வெள்ளி, 24 அக்டோபர், 2014

பொலிவியாவைப் பாருங்கள் மோடி முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியாவைப் பின்பற்றுமா உலகம்?
லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஈவோ மொராலிஸ் 60 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஈவோ மொராலிஸ் பொலிவியாவின் பெரும்பான்மையான, ஆனால் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்து தோன்றிய முதல் அதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களும் பொலிவியாவைக் கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கி, தங்கள் கைப்பாவை அரசுகள் மூலம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர்.
அந்தசகாப்தத்தை 2005-ல் முடிவுக்குக் கொண்டுவந்து, பெரும் மக்கள் ஆதரவுடன் மொராலிஸும், அவர் தலைமையிலான சோஷலிஸத்தை நோக்கிய இயக்கமும் வெற்றி கண்டன.முந்தைய இருண்ட சகாப்தத்தில் பொலிவிய மக்கள் கொடும் இழப்புகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளானார்கள். அனைத்து வளங்களும் பெரும் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டன. நவதாராளமயம் (நியோலிபரலிஸம்) தலைவிரித்தாடியது. சந்தையின் மகிமை தாரக மந்திரமாக ஓதப்பட்டது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. ஏழ்மையும் கொள்ளையும் எல்லை மீறியபோது, மக்கள் இயக்கங்கள் வெடித்துக் கிளம்பின.
தண்ணீருக்கான போராட்டம், எரிவாயுவைக் காப்பதற்கான போராட்டம் என்று நாடு கொதித்தது. அந்தக் கொந்தளிப்பின் குழந்தையாக, அதன் தலைவராக மொராலிஸ் எழுந்தார்.2009-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம்பிரகடனப் படுத்தப்பட்டது. அதில் இந்தியாவையும், மற்ற பல நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் சித்தாந்தமான நவதாராளமயம் கடுமையாக எதிர்க்கப்பட்டு, பொருளாதார நிர்வாகத்தில் அரசுக்குத் தலைமை ஸ்தானம் அளிக்கப்பட்டது. சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன. ஏழ்மை ஒழிப்புக்கான திட்டங்கள் முன்னுரிமை பெற்றன.
மக்களுக்காகத்தான் நாடு
கடும் ஏழ்மையிலும், எழுத்தறிவின்மை யிலும் ஆழ்ந்து கிடந்த நாடு பொலிவியா. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏழ்மை ஒழிப்பை முன்னிறுத்தி, வியத்தகு வளர்ச்சியையும், அனைத்து மக்களும் நலனடையும் வகையிலான ஜனநாயகத்தையும் நிறுவி அந்த நாடு வெற்றி கண்டிருக்கிறது. சோஷலிஸத்தை நோக்கித் திரும்பிய புதிய எழுச்சிப் பாதையினால்தான் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாயிற்று. மொராலிஸின் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2006-ல் இருந்ததைவிட, 2012-ல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதனினும் மகத்தானது ஏழ்மை ஒழிப்பில் அதன் சாதனை. ஏற்றத்தாழ்வுகளும் குறைந்து வருகின்றன.
சமுதாய ஏணியின் உச்சியில் இருந்த 20 சதவீதத்தினரின் கையில் இருந்த தேச வருமானம் குறைந்து, கீழ்த்தட்டில் உள்ள 20 சதவீதத்தினரின் பங்கு அதிகரித்திருக்கிறது. மிகுந்த ஏழ்மையில் வாடிய மக்களுக்கு நாட்டின் செல்வத்தின் கணிசமான பகுதியை மாற்றி அளிப்பதில் பொலிவியா வெற்றி கண்டிருக்கிறது என்று ஐநா சபையின் வளர்ச்சி அமைப்பு (யூ.என்.டி.பி.) பாராட்டுகிறது. பணவீக்கம் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, லத்தீன் அமெரிக்காவிலேயே குறைந்த பணவீக்கம் உடைய நாடாக பொலிவியா மாறியிருக்கிறது.
இந்தப் பொருளாதார வளர்ச்சியின் முதல் ஆயுதமாக அமைந்தது அரசுடமையாக்கும் கொள்கை. பொலிவியாவின் பெரும் வளமான இயற்கை எரிவாயு அதற்கு முன் அமெரிக்க, உள்ளூர் பெருமுதலாளிகளின் வசம் இருந்தது. அது 2006-லிருந்து படிப்படியாக அரசுடமையாக்கப்பட்டது. விளைவு: உற்பத்தி இரு மடங்குக்கும் அதிகமாயிற்று. தொடர்ந்து, இத்தாலிய முதலாளிகளின் கையிலிருந்த தொலைத்தொடர்பு சாதனத் தொழில், தகரம், துத்தநாகம் போன்றவற்றின் உற்பத்தி அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.
ஏற்றம் பெறும் வாழ்க்கை
அத்துடன், அடித்தட்டு மக்கள் அனைவரும் பயனடையும் பிரம்மாண்டமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ வசதிக்கும், பிரசவத்துக்குப் பின் தாய்-சேய் இருவர் நலனுக்குமான பண உதவி வழங்கியது; கல்விக்கான பெரும் நிதி ஒதுக்கீடு செய்தது; தோழமை நாடுகளான கியூபா, வெனிசுலாவின் உதவி யுடன், அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெறும் திட்டங்கள் உருவாக்கியது; 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கண்ணியமான ஓய்வூதியம் வழங்கியது ஆகியவை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நிலப்பட்டாக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. அதேபோல் பெண்களுக்கு பொலிவியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பாராட்டியாக வேண்டும். நாடாளுமன்றத் தில் 28சதம் பெண்கள்; செனட்டில் 47 சதம் பெண்கள்; அமைச்சரவையில் பாதி (10 பேர்) பெண்கள்; அதில் மூவர் பழங்குடியினர்.
முழு வேலையுடைமை
கல்விக்காக மொராலிஸ் மேற்கொண்ட இயக்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பொலிவியா எழுத்தறிவின்மையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. அரசு பிரம்மாண்டமான கட்டமைப்புத் திட்டங்களைப் பொதுத்துறையின் வழியாக மேற்கொண்டதன்மூலம் பொலிவியா அநேகமாக முழு வேலையுடைமையை அடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மக்கள் நலனுக்காகப் பெருமளவு செலவு செய்யும் அரசு, நமக்கெல்லாம் உபதேசம் செய்வதைப் போல் சிக்கனம் பிடிக்கும் அரசு அல்ல. இத்தனைக்குப் பின்னும், இன்று உலகிலேயே அதிக சதவீதம் நிதி சேமிப்பு கொண்ட நாடு என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) பொலிவியாவுக்குச் சான்றிதழையும் பாராட்டுதலையும் வழங்கியிருக்கிறது. ஆனால், பொலிவியஅரசு அந்த அமைப்பைச் சந்தேகத்து டன் பார்த்து, இன்னும் அதிகமாகச் செலவழிக்கலாமோ என்று யோசித்துவருகிறது. இவை அனைத்துமாகச் சேர்ந்து, அரசு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
முதலாளித்துவ இந்தியா
இந்தியா இன்று கடைப்பிடிக்கும் பாதை இதற்கு எதிர்மறையானது என்பது சொல்லத்தேவையில்லை: கடைந்தெடுத்த நவதாராளமயம், அனைத்தும் தனியார் மயம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றல்,அந்நிய, உள்நாட்டுப் பெரும் முதலாளிகளின் தேவைக்கேற்ற கொள்கைகள், வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, உலகிலேயே அதிக அளவில் தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, சுகாதார அமைப்புகள், அரசின் முதலீட்டையும், செலவையும் குறைக்கும் சிக்கனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.லத்தீன் அமெரிக்கா முழுவதையும் தன் உடும்புப் பிடியில் வைத்திருந்த அமெரிக்காவின் பெரும் எதிர்ப்பு களுக்கு இடையில்தான் பொலிவியாவின் சாதனைகள் சாத்தியமாகியிருக்கின்றன.
சமீபத்தில் நடந்த தேர்தலிலும் மொராலிஸை எதிர்த்த வேட்பாளர், அமெரிக்காவின், பெரும் முதலாளிகளின் பிரதிநிதியாகத்தான் போட்டியிட்டார். நாட்டின் பல வளங்களும் நிறுவனங்களும் இன்னும் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டின் ஊடகங்கள் இன்னும்வலதுசாரி சக்திகளான பெரும் முதலாளிக ளின் கையில் தான் இருக்கிறது. அவையெல்லாம், மொராலிஸுக்கு எதிரான பிரச்சாரத் தில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனால்,பெருநிறுவன ஊடகங்கள் செய்யும் பொய்ப்பிரச்சாரத்துக்கு மக்கள் வீழ்ந்துவிடுவதில்லை.
கொடிய எதிரி
வட அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கொடும் கொலைப் பிடியிலிருந்தும், பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் தப்பியதால்தான், தன் நாட்டை உயர்த்த முடிந்தது என்று மொராலிஸ் கூறுகிறார். “முதலாளித்துவம் மனித சமுதாயத்தின், சுற்றுச்சூழலின், இந்த பூமியின் கொடிய எதிரி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மொராலிஸ் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.அத்துடன், பொலிவியாவின் மிகப் பெரும்பலம் லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றிடையே தோன்றியிருக்கும் அற்புதமான ஒருமைப்பாடும் தோழமையும். இன்று கியூபா, வெனிசுலா, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, சிலி உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இடதுசாரி புரட்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
தங்களுக்குள்ளாக வலிமைமிக்கக் கூட்டு அமைப்பையும் அந்த நாடுகள் உருவாக்கியுள்ளன. அதன் ஒரு அத்தியாயம்தான் பொலிவியாவின் எழுச்சியும், மக்கள் ஆதரவு அரசியலும். மொராலிஸ் வணங்கும் முன்னோடிகள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும், சமீபத்தில் மறைந்த வெனிசுலாவின் சாவேஸும்.புகழ் பெற்ற அரசியல் சிந்தனையாளரும், உலக ஆன்மாவின் குரல் என்று போற்றப்படுபவருமான நோம் சாம்ஸ்கி சொல்கிறார், “பொலிவியா தனது சிறந்த முன்னுதாரணத்தினால், உலக முதலாளித்துவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கிறது.” உலக முதலாளித் துவத்துக்கு அச்சுறுத்தல்; நம்மைப் போன்ற நாடுகளின் மக்களுக்கு வழிகாட்டி.-
கட்டுரையாளர், வே.வசந்திதேவி கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்நன்றி : தமிழ் இந்து (21-10-14)

கருத்துகள் இல்லை: