செவ்வாய், 8 ஜூலை, 2014

நரி செத்தாலும் கண் கோழி மீது



இந்தியாவில் இருபெரும் அரசியல் கட்சிகளின் வாக்குகளை (பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ்) சேர்த்தாலும் 50 சதவீதத்தை சிரமப்பட்டுத் தான் தொடவேண்டியுள்ளது என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்த விவாதத்தின் தேவையை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.இதை ஏன் ஓர் தொழிற்சங்கம் விவாதிக்க வேண்டியிருக்கிறது என்ற சொல்லாடல்களுக்குள் எல்லாம் அரசியல் இருக்கிறது. நிலையான ஆட்சி என்கிற முழக்கத்திற்கு பின்புலத்தில் ஆளும் வர்க்கங்களும் கார்ப்பரேட்களும் நினைப்பதை அப்படியே அவசரத்தோடு நிறைவேற்ற முடியுமென்ற நோக்கமே உள்ளது.
உழைப்பாளி மக்களின் குரலோ, மாற்றுக் கருத்தோ முடிவெடுத்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதே உள்ரகசியம்.இன்சூரன்ஸ் துறையின் அனுபவத்திற்கு வருவோம். 1994ல் மல்கோத்ரா அறிக்கை வந்தவுடன் அதனை அரசு ஏற்பதாக உடனே அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அறிவித்தார். அன்று மட்டும் நரசிம்மராவ் அரசுக்கு முழுப் பெரும்பான்மை இருந்திருந்தால் ஒரு வேளை பன்னாட்டு மூலதனம் எவ்வித வரம்புமில்லாமல் உள்ளே நுழைந்திருக்கும்,
50 சதவீதம் எல்.ஐ.சி. பொதுத்துறை இன்சூரன்ஸ் பங்குகள் விற்பனையாகியிருக்கும். 1995-1997ல் தேவகவுடா-குஜ்ரால் பிரதமர்களாக இருந்த காலத்திலும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் சிதம்பரத்தால் நிறைவேற்ற முடியவில்லை. பின்னர் வந்த வாஜ்பாய் அரசு சட்டத்தை 1999ல் நிறைவேற்றினாலும் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தொட முடியவில்லை. 26 சதவீதம் என்ற வரையறை அந்நிய முதலீட்டிற்கு விதிக்கப்பட்டது. காரணம் தனிப் பெரும்பான்மை இல்லை.
ஐ.மு. கூட்டணியின் இரண்டு அரசாங்கங்களும் 2014 வரை அந்நிய முதலீட்டை உயர்த்த முடியவில்லை இது ஒரு அனுபவம். உடைந்த தீர்ப்புகளால் ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களும் உடைந்தன. பொதுத்துறையை, உழைப்பாளி மக்களின் நலன்களை ஓரளவு உடையாமல் காப்பாற்ற முடிந்தது.இது ஏதோ, நாடாளுமன்ற எண்ணிக்கை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மக்களின் குரல் ஒலிக்கிற வாய்ப்பு இருப்பதால் சாத்தியமாகிற ஒன்று. அரசியலில் Churning Process என்பார்கள், மாற்றை மக்கள் தேடும் போது புதிய கட்சிகள் உருவாகும். இருக்கிற கட்சிகள் உடையும் புதிய அரசுகள் வரும் இதில் மக்கள் அடையாளம் காண்கிற மாற்றை சரியென்றோ, தவறென்றோ நாம் விவாதிக்கலாம் ஆனால் பிரச்சனை அதுவல்ல. வாக்குச்சாவடிக்குள் அவர்கள் அழுத்துகிற பட்டனும், அவர்களின் விரலில் வைக்கப்படும் மையும் மட்டுமல்ல தேர்தல். அதற்கும் பின்னர் அவர்களின் கருத்து, விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதற்கு இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறை முழுமையாக இடம் தருகிறதா! என்பதே விவாதம்.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குறை கூறுகிற நோக்கம் உடையது அல்ல. இந்திய மக்களின் போராட்டத்தில், ஒற்றுமையால் விளைந்துள்ள பயிர். இன்னும் அப்பயிர் வளர, முழுமையான முதிர்வை அடைய விவசாயி காவல்காத்து, தண்ணீர்விட்டு பூச்சிக் கொல்லி போட்டு உரமிட்டு வளர்ப்பதில்லையா!அப்படியொரு விவாதம் எழுவதும் மக்கள் நலனை, பொதுத்துறையை, எல்.ஐ.சியைப் பாதுகாக்க உதவும்.மோடியின் புதிய அரசு புத்துணர்வைத் தருவதாகவும் இன்சூரன்ஸில் துணிச்சலாய் அந்நிய முதலீடு உயர்த்தப்பட வேண்டுமென்றும் அமெரிக்க இந்திய பிசினஸ் கவுன்சில் சேர்மன் கூறியுள்ளார். (இந்து பிசினஸ் லைன் 6.6.2014), காங்கிரசின் முன்னணித் தலைவர் முரளி தியோரா இன்சூரன்ஸ் துறையில் முதலீட்டை 74 சதவீதம் வரை உயர்த்த வேண்டுமென புதிய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நரி செத்தாலும் கண் கோழி மீது தான் என்பார்கள். தன் கட்சி தோற்றாலும், பாசம் பன்னாட்டு மூலதனம் மீதுதான் என்பதை தியோரா நிருபிக்கிறார். இவர்தான் 1999ல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த போது அதற்குள் லாபி செய்து இன்சூரன்ஸ் மசோதாவை ஆதரிக்க வைத்தவர். நாடாளுமன்ற உள்ளடக்கம் பாருங்கள்! 49 சதவீத அந்நிய முதலீட்டையே ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றம் ஏற்காத போது 74 சதவீதம் பற்றி பேசுவதற்கான தைரியத்தைத் தருகிறது. தீர்ப்பு என்றும் உடைவதேயில்லை! அதை உடையாமல் பாதுகாக்கவே இவ்விவாதம் தேவைப்படுகிறது!புதிய அரசு மக்களின் தீர்ப்பைச் சிதைக்காது செயல்பட வேண்டுமென்பது நமது விழைவு.-
நன்றி: உதயம்

கருத்துகள் இல்லை: