செவ்வாய், 3 டிசம்பர், 2013

உங்கள் சிந்தனைக்கு .....



இது தவறெனில்….

Avatar of இரா.எட்வின்இரா.எட்வின்.
சமீபத்தில் வெளியான இரண்டு தீர்ப்புகள் என்னைக் கையைப் பிடித்து இதற்குள் இழுத்துப் போயின………
    Scale_of_justice
  1. கல்லூரி முதல்வரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரனைக் கைதிகளாக சிறையில் உள்ள மூன்று மாணவர்களும் பல்கலைக் கழகத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
  2. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டுமே ஆகச் சமீபத்தில் வெவ்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளாகும்.
நம்மைப் பொறுத்தவரை இவை இரண்டு தீர்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் பிரச்சினையே வருகிறது. கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது சரி என்றால் கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்பது தவறாய் படுகிறது. அல்லது கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்றால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் மூவரும் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது தவறாய் தெரிகிறது.
    இதன்மூலம் இன்னொரு விஷயத்தை கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் தேர்வெழுத முடியாது. ஆனால், அவர்கள் விரும்பினால் தேர்தலில் நிற்கலாம். வெற்றி பெற்றால் அமைச்சராகக் கூட ஆகலாம்.
         இதை இப்படியும் சொல்லலாம். குற்றப் பின்னனி உள்ளவன் பொறியியல் வல்லுனராகக் கூடாது. ஆனால் அமைச்சராகலாம். எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.
        ஒன்றைச் சொல்லி விடுகிறேன். அந்தக் கொலை வழக்கு முறையாக நடக்க வேண்டும் என்பதிலும் மிகச் சரியான தண்டனை கொலையாளிளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் நான் இரண்டாவதாய் இல்லை. ஆனால் நெஞ்சில் ஈரம் மிச்சம் இருப்பவர்களைப் பார்த்து இரண்டு கேட்க ஆசைப் படுகிறேன்.
         மனசு நிறைய ஆசைகளோடும், விழிகளில் கசியும் கனவுகளோடும்தானே எம் பிள்ளைகள் கல்வி நிலையங்களில் நுழைகிறார்கள். அவர்கள் கைகளில் கொலைக் கத்தியைக் கொடுத்த சக்தி எது?
   தங்கள் குடும்பத்தின் ஆறேழு வயிறுகளுக்காகவும் வாழ்க்கைப் பாட்டிற்காகவும்தானே பாடம் கற்பிக்க வருகிறார்கள். எந்தக் குழந்தைகள் வளமோடு வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று மனசார போராடுகிறார்களோ அதே குழந்தைகளிடம் ஆசிரியர்களைக்  கொன்று அவர்களது குடும்பங்களை அநாதையாக்க கொலைவாளினைக் கொடுக்கும் சக்தி எது?
       சுருக்கமாகக் கேட்கிறேன் தந்தையும் பிள்ளையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொலைக் களத்தில் கொண்டு வந்து நிறுத்திய ஈனத்தனமான சக்தி முதலாளித்துவம் என்பதை என்பதை நாம் இன்னும் எத்தனை இழப்புகளுக்குப் பிறகு புரிந்து கொள்ளப் போகிறோம்?
     நானொரு கற்றுக் கொடுக்கும் ஊழியன். என்னைப் போலவே கற்றுக் கொடுக்கும் ஊழியரான கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களின் கொலைக்காக ஒரு சக ஊழியனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.
        நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவனின் தகப்பன். அந்த வகையில் பதறி,   ஒரு கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்தும் ஒரு தகப்பனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.
சிலர் கேட்கக் கூடும்,
“ இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? எந்தப் பக்கம் நீ? ”
ஈரம் துளியுமற்ற வறட்டுத்தனத்தின் விளைவாகவே இத்தகைய கேள்வியைப் பார்க்கிறேன்.
       நான் சராசரி மனிதன்.  கடன் வாங்கி பிள்ளையைப் படிக்க வைக்கும் ஒரு பாமரத் தகப்பன். கல்வியை சொல்லித்தர வேண்டிய ஒரு ஊழியன். ஆகவே பாமரத் தனமான சராசரியாய் நால்வருக்காவும் அழுகிறேன்.
எனக்குத் தெரியும்,
         என்னிடம் படிக்கும் பிள்ளையை பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையும் எங்களுக்கு  வரலாம். எனக்கு எதிராகவும் என்னிடம் படிக்கும் குழந்தையின் கையில் ஏதோ ஒன்று கத்தியைத் தரலாம்.
இதை இப்படியும் வெளிப்படையாகப் பார்க்கலாம்,
    ஒரு நாள் என்னிடம் படிக்கும் பிள்ளையையும் நாங்கள் எங்கள் பள்ளியிலிருந்து நீக்கலாம்.  என்னைக் கொல்லவும் என்னிடம் படிக்கும் குழந்தை கத்தியை எடுக்கலாம்.
       வழக்கமாக பெரும்பான்மை நேரங்களில் பதட்டத்தோடும் தவறுதலாகவும் நாம் இரண்டாவதை எடுத்துவிடுகிறோம்.
       எந்த ஆசிரியனுக்கும், தலைமை ஆசிரியருக்கும், விரிவுரையாளருக்கும், பேராசிரியருக்கும் , முதல்வருக்கும் ஒரு மாணவனைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெளியேற்றி  அவனது வாழ்க்கையை நாசமாக்கிவிட வேண்டும் என்கிற அளவிற்கு எந்தப் பிள்ளையோடும் தனிப்பட்ட பகையோ விரோதமோ இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும்கூட அத்தகைய ஈனத்தனம் வெளிப்படாது.
      ஒரு ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ, கல்லூரி முதல்வரையோ கொலை செய்யுமளவிற்கு எந்த ஒரு பிள்ளைக்கும் சொந்தப் பகை இருக்காது. அப்படியே இருப்பினும் எந்தப் பிள்ளையும் இத்தகையதொரு படு பாதக செயலை செய்ய மாட்டான்.
ஆனால் இரண்டும் நடக்கத் துவங்கியுள்ளன. ஆனால் இவை இவர்கள் மூலமாக நிறைவேறியிருப்பினும் இதற்கு இவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் இந்தக் கொலை நடந்தது?
         ஏதோ ஒரு தவறு நடக்கிறது. அதுபற்றி விரிவாய் பேச இங்கு இடமில்லை என்பதால் அதற்குள் நாம் போகவில்லை. அந்தத் தவறுக்காக மாணவர்கள் தற்காலிகமாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்காக கொலை செய்துவிடுவதா? என்ற கேள்வி இயல்பானதுதான். அதற்குள் போவதற்குமுன் இன்னொரு விஷயத்தை நாம் பார்த்தாக வேண்டும்.
      ஏதோ ஒரு தவறை பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதற்காக இடை நீக்கம் செய்துவிடுவார்களா? அவர்களது பிள்ளைகளாக இருந்தால் இப்படி செய்துவிடுவார்களா? தவறே செய்திருந்தாலும் நெறிப்படுத்த வேண்டாமா? ஒரு கல்வி நிலையத்தின் வேலை பொறியியல் வல்லுனர்களை உருவாக்கித் தருவது மட்டும்தானா? ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதில்லையா?
        மேல் சொன்ன இரண்டு பாராக்களில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் உலகமயமும் தாராளமயமும் விதைத்துள்ள வணிகப் போட்டி இவற்றை செய்வதற்கான அவகாசத்தை தருவதில்லை.
     கொலை நடந்திருப்பது கல்லூரி வளாகத்தில். இதில் எங்கே வணிகப் போட்டி வந்தது என்று கேட்களாம். கல்வியே வணிகமாகிப் போன சூழலில் கல்லூரி முதலாளிகளுக்கு நட்டம் வந்துவிடக்கூடாது என்கிற வணிக நோக்கமே இப்படி பிள்ளைகளை கொலையாளிகளாயும், ஆசிரியர்களை பிணங்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
      ஏதோ ஒரு மாணவன் ஒரு மாணவியிடம் குறும்பு செய்கிறான் என்றும், அந்த  மாணவி பேராசிரியரிடம் முறையிடுகிறாள் என்றும் வைத்துக் கொள்வோம். முன்னர் எல்லாம் எப்படி நடக்கும் என்றால் அப்படி ஒரு புகார் வந்தவுடன் இருவரையும் அழைத்து பேசி சமாதானப் படுத்தி விடுவார்கள். அந்த மாணவியிடம் தனியாக இதை பெரிது படுத்த வேண்டாம். இனி இப்படி நடக்காது. பயப் படாமல் போடா. தொடர்ந்து அவன் இதையே செய்தால் வா. பார்த்துக் கொள்ளலாம் என்பார்.
