் ஊடகங்க ளில் ஒருசில ஏற்கனவே கோரத் தொடங்கிவிட்டன.

செயலில் நவீன தாராளமயம்
நாட்டின் தொழிலாளர் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைகளின் நாசகர விளைவுகளை கடந்த 24 ஆண்டு காலமாகவே அனுபவித்து வருகின்றனர். நவீன தாராளமய யுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் கேசுவல் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் விளைவாக பல்வேறு துறைகளிலும் நடந்துவரும் சுரண்டலின் தன்மை குறித்து பலரால் இன்னமும் சரியானமுறையில் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய-மாநில அரசாங்கங்களின் பல் வேறு திட்டங்களின் கீழ் கோடிக் கணக்கான தொழிலாளர்கள், இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்,தாங்கள் தொழிலாளர்கள் என்ற அங்கீகாரம் இல்லாமலேயே, வாழ்க்கைக் கான பிழைப்பூதியம் கூட அளிக்கப் படாமல், வேலை செய்திட நிர்ப்பந்திக் கப்பட்டிருக்கிறார்கள். கல்வியாளர்கள் நடத்திடும் விவாதங்களில் எல்லாம், நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 94-95 சதவீதத்தினர் முறைசாராத் தொழிலாளர்களாக இருப் பது குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கப் படுகிறது. 

விவாதங்களின் முடிவில் முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்றுதான் எப்போதுமே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனமும் இப்பிரச்சனை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. 2015இல் நடைபெறவிருக்கும் தன்னுடைய வருடாந்திர மாநாட்டில் இதுதொடர்பாக சில முடிவுகளும் எடுக்க இருக்கிறது. ஆனாலும் எதார்த்த நிலை என்னவெனில், நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் முறை சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதேயாகும். இதற்கு ஒரே விதிவிலக்காக லத்தீன்அமெரிக்க நாடுகள் இருந்து வரு கின்றன. 

இவை ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கிணங்க நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக் கின்றன. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் அக்டோபர் 16 அன்று வெளியிட் டுள்ள ஓர் அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்காவில், `2009க்கும் 2013க்கும் இடையே முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை வெறும் 2.6 சதவீதம் மட்டுமே (மொத்த வேலைவாய்ப்பில் 46.6 சதவீதம்) அதிகரித்துள்ள அதே சமயத் தில், நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை 12.7 சதவீதம் (மொத்த வேலைவாய்ப்பில் 53.4 சதவீதம்) வளர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் என்னே வித்தியாசம்!மாபெரும் நம் ஜனநாயக நாட்டில்இன்னமும் ஸ்தாபனம் அமைத்துக்கொள்வதற்கான உரிமையும், கூட்டுபேர சக்தியுமே உத்தரவாதப்படுத்தப்பட வில்லை. இத்தகைய நம் நாட்டில்`உழைப்பே வெல்லும்’ போன்ற வஞ்சகத்திட்டங்கள் நாட்டிலுள்ள தொழிலாளர் களுக்கு உதவப் போவதில்லை. உண்மையில், ஸ்தாபனம் அமைத்துக்கொள்வதற் கான உரிமைக்காவும், கூட்டு பேர சக்திக்காகவும் நம் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் 87 மற்றும் 98 கன்வென்ஷன்களை நிறைவேற்ற வலியுறுத்தி நாம் நடத்தும் போராட்டங்களுடன் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் தன்னைஇணைத்துக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களின் நலன் காத்திட,நாட்டில் ஏராளமான சட்டங்கள் இருந்த போதிலும்கூட, தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது கட்டாயம் என்ற முறையில் நாட்டில் எந்தச் சட்டமும் கிடையாது. பின் எப்படி உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்று நம்மை நாம் பீற்றிக் கொள்கிறோம்? நாட்டில் வெறும் 31 சதவீத வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளவர்களின் ஆட்சியில், தொழிலாளர்கள் தங்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலையும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் ஸ்தாபனத்தை அங்கீ கரிக்கும் நிலையும் இல்லாதிருப்பது ஏன்? இத்தகு கேள்விகள் அனைத்தும் எழுப்பப்பட்டு விரைவில் விடைகள் காணப்பட வேண்டியிருக்கின்றன. இன் றைய தினம் ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதலின் உண்மையான குணத்தைப் புரிந்துகொள்ள இத்தகைய கேள்விகளை நாம் எழுப்பி அவற்றிற்கு விடை காண வேண்டியதும் நம் பணியாகும்.

தொழிலாளர்கள் எதிர்த்திட வேண்டும்
ஆட்சியாளர்களின் தாக்குதல்களை தொழிலாளர் வர்க்கம் எதிர்த்திட வேண்டும், எதிர்த்திடும். அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் தேசிய மட்டத்திலான சம்மேளனங்களும், பல்வேறு மத்திய-மாநில ஊழியர் அமைப்புகளின் கூட்டுமேடை, தங்கள் பத்து அம்சக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதுடன், ஆட்சியாளர்கள் தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு விரோதமான திருத்தங் கள் கொண்டுவந்திருக்கும் பிரச்சனையையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற தேசியசிறப்பு மாநாட்டின் அறைகூவலுக் கிணங்க, அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவிலான, பிராந்திய அளவி லான மற்றும் உள்ளூர் வடிவிலான பிரச் சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரு கின்றன. டிசம்பர் 5 அன்று அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் தில்லியிலும் நடைபெறவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்காகத் தயாரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் தங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் வென்றெடுத்த கோரிக்கைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒன்றுபட்டபோராட்டங்களைத் தீவிரப்படுத்தி யுள்ளனர். வரவிருக்கும் நாட்கள் போராட்ட நாட்களாக இருக்கப் போகின்றன.
கட்டுரையாளர் தோழர் ஏ.கே. பத்மநாபன் அ.இ.தலைவர், சிஐடியு

செவ்வாய், 28 அக்டோபர், 2014

உழைப்பே வெல்லும்’ : வஞ்சிக்கும் முழக்கம்


தற்போது மத்தியில் ஆட்சியி லிருக்கும் அரசாங்கமானது மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றுவதில் கைதேர்ந்தது போன்றே தோன்றுகிறது. இவர்கள் தங்கள் வாய்களிலிருந்து கொட்டுகின்ற வார்த்தைகளின்படியே இவர்கள் நடக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம் அல்ல. ஒரு திசையில் போவதாகச் சொல்லிக்கொண்டே எதிர்திசை யில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.`உழைப்பே வெல்லும்’ என்கிற அரசின் திட்டம் குறித்து கார்ப்பரேட் நாளேடு களில் பல வண்ணங்கள் வெளியாகியுள்ள விளம்பரங்கள் இதனையே உறுதி செய்கிறது. 

இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், `நாட்டில் உழைக்கும் மக்களுக்காக’ புதிய அரசாங்கத்தால் முக்கியமானதொரு திட்டமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டமானது தொழிலாளர்களுக்கு ஏராளமான நன்கொடைகளை அளித் திருப்பதாக அரசாங்கத்தின் சார்பில் அறி விப்புகள் அள்ளித் தெளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களோ `வர்த்தக நடை முறைகளை’ மிகவும் எளிமைப்படுத்தி விட்டதாகவும், வேலையளிப்பவர்களை `இன்ஸ்பெக்டர்களின் ஆட்சியி லிருந்து’ (‘iளேயீநஉவடிச சயத’) விடுவித்திருப்பதாகவும், பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றன. தொழிலாளர் மற்றும் தொழில்துறைப் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளோர் இந்த முரண்பாட்டைக் காணாமல் இருக்க மாட்டார்கள்.

உண்மையானசாராம்சங்கள் என்ன?
இத்திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட் டுள்ள பல அம்சங்கள் குறித்து உண்மை நிலை என்ன? தொழிலாளர்களைத் திசைதிருப்பும் விதத்தில் `உழைப்பே வெல் லும்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட் டத்தின் கீழ் தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய ஒரேயொரு அறி விப்பு, ஊழியர் வைப்பு நிதிக் கணக்கு வைத்திருப்போருக்கு பொதுவான கணக்கு எண் கொடுக் கப்பட்டிருப்பதுதான். தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுகையில், தன் னுடைய ஊழியர் வைப்பு நிதிக் கணக் கையும் பிரச்சனை எதுவும் இல்லாமல் மாற்றிக் கொள்ள இது வகை செய்கிறது. ஆயினும் இது இப்புதிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நாட்டில் ஊழியர் வைப்புநிதிக் கணக்கு வைத்திருக்கும் நாலு கோடி பேருக்கும் பொதுவான கணக்கு எண் தரப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாகப் போராடிவந்ததன் விளைவாக த்தான் இவ்வாறு முடிவுமேற்கொள்ளப்பட்டிருக் கிறது. 

ஒரு சில மாதங் களுக்குள் இதற்கான நடைமுறை முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. புதிய அரசாங்கம், இதுதொடர்பாக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத நிலையில், தற்போதைய பிரதமர் இத்திட்டத்தினைத் துவக்கி வைத்ததன் மூலம் இது தங்களால்தான் கொண்டு வரப்பட்டது என்பது போன்ற தோற்றத்தை மிகவும் எளிதாக ஏற்படுத்திக் கொண்டுவிட்டது. உண்மையில், இவ்வாறு இத்திட்டத்தைத் தொடங்குகையில், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட முக்கியமானதொரு அறிவிப்புதான், வேலையளிப்பவர்கள் மத்தியில் கொண் டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது. அதாவது அரசாங் கம் `இன்ஸ்பெக்டர் ஆட்சி’க்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்தான் அவ் வாறான மகிழ்ச்சியை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

உண்மை யில் தற்போது இ.பி.எப்., இ.எஸ்.ஐ., சுரங்கத் தொழில்களில் பாது காப்பு, தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக முறைகேடுகள் நடைபெறுகையில் அவற்றின் மீதுபெயரளவிலாவது நடவடிக்கை எடுத்து வரும் ஆய்வாளர்கள் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் திட்டத்திற்குத்தான் இத்தகைய வரவேற் பினை வேலையளிப்போர் அளித்திருக் கிறார்கள்.இவ்வாறு நடவடிக்கைகள் எடுத்துவந்த ஆய்வாளர்களுக்கு, நம்முடையபிரதமர் புதியதாக ஒரு `வேலை கலாச்சாரத்தை’ப் பிரகடனம் செய்திருக்கிறார். ஆய்வாளர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகுறித்த விதிகள் பிரதமர் அலுவல கத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. வேலையளிப்பவர்கள் இனிவருங்காலங்களில் தாங்கள் ஆய் வாளர்களுக்கு அனுப்ப வேண்டிய 16 விதமான தொழிலாளர்நல சட்டங்களின் கீழான அறிக்கைகள் அனைத் தையும் அவர்களே `சுயமாக சான்றிட்டு’ (‘selfcertification’), இணைய வழியாகவே அனுப்பிவிட அனுமதிக்கப்பட்டிருக்கிறார் களாம். எனவே தொழிற்சாலை ஆய்வாளர்களோ (Inspector of Factories) அல்லது தொழிலாளர்நல ஆய் வாளர்களோ (Inspectors of Labour) மேற்படி வேலை யளிப்போரின் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லையாம். இப்போது இபிஎப், இஎஸ்ஐபோன்றவை தொடர்பாக சட்டங்கள் இருக்கும் காலத்திலேயே நாட்டில் பெரும்பான்மை தொழிலாளர்கள் இவற்றின்கீழ் பதிவு செய்யப்பட்டு, அவர் களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங் கள் அமல்படுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

இந்நிலையில் தொழிற்சாலைகளையோ அல்லது தொழிலாளர்நல ஸ்தாபனங் களை எதையுமோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்ற நிலை வரும்போது நிலைமைகள் மேலும் மோசமாகும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அதுமட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண் டிய மேலும் பல ஆதாயங்கள் இப்புதிய திட்டத்தின்கீழ் மறுக்கப்பட்டிருக் கின்றன. தொழிலாளர்நல அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, அக்டோபர் 18ஆம் தேதிய தி இந்து பிசினஸ்லைன் நாளேடு குறிப்பிட்டிருப்பதாவது: “அர சாங்கம் தொழிலாளர் களின் சில பிரிவினருக்கு சமூகப் பாதுகாப்பு நடவடிக் கைகள் சிலவற்றை அமல் படுத்திக் கொண்டிருக் கிறது. ஆயினும் அவற்றால் பயனடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறை வானதாகும்.’’ தற்போதைய அரசின் நடவடிக்கை இந்நிலைமையை மேலும் மோசமான தாகவே மாற்றிடும்.`தொழில்கல்வி’க்குப் பயிற்சிஅளிப்பது போன்ற இதர திட்டங்கள் தொடர்பாகவும், அப்ரண்டிஸ் திட்டங் களில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் அரசாங்கத்தால் முன்பு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அவையும் அமல்படுத்தப்பட வில்லை. 

அரசாங்கமானது மிகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் `ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா’ (RSBY-Rashtriya Swasthya Bima Yojana)திட் டத்தை மாற்றி அமைக்க இருப்ப தாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால் மாற்றம் எப்படி இருக்கும் என்று விளக்கப்பட வில்லை. ஆர்எஸ்பிஒய், ஆம் ஆத்மி பீமா யோஜனா மற்றும் இந்திரா காந்தி வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத்திட்டம் ஆகிய மூன்றும் ஒரே `ஸ்மார்ட் கார்டு’மூலம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று திட் டங்களுமே கடந்த பல ஆண்டுகளாகவே அமல்படுத்தப்பட்டு வருகின்றன இப்போது இவற்றில் என்ன மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இவை தொடர்பாக இவர்கள்மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அiத்துமே வஞ்சகமானவை என்று மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. 

இத்திட்டத்தின் பிரதான குறிக்கோள், முதலீட் டாளர்களை - உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களை - திருப்திப் படுத்த வேண்டும் என்பதேயாகும். `இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்கிற பிரதமரின் அழைப்பு மூலம் முதலீட் டாளர்களுக்கு `சிவப்புக் கம்பள வர வேற்பு’ அளிப்பதன் தொடர்ச்சியே இதுவாகும். எனவேதான், தொழிற்சங்கங்கள் தங்கள் ஆழமான ஐயங்களை வெளிப் படுத்தும் அதே சமயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களும், முதலாளிகளின் அமைப்புகளும் பிரதமரின் இத்தகைய அறிவிப்புகளுக்கு அளவுக்குமீறிய மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளன. பிரதமரின் அறிவிப்புகளை வரவேற் றுள்ள `ஃபிக்கி’ (குஐஊஊஐ) என்னும் முத லாளிகளின் அமைப்பு, “தாங்கள் மேலும் பல தீவிர மாற்றங்களை எதிர் பார்த்தோம்’’ என்று கூறியிருக்கிறது.தொழிலாளர்களின் நலன் சார்பாக தொழிற்சங்க இயக்கங்கள் கோரி வந்த கோரிக்கைகள், `உழைப்பே வெல்லும்’ திட்டத்தில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளன. 

இதனை மூடிமறைத்திடவே, பிரதமர் சொல் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கிறார். எனவேதான், சத்யமேவ ஜெயதே என்ற கோஷத்துடன் `ஷ்ரமேவ ஜெயதே’ (உழைப்பே வெல்லும்) என்ற கோஷத்தை இணைத்துப் பார்ப்பது டன், தொழிலாளர்களை, `ஷ்ரம யோகி’ என்றும், `ராஷ்ட்ர யோகி’ என்றும், `ராஷ்ட்ர நிர்மாதா’ என்றும் புகழ்ந்து தள்ளுகிறார். உழைக்கும் மக்களுக்கு சில ஆதாயங்களை அளித்திருப்பதுபோல் காட்டுவதற்காகவே இத்தகைய ஏமாற்று வேலைகளை அரசாங்கம் செய்து கொண் டிருக்கிறது.மத்தியிலும் இராஜஸ்தான் மற்றும்மத்தியப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் பல்வேறு தொழி லாளர் நலச்சட்டங்களில் மாற்றங்களை ஏற் படுத்தி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப்பறித்துள்ள சூழ்நிலையில் தான் இந்தத் திட்டமும் கொண்டுவரப்பட் டிருக்கிறது. 

தொழிலாளர்களின் மிகப்பெரும்பான்மையினரை தொழி லாளர் நலச்சட்டங்களின் வரையறைகளி லிருந்து அப்புறப்படுத் திடவே இவ்வாறு தொழிலாளர்நலச் சட்டங்களில் மாற்றங் களைக் கொண்டு வந்திருக்கிறது. இவ் வாறு தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர மற்ற மாநில அரசுகளும் தயாராகிக் கொண் டிருக்கின்றன. நாட்டில் இதுநாள்வரை அரசு - நிர் வாகம் - தொழிலாளர் ஸ்தாபனம் என்ற முறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் பெயரளவிலாவது நடந்து வந்தன. அநேகமாக அவற்றின் முடிவு கேலிக் கூத் தாகவே இருக்கும். ஏன், நாட்டின் உயர்பட்சமுத்தரப்பு அமைப்பான இந்தியத் தொழி லாளர் மாநாடு என்னும் அமைப்பின் பரிந் துரைகளே அமல்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம், பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த முத்தரப்பு தொழிற்சாலைக் கமிட்டிகளைக் கலைத்துவிட்டது. இதற்கு எந்தக் காரணத்தையும் அரசாங்கம் குறிப்பிட வில்லை.தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து தொழி லாளர்களுக்கு உதவ வேண்டும் என்று உண்மையிலேயே அரசாங்கம் கருது மானால், முதலில் அது, தொழிலாளர் அமைச்சகத்தால் ஒப்பந்தத் தொழி லாளர் (முறைப்படுத்தல் மற்றும் ஒழித் தல்) சட்டத்தின் மீது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, நான்கு ஆண்டு களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் தூசி மண்டிக்கிடக்கும் கோப்புகளை எடுத்து, அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கட்டும். இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் முடிவு களுக்கு இணங்க, “சம வேலைக்கு சமஊதியம்’’ என்னும் அடிப்படையில் திருத்தங்களேயாகும். இத்திருத்தத்தின் நியாயம் குறித்து எவராலும் ஆட்சேபிக்க முடியவில்லை. ஹரியானாவில் மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிற்கூடத் தில் ஒப்பந்தத் தொழிலாளர் என்ற பெயரில் நடைபெற்று வரும் சுரண்டலுக்கு எதிராக கார்ப்பரேட் ஊடகங்கள் கூட தலையங்கங்கள் தீட்டியுள்ளன.
நன்றி: தீக்கதிர் 28.10.2014  ....நாளை முடியும்

தோழர் N.சுந்தரம் STS அவர்களை மாவட்டசங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உங்கள் தொண்டுகள் தொடரட்டும் தோழா ....



அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டசங்கத்தின் உதவித்தலைவர் தோழர் N.சுந்தரம் STS அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக செஞ்சியை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வாழுகின்ற ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை இருளர் இன  மக்களுக்கு பல்வேறு  சமுக நலப்பணிகள்செய்து வந்ததையும், அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதையும் அங்கீகரித்து சென்னை  ஜெருசேலம் பல்கலைக்கழகம் சமுகநல சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது .ட்டமளிப்புவிழா 17.10.2014 அன்று சென்னை இராஜாஅண்ணாமலைமலை மன்றத்தில் நடைபெற்றது. யர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் இராமசுப்ரணியன் அவர்கள் பட்டம் வழங்கி கவுரவித்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தோழர் சுந்தரம் அவர்களின் மக்கள்பணி தொடரட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.



BSNLEU          &    NFTE -(BSNL )

 மாவட்டச் சங்கங்கள்



தோழர்களே

            நமது கடலூர் மாவட்டத்திலுள்ள விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு OCTOBER -27 தேதியாகியும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததனை கண்டித்து BSNLEU, TNTCWU , மற்றும் NFTE, TMTCLU ஆகிய நான்கு மாவட்டச் சங்கங்களின் சார்பாக கவன் ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

நிர்வாகத்தின் உறுதிமொழியினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

       மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

September -2014 மாத சம்பள பட்டுவாட இன்று அல்லது நாளை நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.

INNOVOTIVE SOLUTIONS –ஒப்பந்தகாரரை BLOCK LIST (ஒப்பந்ததிலிருந்து நீக்குதல்) செய்வதற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.

OCTOBER-2014 சம்பள பட்டுவாடவிற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

NOVEMBER-2014 முதல் புதிய டெண்டர் அமுலுக்கு வரும்.

 விழுப்புரம், திண்டிவனம், , விருத்தாசலம், ஆகிய பகுதிகளில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க தோழர்களுக்கும் நமது நன்றியினை  தெரிவித்து கொள்கிறோம்



            மாநில சங்கங்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தீர்வுக்கு தொடர் முயற்சி மேற்கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..




தோழமையுடன்
                K.T.சம்பந்தம்                  இரா.ஸ்ரீதர்                      மாவட்டசெயலர்               மாவட்டசெயலர்                                                         


                                                                                                                                                                      

திங்கள், 27 அக்டோபர், 2014

ஏன் இந்த தனியார் மோகம்?

         நிலக்கரித் துறையில் சமீப காலமாக நிலவிவந்த அசாதாரணச் சூழலில், பல்வேறு விமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக 214 நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிலக்கரித் துறையே ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில் மத்திய அரசு சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தச் சுறுசுறுப்பு என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாம் இணையத்தின் மூலம் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குப் பின், பழைய உரிமையாளர்களிட மிருந்து புதிய உரிமையாளர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரச் சட்டமொன்றும் அமல்படுத்தப் படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப் பதற்காகத்தான் எல்லா ஏற்பாடுகளும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இந்தியாவின் நிலக்கரித்துறையின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்று அருண் ஜேட்லி சொல்லியிருப்பதுதான் இதில் வேடிக்கை. தனியாரின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று நிதியமைச்சர் நம்புகிறார் போலும். எனினும், தேவையானபோது தனது அதிகாரத்தை அரசு பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அவசரச் சட்டத்தில் இடம் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் நிலக்கரித் துறைக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்ளார்ந்த நோக்கமே அரசுத் துறையால் எதையும் செய்ய முடியாது, தனியார் துறையே திறம்படச் செயலாற்றும் என்று நம்பவைப்பதுதான். தகவல்தொடர்புத் துறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்திலேயே இல்லாத வகையில் பிரம்மாண்டமான தகவல்தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டது இந்தியா. ஆனால், களத்தில் தனியார் துறைக்கு வழிவிட்டு வேண்டுமென்றே பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது அரசுத் துறை. நிலக்கரித் துறையும் இன்று இந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.ஒருபுறம், அரசுத் துறை சரியாகச் செயல்படவில்லை என்றால், மறுபுறம் தனியார் நிறுவனங்கள் அதீதமாகச் செயல்பட்டு லாப வேட்டையை நிகழ்த்துகின்றன. அதற்கு வழி விடவே அரசுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அரசு மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும். ஆனால், அரசு மந்தமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரே நோக்கம் லாபம் என்பதால் தனியார்மயமாக்குவதில் முதல் பலி மக்கள் நலன்தான். இந்த உண்மை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் அரசு சளைக்காமல் தனியாரை நோக்கியே நகர்வது எதற்காக?
                                 <நன்றி :- தி ஹிந்து >

பசித்த வயிற்றுடன் படுக்கைக்கு செல்லும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம்


புதுதில்லி, அக். 26-இந்தியாவில் 3ல் 1 குழந்தை பசித்த வயிற்றுடன்தான் படுக் கைக்கு செல்கிறது. 30.7 விழுக்காடு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறைந்த எடையுடன்தான் உள் ளனர் என சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனமே உலகளவில் பசிக்கான அளவீடுகள் தயாரித்து ஆண்டுதோறும் வெளியிடுகிறது. தில்லியில் ஞாயிறன்று இவ் வமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:
76 நாடுகளை கொண்ட பசியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 55வது இடத்தில் இருக்கிறது. இந்நிலைமை இந்திய குழந் தைகளின் உண்மை நிலையை தெளிவுபடுத்துகிறது. 2005-2006ல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவானவர்கள் 45.1 விழுக்காடு இருந்தனர். தற்போது அது 30.7 விழுக்காடாக குறைந்துள்ளது என்றாலும் இது கவலைக்குரிய நிலைமை யாகவே உள்ளது. ஏனெனில் பிறந்ததிலிருந்து 5 வயது வரைதான் மூளையின் வளர்ச்சி துரிதமாக நடை பெறும். அப்போது சத்தான உணவு அவசியம். ஆனால் இவ்வயதில் சத்தின்மையோ ,போதாக்குறை சத்துணவோ அல்லது எந்த உணவுமின்றி பசியால் வாடுவ தோ குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்.
இதனால் நாட்டின் எதிர்கால தலைமுறை யின் வளர்ச்சியே பாதிப்புக்குள்ளாகி விடும். இவ்வாறு உணவின்றி தவிக்கும் குழந்தைகள் வயதுக்கு வருவது தாமதமாகும். இப்பாதிப்புகளை கவனத்தில் கொண்டே மதிய உணவுத்திட்டம், ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஆனால் இத்திட் டங்களில் உள்ள குறைபாடு இத்திட்டங்களைக் கொண்ட பள்ளியில் படிக்க வரும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். பள்ளிக்கு வராத, கல்விமுறையிலிருந்து வெளியேற்றப் பட்ட மிக ஏழைக் குழந்தைகளுக்கு திட்டத்தின் பயன்கள் கிடைக் காது. ஏழை மக்களின் வேலை யில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட் டங்களின் மூலமாக கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு மிகக்குறைந்த அளவிலான உணவைபெற முடியும் என்பதால் இத்திட் டங்கள் அமல்படுத்தப்பட்டன. பொது விநியோகத்திட்டமும் இவர்களுக்கு உதவி புரிந்தது. இருப்பினும் இத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் சொற்ப வரு வாய் மற்றும் மானியங்களின் மூலம் உணவுப் பொருட்களும் போதுமான ஊட்டச்சத்தை அளிப்ப தில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில் பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை படிப்படியாக குறைத்து, அதை ஒழித்துக் கட்ட முயற்சித்து வருவதற்கு நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் அமர்த்தியா சென் மற்றும் பேராசிரியர் ஜீன் டிரெஸ் ஆகி யோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரெஸ் ஆகி யோரும் உணவு உரிமைக்கான கூட்டமைப்பினரும் இணைந்துஅறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ள தாவது:
இதுபோன்ற வேலை வாய்ப்பு,உணவு மானியத் திட்டங்கள் மற்றும் பொது விநியோகத் திட்டங்களை குறைப்பதும் ரத்து செய்வதும் ஒரு நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப் படும் அநீதியாகும். `கீளின் இந்தியா’ என்ற பிரச்சாரத்தில் இது போன்ற மிக முக்கியமான விசயங்கள் குறித்த விவாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலும் இதுபோன்ற அடிப் படையான விசயங்களை எல்லாம் விவாதிப்பது கிட்டத்தட்ட காலப்போக்கில் மறைந்து போன வழக்க மாகி வருகிறது. கீளின் இந்தியா என்பது பசித்த வயிறுகளுடன் எப்படி நிறைவேறும். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

பொக்கிஷத்தை திறந்துவிடும்...



பொதுத்துறை நிறுவனங்கள் நவ இந்தியாவின்நவீன திருக்கோயில்கள்- ஜவஹர்லால் நேருஇந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் 10 சத பங்குகளையும், எண்ணெய்மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 5 சத பங்குகளை யும், தேசிய நீர் மின் சக்தி கழகத் தின் 11.36 சத பங்குகளையும் விற்பனை செய்ய பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மூன்று நிறுவன பங்கு களும் திட்டமிடப்பட்டபடி விற்கப் பட்டால், இந்த விற்பனையின் மூலம் ரூ. 45000 கோடிக்கு மேல்அரசு திரட்டிட முடியும். இது பட்ஜெட்டில் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்ட திட்ட மிடப்பட்ட ரூ. 43,425 கோடிக்கும் அதிகமான தொகை. இந்த மூன்று நிறுவனங்களும் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி இரும்பு உற்பத்தியில் முன்னிலை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 5 சத பங்குகளையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பதற்கான ஏற்பாடுகளை பாஜகஅரசு செய்து வருகிறது. மேலும்கெயில் மற்றும் பெல் போன்ற மதிப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் இந்த பங்கு விற்பனை வரிசையில் உள்ளன.
அகல திறக்கப்படும் கதவு
இந்திய நிதி அமைச்சகம் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 2017 ஆகஸ்ட் 21க்குள் தங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சத பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றிருக்க வேண் டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 25 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், 9 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 1 மாநில பொதுத் துறை நிறுவனமும் உள்ளது. மேலும், இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் 16 பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்னா என்ற தகுதியை பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் தங்கள் நவரத்னா தகுதியை தக்க வைக்கவேண்டுமென்றால், அந்நிறுவ னங்கள் பங்கு விற்பனைக்காக தங்கள் நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மோடி அரசு பிறப்பித்துள்ளது. “நாங்கள் கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறோம். நீங்கள் இந் திய மக்களின் சொத்தை அள்ளிச் செல்லுங்கள்” என்று தனியார் நிறுவனங்களை அழைக்கிறது மோடி அரசு.
பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து………
பொதுத் துறை பங்கு விற்பனை மூலம் பெறப்படும் பணத்தை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலம் சார்ந்த துறைகளுக்கு செலவிடுவதாக அரசு கூறுகிறது. ஆனால், கல்வி மற்றும் சுகாதாரத் திற்கான செலவு என்பது ஒவ் வொரு ஆண்டும் நிகழும் தொடர் செலவே அன்றி ஒரே ஒரு தடவைநடக்கும் செலவு அல்ல. அப்படி யிருக்க இச்செலவிற்கு ஒரு தடவை விற்றுக் கிடைக்கும் பணத்தை ஒதுக்குவது எப்படிபொருத்தமானதாக இருக்கும்? ஆகவே, அடுத்தடுத்த ஆண்டுக ளில் இந்த செலவினங்களை காரணம் காட்டி, அரசு மீண்டும் மீண்டும் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை நோக்கியே நகரும். அது மட்டுமில்லாமல், அப்படி போலிக் காரணம் காட்டிக் கொண்டு நகரும் அரசு 49 சதம் என்பதில் நிற்கப்போவதில்லை.
இதனால், ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங் களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடு படும் நிலைக்குச் சென்றுவிடும் அபாயம் உள் ளது. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு செய்துள்ள முதலீடுகளில் இருந்து அரசுக்குக் கிடைக்கும் பங்கு ஆதாயம் என்பது ஒவ்வொருஆண்டும் அரசுக்குக் கிடைக்கும் தொடர் வருமானம் ஆகும். ஒரு தடவை கிடைக்கும் வருமானத்திற்காக ஒவ்வொரு ஆண்டும்இந்த பொதுத்துறை நிறுவனங் களிலிருந்து கிடைக்கும் வருமா னத்தை இழப்பது என்பது தினம் ஒரு பொன் முட்டையிட்டுக் கொண்டிருக்கும் வாத்தை அறுத்து அதிலிருந்து ஒரு முட்டையை மட்டும் எடுப்பதற்குச் சமமாகும். பொருளாதாரரீதியாகவும் இப்படி உறுதியாகக் கிடைக்கும் தொடர் வருமானத்தை இழப்பது என்பது புத்திசாலித்தனமானமுடிவாக இருக்க முடியாது.
அள்ளிக் கொடுக்கும் காமதேனு
மத்திய பொதுத்துறை நிறுவ னங்கள் மத்திய அரசுக்கு வரிகள், பங்கு ஆதாயம் மற்றும் வட்டி என்ற வகையில் 2011-2012ம் ஆண்டு கொடுத்த தொகை ரூ. 1,60,801 கோடி. அந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நிய செலவாணித் தொகை ரூ.1,24,492 கோடிகள். கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த திட்டச் செலவான ரூ. 9,21,921 கோடிகளில் பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசிற்கு கொடுத்தது ரூ. 5,15,556 கோடி. 2011 - 2012ம் ஆண்டு ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவ னங்கள் சுமார் 23 சதம் வளர்ச்சி யடைந்துள்ளன.இப்படி ஆண்டுக்காண்டு வளர்ச்சியும், லாபமும் பெற்று அரசுக்கு அள்ளிக் கொடுத்து வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப் படும்போது -ட அரசு விற்கும் பகுதிக்கான பங்காதாயம் அரசுக்குக் கிடைக்காமல் போகும்ட தனியாரின் பங்கு ஒரு கணிச மான அளவுக்கு வரும்போது பொதுத்துறை நிறுவனத்தின் நிர்வாகம் தனியார் கையில் போகும் ஆபத்து உள்ளது. ட தனியார் கட்டுப்பாடு அதிகரிக் கும்போது தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மீது தாக்குதல் ஏற்படும்.
நாட்டை பாதுகாக்கும் பொதுத்துறைகள்
2008ம் ஆண்டு உலகில் பெரும்பான்மையான நாடுகள் பொருளா தார மந்தத்தால் பாதிப்படைந்த போது இந்திய நாட்டின் பொருளா தாரத்தை தாங்கிப் பிடித்தது பொதுத்துறை நிறுவனங்களே, ஓஎன்ஜிசி,ஐஓசி, கெயில், பெல் போன்றவை இந்திய நாட்டின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் கம்பீரமாக செயல் பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும்.கூடுதல்மூலதனம் தேவை என்ற பெயரில் இப்படி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதுஎன்பது பின்வாசல் வழியாகமக்கள் சொத்தை தனியார் கையில் ஒப்படைப்பதாகும்.“பொதுத்துறை பங்குகளை விற்பது என்பது நம் தாய் திருநாட்டை விற்பதற்கு சமமாகும்”
- ஆர். எஸ். துரைராஜ்,திருநெல்வேலி.

முதலாளிகள் நலத்துறை!


தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய உழைப்பே வெல்லும்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார்.ஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும் ஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.புதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே தங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள் நிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட விண் ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே ஆய்வு செய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை ஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக முன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய வேண்டும்.
ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு, ஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில் பதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள் எதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத் துறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம், தொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க முடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும் முதலாளிகளும் வரவேற்கின்றனர்; தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றனர்.ஆய்வாளர் பணி என்பதன் இலக்கணம் என்ன? ஒரு அமைப்பில் விதிகளுக்கு உட்பட்டு எல்லொரும் இயங்குகின்றனரா என்று எப்போது வேண்டுமானாலும், பரிசோதித்துப் பார்ப்பதுதானே? இந்திய அமைப்பில் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு விதிகளை மதிக்கின்றன; இங்கே ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதையெல்லாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
முப்பதாண்டுகள் ஆகும் நிலையிலும், போபால் விஷவாயுக் கசிவின் அழிவுகள் இன்னும் மறக்கவிடாமல் துரத்துகிறதே... எல்லா விதிகளையும் வளைக்கும் தொழில் துறையின் பண அரசியல்தானே போபால் அழிவுக்குக் காரணம்? ஏற்கெனவே ஊழல் புற்றாகப் பரவிக் கிடக்கும் அதிகார அமைப்பில், சீர்திருத்தம் என்ற பெயரில் இன்னும் நூறு ஓட்டைகளைப் போட்டால் என்னவாகும்?ஒரு தொழில்சாலையை நடத்த தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன் என எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ, அதையெல்லாம் சலுகையில் பெறுகின்றனர்; புதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு மானியமும் பெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக இருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர். நாடு வாரிக் கொடுக்கிறது.
ஆனால், தொழில் அதிபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இப்படியெல்லாம் காட்டப்படும் சலுகையிலும், பரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத் தொழி லாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. அவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும் உரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால், தொழிலாளர் நலத் துறையின் பெயரை முதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு பகிரங்கமாக அதைச் செய்யட்டும்!
நன்றி : தி இந்து தமிழ், தலையங்கம் (அக். 25)

நேருவை விட கோட்சே நல்லவராம்! ஆர்எஸ்எஸ் சொல்கிறது

திருவனந்தபுரம், அக். 25-பாகிஸ்தான் பிரிவினைக்கும் காந்தி படுகொலை செய்யப்பட்டதற் கும் நேரு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், காந்தியை சுட்ட கோட்சே, நேருவை விட எவ்வளவோ மேலான வர் என்றும் கேரள ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரி’யில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுக் கட்டுரைக்கு கடும் கண் டனம் எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஆர்எஸ் எஸ்ஸின் பத்திரிகையான கேசரியில், காந்தியை பின்னால் இருந்து குத்தி யது யார்’ என்ற தலைப்பில் ஒரு கட்டு ரை வெளியிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் பி.கோபால கிருஷ்ணன் என்பவர் . இவர் பாஜக தலைவராவார். இவர் சாலக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிட்டவர். அக்கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டின் பிரிவினைக்கும் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும் நேருவே பொறுப்பேற்க வேண்டும். வர லாற்று ஆவணங்களையும் நாதுராம் வினாயக் கோட்சேயின் வாக்குமூலங்களையும் ஆய்வு செய்து பார்த்தால் யாரும் கோட்சேயின் நோக்கம் தவறு என்று கூற முடியாது. நேரு ஒரு சுய நலவாதி. பாகிஸ்தான் பிரிவினை பற்றிய முக்கிய உண்மைகளை காந்தியிடமிருந்து மறைத்தார்.
பாகிஸ்தான் தொடர்பாக இறுதியாக நடை பெற்ற விவாதங்களில் அவரைத் திட்டமிட்டுதனிமைப்படுத்தினார். நேருவை விட கோட்சே எவ்வளவோ மேலானவர். காந்தியை நேருக்கு நேராக இருந்துதான் கோட்சே சுட் டார், நேரு போல அவரை பின்னால் இருந்து கத்தியால் குத்தவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இக்கட்டுரை தொடர்பாக, உம்மன்சாண்டி அரசு கடும் கண்டனம் தெரி வித்ததோடு மாநில போலீஸ் தலைமை அதிகாரியிடம் விசாரணை செய்யவும் கேசரி பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸின் செய்தித் தொடர் பாளர் அபிஷேக் சிங்வி , வரலாற்றை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் போக்கு பாசிசத்தன் மை கொண்டதாகும் மிகவும் அபாயகரமானதாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக விமர்சித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் து.ராஜா, இது பாஜகவின் நோயுற்ற மனப்பாங்கை காட்டுகிறது; இக்கட்டுரையாளர் முழுமையான மனநோயாளிஎன்பதையும் காட்டுகிறது; இதுகட்டுரை ஆசிரியரான கோபாலகிருஷ்ணனின் தனிப்பட்ட கருத்தா அல்லதுகட்சியின் கருத்தா என்பதை பாஜக தலைமைதான் விளக்க வேண்டும். இவரைப்போன்றவர்களை எல்லாம்அந்த கட்சி எப்படி சகித்துக்கொள் கிறது என்பதையும் அந்த கட்சி விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பால் விலை கடும் உயர்வு லிட்டருக்கு ரூ.10 அதிகரிப்பு



சென்னை, அக். 25-பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி அரசு நிர்ணயித்துள்ளது என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த போது, அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் என 1.1.2014 முதல் உயர்த்தி வழங்கியது. அதே சமயத்தில் பாலின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்தச் சூழ்நிலையில், கறவைமாடுகளின் விலை, பசுந்தீவ னம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.
கொள்முதல் விலை
பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவுசங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்; எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும்.
விற்பனை விலை
விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்க ளின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும் போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும். பொதுவாக, பால்பண்ணைதொழிலில் நுகர்வோர்களிடமி ருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்திநிர்ணயிக்க வேண்டிய கட்டா யத்தில் அரசு உள்ளது.
அத்தியாவசியத் தேவைகளில் லாப-நஷ்ட கணக்கு பார்ப்பதா?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு
சென்னை, அக்.25-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-தமிழக அரசு ஆவின் பால் விலையை ரூ. 24-லிருந்து 34 ஆக உயர்த்தியுள்ளது. இது ஏறத்தாழ 40 சதவிகித உயர்வாகும். குழந்தைகள், நோயாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் தவிர்க்கவே முடியாத அத்தியாவசியப் பொருளாக பால் விளங்குகிறது. எனவே, பால் விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த விலை உயர்வை முழுமையாகக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.பால், மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளில் அரசாங்கம் லாப-நஷ்டக் கணக்கு பார்ப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்முதல் விலையையும் விற்பனை விலையையும் ஒப்பிட்டு “அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது; எனவே, 10 ரூபாய் விலை உயர்த்துகிறோம்” என்று அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது. பால் கொள்முதல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்று மானியம் அளிக்க வேண்டும். மேலும், ஊழல், முறைகேடுகள், நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றை களைந்தால் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட முடியும். எனவே, தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள பால் கட்டண உயர்வை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

சனி, 25 அக்டோபர், 2014

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்: பேச்சில் உடன்பாடு

கடந்த 52 நாள்களாக நடைபெற்று வந்த நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை (அக்.24) இரவு வாபஸ் பெறப்பட்டது.ஒப்பந்தத் தொழிலாளர்களின் தின ஊதியத்தை ரூ.370-லிருந்து உடனடியாக ரூ.55 அதிகரிப்பது, அடுத்த ஆண்டு நவம்பர் முதல் மேலும் ரூ.55 அதிகரிப்பது என உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது, சம்பளத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து 52 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, சென்னை சாஸ்திரி பவனில் வெள்ளிக்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள், நெய்வேலி அனல்மின் நிலைய நிர்வாகத்தினர் ஆகியோரோடு அரசு சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை பேச்சு நடத்தினர். தொமுச, அண்ணா தொழிலாளர் சங்கப் பேரவை, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, தமிழக வாழ்வுரிமைச் சங்கம் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.உடன்பாடு: பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்போதுள்ள தின ஊதியத்தை ரூ.370-லிருந்து ரூ.480-ஆக (ரூ.110 உயர்வு) உயர்த்த முடிவு செய்யப்பட்டது.