வியாழன், 26 டிசம்பர், 2013

உங்கள் சிந்தனைக்கு

Detroit bankruptcy


டெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் !



GM World vehicles
20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு‍ மடங்கு‍ பெரிய நகரம் டெட்ராய்ட்.  அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் 18 லட்சம் (1.8 million) மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர்.
இந்நகரம் திவாலானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று‍ம் உதவி தேவை என்றும் ஜூலை 18, 2013 இல் வழக்கு‍ தொடரப்பட்டது. இது‍ மிச்சிகன் மாநில சட்டத்துக்கு விரோதமானது, நகரத்தின் திவால் அறிவிப்பை ஏற்றால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் போவதோடு, ஏற்கெனவே கடன் கொடுத்த பல்லாயிரக்கணக்கானோரின் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று‍ கூறி இங்காம் கவுன்ட்டி நீதிபதி ஜுலை மாதம் நிராகரித்துவிட்டார். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் மிச்சிகன் அட்டர்னி ஜெனரல்.
அமெரிக்காவிலேயே அதிக அளவு தனி நபர் வருமானம் கொண்ட நகரம் இன்று போரில் சீரழிந்த நகரம் போல் காட்சியளிக்கிறது. உலகின் மோட்டார் நகரம் என புகழப்பட்ட டெட்ராய்ட் கடந்த பத்தாண்டுகளில் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. நிதிச் சுமை, உற்பத்தி நிறுவனங்கள் முற்றாக வெளியேறியமை, மக்கள் தொகை பாதியாகக் குறைந்தது, நகர் முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. சுமார் 78,000 கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. வீதிகள் வெறிச்சோடி உள்ளன.
Abandoned Factory in Detroit
Abandoned Factory in Detroit
மெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப் பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் நகரம் தற்போது திவாலாகிவிட்டது. டெட்ராய்ட் நகர வருவாயில், ஒவ்வொரு டாலருக்கும், 38 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால், 2017 இல், ஒவ்வொரு டாலர் வருவாய்க்கும், 65 சதவீதம் கடன் செலுத்த வேண்டியிருக்கும். நிலைமையை சமாளிக்க, திவால் அறிக்கை வெளியிட்டுள்ளது.
1970-களில் உலக முதலாளித்துவத்தை பீடித்த பொருளாதார சுணக்கத்தின் நடுவில் ஜப்பான், கொரியா மற்றும் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வாகனங்களுக்கான உலகச் சந்தையில் வெற்றிகரமாக நுழைந்தன. அடுத்த 20-30 ஆண்டுகளில் ஃபோர்ட் (Ford Motor Company), ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors Corporation) போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தி தளங்களை மெக்சிகோ, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றி டெட்ராயிட்டில் இருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடின. இதனால் டெட்ராய்ட்டில் வேலை வாய்ப்புகள் பெருமளவு குறைந்தன.
Abandoned house in Detroit
Abandoned house in Detroit
கடன் அடிப்படையில் பெரிய நகராட்சி ஒன்று திவாலானதாக அறிவிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நவீன உலகின் சொர்க்கம், உலகின் தலைவிதிகளை தீர்மானிக்கும் நகரம் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால், இன்று திவால் ஆகிவிட்டது.
டெட்ராய்ட் திவால் நிலைமை மீது தீர்ப்பு…
18 பில்லியன் டாலர் கடன் சுமையால் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலாகிவிட்டதாக 2013, டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெட்ராய்ட் திவால் நிலைமை மீது வழங்கப்பட்ட தீர்ப்பானது அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பு முனையாகும். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய முனிசிபாலிட்டியின் திவால் நிலைமைக்கு டெட்ராய்டின் பெடரல் நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.  மிக முக்கியமாக பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய உரிமை இல்லை என்ற தீர்ப்பையும் சேர்த்து‍ வழங்கியுள்ளனர்.
“டெட்ராய்ட் திவால் நிலைமையில் திருப்புமுனை” என்ற ஒரு தலையங்கத்தோடு வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் அந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது‍.
கடன் வழங்கி உள்ள வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பணம் செலுத்த, நகர சொத்துக்களை விற்பதற்கு அந்த தீர்ப்பு பாதை அமைத்து தந்திருக்கிறது. தீர்ப்புக்கு மறுநாள், பொது மக்களுக்கு சொந்தமான டெட்ராய்ட் கலைக்கூடத்தில் உள்ள அரிய படைப்புகளின் மீது அதன் முதல் மதிப்பீட்டை கிறிஸ்டியின் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது‍.
வீழ்ந்து வரும் முதலாளித்துவ சிந்தனை…
பிரபல கார் கம்பெனி நிறுவனங்களான போர்டு, கிரிஸ்லர், ஜெனரல் மோட்டார் இப்படி பல கம்பெனிகள் டெட்ராய்டில்தான் பிறந்தன, வளர்ந்தன, உலகெங்கும் செல்வாக்கோடு விளங்கின. ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும் அழிவின் விளிம்புக்குச் சென்று ஏதோ ஒரு வழியில் தப்பி தங்களின் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தொடர் வீழ்ச்சியினால் அழிந்த தொழில்கள் பல. கடந்த முப்பது ஆண்டுகளில், இதில் வேலை செய்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு சீரழிந்து ஊரை விட்டு ஓடும் அவலத்தைக் கண்டது இந்த நகரம். இறுதியில் அதன் மரணத்தையும் சந்திக்க வேண்டிய நேரம் இது.
டெட்ராய்ட் நகரின் அழிவு பலரையும் சிந்திக்கச் செய்ய இன்னொரு காரணம் உண்டு. முதலாளித்துவ அறிஞர்களின் மூளைகளையும் அவர்கள் சேவைகளையும் நிரந்தரக் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் சில அமெரிக்க நிறுவனங்கள் உண்டு. அவற்றில் ஒன்று போர்டு பவுண்டேசன் (Ford Foundation). தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற இன்ன பிற முதலாளித்துவ தத்துவ கொள்கைகளை உருவாக்கிய விச ஜந்துகளில் முக்கியமானது போர்டு பவுண்டேசன். அதுவும் இங்கு தான் பிறந்தது.
பிரபலமான கார் மற்றும் இரும்புக் கம்பெனியான போர்டு நிறுவனத்தின் உரிமையாளர் தன் சொத்தைத் தானமாக கொடுத்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் உலகெங்கும் வளர்ந்து வந்த சோசலிச புரட்சிகளுக்கு எதிரான வேலைகளை செய்ய தன் பெயரிலேயே இந்த அறக்கட்டளையை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் பிறகு அமெரிக்க முதலாளித்துவ தத்துவத்தின் அடிப்படைகளை உலகம் பூராவும் இந்த போர்டு பவுண்டேசன் ஏற்றுமதி செய்து வந்தது. இன்றும் செய்து வருகிறது.
ஊருக்கு உபதேசம் சொன்ன போர்டு அறக்கட்டளையின் சொத்துகளே, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பங்கு மார்க்கெட் சூதாட்டத்தில் சிக்கிப் பல மடங்கு குறைந்து போய்விட்டது. உலகெங்கும் அவர்கள் பரப்பிய தத்துவ வித்தைகள் அவர்களுக்கே வேலை செய்யவில்லை. அது பிறந்த மண்ணிற்கும் இன்று உதவவில்லை.
முன்னாள் இந்தியப் பிரதமர் ‘மாமா’ நேரு இந்த நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனத்தின் சேவையை இந்தியாவிற்குள் கொண்டு வந்தார். இந்தியாவின் பிரபலமான வட்டார வளர்ச்சி திட்டங்கள், வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல திட்டங்களை இந்த நிறுவனம் தான் உருவாக்கி தந்தது. பி.டி.ஒ (Block Development Officer), அக்ரி ஆபீசர் Agri officer) உட்பட பல விதமான இந்திய ஆபீசர்களை நமக்கு உருவாக்கித் தந்த அறிவாளிகள் இந்த போர்டு பவுண்டேசன் நிதியில் தான் உருவாக்கினார்கள். இன்றும் அவர்கள் உருவாக்கிய திட்டங்கள் அலுவலகங்கள் இந்தியாவெங்கும் நடைமுறையில் உள்ளன. அதன் லட்சணத்தை நாம் அறிவோம். தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
1970-களில் சியாட்டில் நகரம் திவாலை அறிவித்த நேரம்.. அதன் விமான நிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய விளம்பரப் பலகையில், ‘இந்த நகரிலிருந்து வெளியேறும் கடைசி நபர் நகரின் விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்லுங்கள்,” என எழுதப்பட்டிருந்ததாகவும் யாருமே அதை கடைசி வரை அணைக்கவே இல்லை என்பதை பத்திரிக்கைகள் செய்திகளில் வெளியிட்டன. அந்த அளவுக்கு‍ மனித நடமாட்டம் இல்லாத நகரமாக மாறியிருந்தது.
நகரத்தை வறட்சிக்கு கொண்டு சென்ற பெருநிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் உருவாக்கிய நெருக்கடிக்கு அவர்களே பணம் செலுத்த வேண்டுமென எங்குமே அறிவுறுத்தவில்லை. டெட்ராய்டை மையமாக கொண்ட வாகனத்துறை உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு 12 பில்லியனுக்கு அதிகமான டாலர்களை லாபமாக ஈட்டினர் என்பது‍ எவரும் மறுக்க முடியாத உண்மை…
டெட்ராயிட் திவால் நிலை ஒரு உலகளாவிய கொள்கையின் வீழ்ச்சியாகும். முதலாளித்துவத்திற்கு‍ உற்பத்தி செய்ய ஒரு‍ இடம் தேவைப்பட்டது. அது‍ டெட்ராய்ட் ஆக இருந்தது. அதைவிட சந்தையை ஒட்டிய நல்ல இடங்கள் கிடைத்ததால் தன் கடையை  கிடைத்த இடத்திலெல்லாம் விரித்தது. அதைவிட குறைந்த சம்பளத்திற்கு‍ ஆட்கள் கிடைத்ததும் அதற்கு‍ மிகவும் வசதியாகிவிட்டது. இதற்கு‍ நம்ம ஸ்ரீபெரம்பதூரே உதாரணம்…
வரலாறு‍ தொடர்ச்சியான முறையில் முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கும் என்றால் புரட்சியின் தேவையே இருக்காது…
உழைக்கும் மக்களின் மிக அடிப்படையான தேவைகளை, முதலாளித்துவத்துடன் நல்லிணக்கமான வகையில் பூர்த்தி செய்வது சாத்தியமற்றதாகும். அடிப்படையான சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய லாயக்கற்ற ஒரு அமைப்புமுறை முதலாளித்துவம். அது‍ முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்னும் செய்தியைத்தான் இந்த திவால் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறை “சர்வ நாசம் விளைவிக்கும் முழுநிறைப் போர்” (Universal war of devastation) என்பதை டெட்ராய்ட் திவால் நிரூபித்திருக்கிறது‍.
சமூகக் கோபம் பெருகிச் செல்லும் சூழ்நிலைகளின் கீழ், தாக்குதலை முன்னெடுத்து, நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு முறைக்கு முற்றிலும் எதிரானதொரு இயக்கத்தை கட்டமைப்பதற்கான சந்தர்ப்பம் தொழிலாளர்களிடத்தில் தான் இருக்கிறது. இதை தொழிலாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும் என்று‍ நம்புவோம்.

   நன்றி ... மாற்று சமூக வலைத்தளம்

கருத்துகள் இல்லை: