திங்கள், 30 டிசம்பர், 2013

பயங்கர வங்கியின் நூறாண்டு!

அது 1910ம் ஆண்டு.சக்திவாய்ந்த 7 பெரும் பணக்காரர்கள் ரகசியமாக சந்தித்தார்கள். அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் இந்த சந்திப்பு நடந்தது. ராக்பெல்லர், ஜே.பி.மோர்கன், ரோத்ச்சைல்டு ஆகிய மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் முதலாளிகள்தான் அவர்கள்.சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள்.

இந்த மூன்று பெரும் முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அடுத்த 3 ஆண்டுகளில் உதயமானதுதான் இன்றைக்கு ‘பெட் ரிசர்வ்’ என்று ஊடகங்களால் புகழ்ந்து தள்ளப்படுகிற அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி.அரசாங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத, முற்றிலும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே இப்படி ஒரு வங்கியை உருவாக்குவதற்கு, அன்றைய தினம் அமெரிக்காவின் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற போதிலும், ஜனாதிபதி உட்ரோ வில்சன் நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்தார். பணக்காரர்களின் நாடாளுமன்றம் மிகப் பெரிய விவாதம் இல்லாமல், 1913ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாள் முன்பு நள்ளிரவில் இதற்கு ஒப்புதல் அளித்தது.

அமெரிக்கர்களின் தலைவிதியை மட்டுமல்ல, பிற்காலத்தில் ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் தனது காலடியின் கீழ் கொண்டுவரப் போகும் பெடரல் ரிசர்வ் ஆக்ட் என்ற அந்த மசோதாவை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு செல்லும் அவசரத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து பார்க்காமலேயே கைதூக்கி நிறைவேற்றினார்கள்.அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம்.முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது.

‘நான் மிகவும் சோகமான மனிதனாக இருக்கிறேன். தெரிந்தே எனது நாட்டை நாசமாக்கிவிட்டேன். ஒரு மாபெரும் தொழில்வள நாடான அமெரிக்கா முற்றிலும் வங்கிக் கடன் முறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக மாறுவதற்கு காரணமாகிவிட்டேன். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் இப்போது வெகுசில தனிநபர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த உலகிலேயே ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிற, சுதந்திரமான கருத்துக்களுடன் செயல்பட முடியாத, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உறுதிமொழிகள் அளிக்க முடியாத, முற்றிலும் சில ஆதிக்க மனிதர்களால் வழிநடத்தப்படுகிற அரசாங்கமாக அமெரிக்க அரசாங்கம் மாறிவிட்டது...’ என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதே உட்ரோவில்சன் எழுதினார்.1860களில் அமெரிக்காவின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.

அப்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, வங்கிகளை நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வங்கி நடத்துபவர்களுக்கு வட்டி என்ற பெயரில் பெருவாரியான பணம் போவதை அவர் தடுத்து நிறுத்தினார். லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்கள் நடமாடும் வீதிகளிலிருந்த நிதி அதிகாரங்கள் முற்றிலும் பெருமுதலாளிகள் குடி கொண்டிருக்கும் வால்ஸ்டிரீட் எனும் பணக்கார வீதிக்கு மாறியது.அங்கிருந்தே இன்றைக்கு உலகம் முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார யுத்தம் உலக நாடுகள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மனிதகுலத்தின் மீது நிதியுத்தம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. டாலர் எனும் பணத்தின் மூலம் உலகம் முழுவதும் சந்தையை கட்டுப்படுத்துகிற பெடரல் ரிசர்வ் எனும் அமெரிக்காவின் மத்திய வங்கி, இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறது.

2013 டிசம்பர் 23ம்தேதியன்று பெடரல் ரிசர்வ் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிதித் துறையில் மிகப் பெரும் போரை கட்டவிழ்த்துவிட்டது பெடரல் ரிசர்வ். உலகப் பொருளாதாரங்களின் லாபங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்துக் கொண்டது; கோடிக்கணக்கான மக்களின் உழைப்பையெல்லாம், விலைவாசியை உயர்த்தி சுரண்டிக் கொண்டது.இதைத்தான் நிதித்துறை தொடர்பான வரலாற்று அறிஞர் கரோல் குய்க்லி, தனது ‘துயரமும் நம்பிக்கையும்‘ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நிதி மூலதனத்தின் அடிப்படையில் இயங்குகிற இன்றைய முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் பரப்பி வருகிறது;

உலகம் முழுவதும் உள்ள நிதிக் கட்டமைப்பை சில குறிப்பிட்ட தனியார் முதலாளிகளின் கைகளுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசியல் கட்டமைப்பையும் தகர்க்கவோ அல்லது தனக்குச் சாதகமாக மாற்றவோ முயற்சிக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கிடையே நடக்கிற சந்திப்புகளும், ரகசிய ஒப்பந்தங்களும், இந்த வங்கிகளது தலைவர்களின் மாநாடுகளும் இதை நோக்கியே பயணப்படுகின்றன. இவர்களை பொறுத்தவரை பணத்தின் சக்தியே உயர்ந்தது; அதுவே உலகம் முழுவதும் பொருளாதாரங்களை, வணிகத்தை, அரசியலை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தை கொண்டிருக்கிறது’.

பெடரல் ரிசர்வ் போலவே இந்த உலகில் சக்திவாய்ந்த மேலும் 3 வங்கிகள் உள்ளன. அவை பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய சென்ட்ரல் பேங்க் மற்றும் பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவையே. இந்த 4 வங்கிகளுக்கும் தலைமை அதிகாரி போல சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச வங்கி (பிஐஎஸ்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கப் பெருமுதலாளிகளது தலைமை வங்கியாக, அவர்களது சட்டவிரோத பணத்தையெல்லாம் பாதுகாக்கிற வங்கியாக சுவிஸ் வங்கி செயல்படுகிறது.சட்டவிரோத பணத்தைப் பாதுகாக்க ஒரு சுவிஸ் வங்கி, சட்டவிரோதத்தை அமலாக்குகிற மைய வங்கியாக பெடரல் ரிசர்வ் என இந்த பூமியையே இரண்டு வங்கிகள்தான் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

இவை நினைத்தால் உலக நாடுகளின் பொருளாதாரங்களை ஆக்கவும் முடியும்; ஒரே நாளில் அழிக்கவும் முடியும்.லாபங்கள் அனைத்தையும் ஆளும் வர்க்க பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது, நட்டங்கள் அனைத்தையும் சமூகமயமாக்குவது என்பதே இந்த இருபெரும் வங்கிகளின் தாரக மந்திரம்.இந்தியாவில் நடக்கும் வங்கித்துறை “சீர்திருத்தத்தின்“ அடிப்படை இதுவே. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஒரு நூற்றாண்டு பயங்கரம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்த இந்தியாவையும் உறிஞ்சுகிற ஆக்டோபஸாக மாறப் போகிறது. தடுத்து நிறுத்த வேண்டுமானால், பெடரல் ரிசர்வ் எனும் ஆக்டோபஸின் பிடியிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியை காக்க வேண்டுமானால் மாற்றுக் கொள்கை கொண்ட அரசாங்கம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை.---- எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி தீக்கதிர் 30.12.2013

2 கருத்துகள்:

Nalliah சொன்னது…

உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது. இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை.

இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

உலகம்பூராகவும், அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது, மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

எண்பதுகளில் மேற்குலகமும், சோவித்யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத்யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத்யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, வேறு பல நாடுகளுக்கும் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாது.

- நல்லையா தயாபரன்

Nalliah சொன்னது…

http://www.sooddram.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/rothschild-russian-revolution/#more-5113