       மாணவனிடமோ இனி இப்படி ஒருமுறை நடந்தால் தொலைத்து விடுவேன் தொலைத்து என்று மிரட்டி அனுப்பிவிடுவார். பெரும்பான்மை இந்த அணுகுமுறையிலேயே தீர்ந்துவிடும்.
        இந்த இயல்பான அணுகுமுறையில்தான் முதலாளித்துவம் மண்ணள்ளிப் போட்டது.
        அவசரகதியில் இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு ஏன் வந்தது? அவருக்கும் மாணவர்களுக்கும் அவ்வளவு பகையா? மனிதாபிமானமே சுத்தமாய் இல்லாது வறண்டு போயிற்றா அவருக்கு? இல்லை, இந்த இடை நீக்கத்தை நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர் செய்திருக்க முடியும்.
        அப்படி செய்யாவிட்டால் கல்லூரியின் மாண்பு கெட்டுப் போய்விட்டதாகக் கருதி கல்லூரி முதலாளி அவரை பதவி இறக்கமோ பணிநீக்கமோ செய்திருக்கக் கூடும். அதற்கு அஞ்சித்தான் முதல்வர் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.
        நிர்வாகிக்கு கல்லூரியின் மாண்பு குறித்து இவ்வளவு அக்கறையா என்றால் அது அல்ல இங்கு பிரச்சினை. இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மாணவர்கள் வர மாட்டார்கள். முதலாளியின் கல்லா நிரம்பாது என்ற வணிக நுணுக்கமே இத்தனைக்கும் காரணம் என்பதை நாம் உணராமல் போனால் தவறிழைத்தவர்களாவோம்.
        இடைநீக்கம் செய்த பின்பு அந்த மாணவர்களை அழைத்து ஒன்றும் பயப்பட வேண்டாம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அமைதியாகப் படியுங்கள். வீட்டிற்கெல்லாம் சொல்ல வேண்டாம். அந்தப் பிள்ளையை சமாதானப் படுத்தவே இந்த முடிவு என்று சொல்லியிருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா?
       அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மாணவர்களை அழைத்து  அன்போடும் அக்கறையோடும் பேசி சமாதானப் படுத்தியிருந்தார்கள் என்றால்கூட இது நடந்திருக்காது.
    ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை? அப்படி செய்ய அவர்கள் விரும்பவில்லையா? அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் செய்தால் எங்கே நிர்வாகத்திற்கு எதிராக தங்களைக் கொண்டு போய் நிறுத்திவிடுமோ என்ற அச்சமே அவர்களை அப்படி செய்யாமல் தடுத்திருக்கும் என்பதையும் உணர வேண்டும்.
      இது மட்டுமல்ல இவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கக் கூடும். ஆக இடை நீக்கம் செய்யப் பட்ட  பிள்ளைகள் தனிமைப் படுத்தப் பட்டிருப்பார்கள். அந்தத் தனிமை அவர்களை வேதனைப் படுத்தியிருக்கும். அது சன்னம் சன்னமாக கோவமாக மாறியிருக்க வேண்டும்.
        நாம் என்ன கொலையா செய்தோம். நமக்கேன் இந்த தண்டனை என்று அவர்கள் குமுறியிருக்க வேண்டும். அந்தக் குமுற்லும் கொந்தளிப்புமே சுரேஷ் அவர்களுக்கு எதிராக அவர்கள கையில் கொடுவாளைக் கொடுத்திருக்க வேண்டும்.
     ஒரு சின்னத் தவறுக்காக கொலைகாரர்களைப் போல் அந்தப் பிள்ளைகளைப் பார்த்ததன் விளைவுதான்  இன்றவர்களை கொலையாளிகளாகவே மாற்றியிருக்கிறது.
      ஆக, முதாளியின் கல்லா குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற முதலாளித்துவத்தின் உந்துதலோடு எடுக்கப் பட்ட ஒரு நடவடிக்கைதான் சுரேஷ் கொலை செய்யப் படுவதற்கும் மூன்று பிள்ளைகள் கொலையாளிகளாக வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பதற்கும் காரணம்.
   சுரேஷ் கொலை செய்யப்பட்டுவிட்டார். பிள்ளைகள் கைதிகளாகி விட்டார்கள். இந்தக் கொலைபாதகச் செயலுக்கு உந்தித் தள்ளிய முதலாளித்துவத்தை என்ன செய்யப் போகிறோம்?
 நன்றி ... மாற்று சமூக வலைத்தளம்

கருத்துகள் இல்லை: