சனி, 25 அக்டோபர், 2014

க்ளீன் இந்தியா!

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம்; இதில் ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்பட்டால், சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்; தேவைப்பட்டால், புதிய சட்டத்தை இயற்றுவோம். இது ஒரு தலையாயப் பிரச்சனை என்பதால், இதற்கு முன்னுரிமை கொடுப்போம்’-நாடாளு மன்றத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி இது.`கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், ஒவ்வோர் இந்தியருக்கும் மூன்று லட்சம் ரூபாய் வழங்கலாம்’ என, தனது பிரச்சாரத்தில் முழங்கியவர் நரேந்திர மோடி. `வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்’ என எத்தனையோ முறை நாடாளுமன்றத்தையே முடக்கிய கட்சிதான் பாஜக. 

ஆனால், அது மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து, கடும் அதிர்ச்சி ரகம்.`கறுப்புப் பணம் தொடர்பாக வெளிநாடு களிடம் இருந்து பெற்ற தகவல்களையோ அல்லது நபர்களின் பெயர்களையோ பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படிச் செய்தால், சம்பந்தப் பட்டவர்கள் உஷார் ஆகி விடுவார்கள். மேலும் அது, சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும்‘ என்கிறது மத்திய அரசு. கடந்த பல ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டுச் சலித்த அதே சப்பைக்கட்டு பதில். சொல்லும் வாய்கள்தான் வேறு வேறு. அப்போது காங்கிரஸ்; இப்போது பாஜக.வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்குவது நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்தையே முடக்கிப்போடும் கொடும் செயல். அதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் தேவை. தேர்தலுக்கு முன்னர் வாக்கு வாங்க ஒரு பேச்சு; தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி செய்ய வேறு பேச்சு என்ற மோடி மஸ்தான் வேலை, ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது. 

இப்போது நமது தேவை மிகக் கடுமையான நடவடிக்கை. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். பதுக்கப்பட்ட பணத்தை மீட்டு, பதுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டும். சொன்னதைச் செய்யுங்கள் மோடி. நமக்குத் தேவை நாவரசு அல்ல. நல்லரசு!வீதிகளில் படிந்துள்ள குப்பைகளை அகற்ற `க்ளீன் இந்தியா’ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தேசத்தின் நிர்வாக அமைப்பில் படிந்துள்ள ஊழல் என்னும் பெருங்கறையைத் துடைத்து எறிய களம் இறங்க வேண்டியதே, மிக, மிக, மிக, மிக முக்கியம்!நன்றி : ஆனந்தவிகடன் (அக்.29) தலையங்கம்
நன்றி தீக்கதிர் 25.10.2014

கருத்துகள் இல்லை: