திங்கள், 27 அக்டோபர், 2014

பொக்கிஷத்தை திறந்துவிடும்...பொதுத்துறை நிறுவனங்கள் நவ இந்தியாவின்நவீன திருக்கோயில்கள்- ஜவஹர்லால் நேருஇந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் 10 சத பங்குகளையும், எண்ணெய்மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 5 சத பங்குகளை யும், தேசிய நீர் மின் சக்தி கழகத் தின் 11.36 சத பங்குகளையும் விற்பனை செய்ய பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மூன்று நிறுவன பங்கு களும் திட்டமிடப்பட்டபடி விற்கப் பட்டால், இந்த விற்பனையின் மூலம் ரூ. 45000 கோடிக்கு மேல்அரசு திரட்டிட முடியும். இது பட்ஜெட்டில் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்ட திட்ட மிடப்பட்ட ரூ. 43,425 கோடிக்கும் அதிகமான தொகை. இந்த மூன்று நிறுவனங்களும் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி இரும்பு உற்பத்தியில் முன்னிலை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 5 சத பங்குகளையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பதற்கான ஏற்பாடுகளை பாஜகஅரசு செய்து வருகிறது. மேலும்கெயில் மற்றும் பெல் போன்ற மதிப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் இந்த பங்கு விற்பனை வரிசையில் உள்ளன.
அகல திறக்கப்படும் கதவு
இந்திய நிதி அமைச்சகம் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 2017 ஆகஸ்ட் 21க்குள் தங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சத பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றிருக்க வேண் டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 25 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், 9 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 1 மாநில பொதுத் துறை நிறுவனமும் உள்ளது. மேலும், இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் 16 பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்னா என்ற தகுதியை பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் தங்கள் நவரத்னா தகுதியை தக்க வைக்கவேண்டுமென்றால், அந்நிறுவ னங்கள் பங்கு விற்பனைக்காக தங்கள் நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மோடி அரசு பிறப்பித்துள்ளது. “நாங்கள் கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறோம். நீங்கள் இந் திய மக்களின் சொத்தை அள்ளிச் செல்லுங்கள்” என்று தனியார் நிறுவனங்களை அழைக்கிறது மோடி அரசு.
பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து………
பொதுத் துறை பங்கு விற்பனை மூலம் பெறப்படும் பணத்தை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலம் சார்ந்த துறைகளுக்கு செலவிடுவதாக அரசு கூறுகிறது. ஆனால், கல்வி மற்றும் சுகாதாரத் திற்கான செலவு என்பது ஒவ் வொரு ஆண்டும் நிகழும் தொடர் செலவே அன்றி ஒரே ஒரு தடவைநடக்கும் செலவு அல்ல. அப்படி யிருக்க இச்செலவிற்கு ஒரு தடவை விற்றுக் கிடைக்கும் பணத்தை ஒதுக்குவது எப்படிபொருத்தமானதாக இருக்கும்? ஆகவே, அடுத்தடுத்த ஆண்டுக ளில் இந்த செலவினங்களை காரணம் காட்டி, அரசு மீண்டும் மீண்டும் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை நோக்கியே நகரும். அது மட்டுமில்லாமல், அப்படி போலிக் காரணம் காட்டிக் கொண்டு நகரும் அரசு 49 சதம் என்பதில் நிற்கப்போவதில்லை.
இதனால், ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங் களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடு படும் நிலைக்குச் சென்றுவிடும் அபாயம் உள் ளது. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு செய்துள்ள முதலீடுகளில் இருந்து அரசுக்குக் கிடைக்கும் பங்கு ஆதாயம் என்பது ஒவ்வொருஆண்டும் அரசுக்குக் கிடைக்கும் தொடர் வருமானம் ஆகும். ஒரு தடவை கிடைக்கும் வருமானத்திற்காக ஒவ்வொரு ஆண்டும்இந்த பொதுத்துறை நிறுவனங் களிலிருந்து கிடைக்கும் வருமா னத்தை இழப்பது என்பது தினம் ஒரு பொன் முட்டையிட்டுக் கொண்டிருக்கும் வாத்தை அறுத்து அதிலிருந்து ஒரு முட்டையை மட்டும் எடுப்பதற்குச் சமமாகும். பொருளாதாரரீதியாகவும் இப்படி உறுதியாகக் கிடைக்கும் தொடர் வருமானத்தை இழப்பது என்பது புத்திசாலித்தனமானமுடிவாக இருக்க முடியாது.
அள்ளிக் கொடுக்கும் காமதேனு
மத்திய பொதுத்துறை நிறுவ னங்கள் மத்திய அரசுக்கு வரிகள், பங்கு ஆதாயம் மற்றும் வட்டி என்ற வகையில் 2011-2012ம் ஆண்டு கொடுத்த தொகை ரூ. 1,60,801 கோடி. அந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நிய செலவாணித் தொகை ரூ.1,24,492 கோடிகள். கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த திட்டச் செலவான ரூ. 9,21,921 கோடிகளில் பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசிற்கு கொடுத்தது ரூ. 5,15,556 கோடி. 2011 - 2012ம் ஆண்டு ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவ னங்கள் சுமார் 23 சதம் வளர்ச்சி யடைந்துள்ளன.இப்படி ஆண்டுக்காண்டு வளர்ச்சியும், லாபமும் பெற்று அரசுக்கு அள்ளிக் கொடுத்து வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப் படும்போது -ட அரசு விற்கும் பகுதிக்கான பங்காதாயம் அரசுக்குக் கிடைக்காமல் போகும்ட தனியாரின் பங்கு ஒரு கணிச மான அளவுக்கு வரும்போது பொதுத்துறை நிறுவனத்தின் நிர்வாகம் தனியார் கையில் போகும் ஆபத்து உள்ளது. ட தனியார் கட்டுப்பாடு அதிகரிக் கும்போது தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மீது தாக்குதல் ஏற்படும்.
நாட்டை பாதுகாக்கும் பொதுத்துறைகள்
2008ம் ஆண்டு உலகில் பெரும்பான்மையான நாடுகள் பொருளா தார மந்தத்தால் பாதிப்படைந்த போது இந்திய நாட்டின் பொருளா தாரத்தை தாங்கிப் பிடித்தது பொதுத்துறை நிறுவனங்களே, ஓஎன்ஜிசி,ஐஓசி, கெயில், பெல் போன்றவை இந்திய நாட்டின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் கம்பீரமாக செயல் பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும்.கூடுதல்மூலதனம் தேவை என்ற பெயரில் இப்படி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதுஎன்பது பின்வாசல் வழியாகமக்கள் சொத்தை தனியார் கையில் ஒப்படைப்பதாகும்.“பொதுத்துறை பங்குகளை விற்பது என்பது நம் தாய் திருநாட்டை விற்பதற்கு சமமாகும்”
- ஆர். எஸ். துரைராஜ்,திருநெல்வேலி.

கருத்துகள் இல்லை: