போலீஸ் நடவடிக்கை யினால் மாணவிகள் வருத்தம்:
உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிறகு மாணவிகள் ரஷிதா, சுகன்யா, ஷர்மிளா, மஞ்சு உள்ளிட்டோர் கூறியதாவது:கல்லூரியில் வகுப்புகள் பாதிக்கப்படாமல் படித்துக்கொண்டே நாங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்கள் போராட்டம் நடத்தியும் யாரும் எங்களை அழைத்து பேசவில்லை. மாறாக எங்களை மிரட்டுவதிலேயே குறியாக உள்ளனர்.நேற்று இரவு உணவை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்ததால் மாணவிகள் பட்டினி கிடக்க நேரிட்டது. நள்ளிரவு 2 மணி அளவில் மாணவிகளின் பெயர் விலாசங்களை கேட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் என காவல் துறை மிரட்டியது அதிர்ச்சி அளித்தது. மேலும் எங்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்த போது காவல்துறையினர் ஒருமையில் பேசினர், சிலரைத் தாக்கவும் செய்தனர். தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்தின் மூலமாகவும் போராடத் திட்டமிட்டுள்ளோம். பிரச்சனையை மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் உள்ளோம் என்று தெரிவித்தனர்.கே.பாலகிருஷ்ணன் புகார்:கடலூர் கே.என்.சி கல்லூரியில் நள்ளிரவு நேரத்தில் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்ட எஸ்.பி ராதிகாவிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மேலும் துணை கண்காணிப்பாளரிடமும் பேசினார். அதனை அடுத்து போலீசார் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தினர்.காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கே.சுனில்குமார், மாவட்ட செயலாளர் டி.அரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.