சென்னை,
அக். 25-பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு
செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10
ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி
அரசு நிர்ணயித்துள்ளது என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆவின் நிறுவனத்தை
மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான
விலையில் கிடைப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு
வருகிறது.பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர
வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த போது,
அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3
ரூபாய் என 1.1.2014 முதல் உயர்த்தி வழங்கியது. அதே சமயத்தில் பாலின்
விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்தச் சூழ்நிலையில்,
கறவைமாடுகளின் விலை, பசுந்தீவ னம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை,
இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து,
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால்
உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.
கொள்முதல் விலை
பால் விற்பனை,
கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால்
உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால்
நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு;
கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில்
உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள்
பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவுசங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும்
வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23
ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய்
உயர்த்தவும்; எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31
ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு
முடிவு செய்துள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல்
அமலுக்கு வரும்.
விற்பனை விலை
விற்பனை விலையை பொறுத்தவரையில்,
தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்க ளின் பால் விற்பனை
விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும் போது, ஆவின் பால் விற்பனை
விலை மிகவும் குறைவாகும். பொதுவாக, பால்பண்ணைதொழிலில் நுகர்வோர்களிடமி
ருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80
விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.எனவே, பால்
கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய,
சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய்,
அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்திநிர்ணயிக்க
வேண்டிய கட்டா யத்தில் அரசு உள்ளது.
அத்தியாவசியத் தேவைகளில் லாப-நஷ்ட கணக்கு பார்ப்பதா?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு
சென்னை,
அக்.25-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-தமிழக அரசு ஆவின் பால்
விலையை ரூ. 24-லிருந்து 34 ஆக உயர்த்தியுள்ளது. இது ஏறத்தாழ 40 சதவிகித
உயர்வாகும். குழந்தைகள், நோயாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் தவிர்க்கவே
முடியாத அத்தியாவசியப் பொருளாக பால் விளங்குகிறது. எனவே, பால் விலை உயர்வை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்
கண்டிக்கிறது.
இந்த விலை உயர்வை முழுமையாகக் கைவிட வேண்டுமென்று
வலியுறுத்துகிறது.பால், மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளில்
அரசாங்கம் லாப-நஷ்டக் கணக்கு பார்ப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்முதல்
விலையையும் விற்பனை விலையையும் ஒப்பிட்டு “அரசாங்கத்திற்கு நஷ்டம்
ஏற்படுகிறது; எனவே, 10 ரூபாய் விலை உயர்த்துகிறோம்” என்று அரசு கூறும்
காரணத்தை ஏற்க முடியாது. பால் கொள்முதல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல்
செலவை அரசே ஏற்று மானியம் அளிக்க வேண்டும். மேலும், ஊழல், முறைகேடுகள்,
நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றை களைந்தால் ஆவின் நிறுவனம் சிறப்பாக
செயல்பட முடியும். எனவே, தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள பால் கட்டண உயர்வை
கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில
செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக