செவ்வாய், 31 டிசம்பர், 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்




தோழர்.P.அபிமன்யு அவர்கள் பணிநிறைவு சிறக்கட்டும்



1975 ஆண்டு துவக்கத்தில் தபால் தந்தி துறையில்

தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்து

தொழிற்சங்க இயக்கத்தில் NFPTEயில் இணைந்து

அமரர் தோழர் K.G. போஸ் வழி காட்டலில் இயங்கி

தோழர் C.S .பஞ்சாபகேசன் போட்ட பாதையில் நடந்து

தொலைதொடர்பு துறைதொழிற்சங்கங்களில் 
சீர்திருத்தவாத தலைமைக்கு எதிராக போராடி, 

சங்கத்தில் தொழிற்சங்க ஜனநாயகத்தை நிலை நிறுத்தி  BSNLலில் BSNLEUவை உருவாக்கி

ஊழியர்கள் வாழ்வில் மேம்பாடு அடைந்திட அல்லும் பகலும் பாடுபட்டு நிறைவான ஊதியம் பெற்றுத் தந்து,

பதவி உயர்வுத் திட்டம் உருவாக்கி தனியார்மயத்தை தடுத்திட்ட மாமனிதர் தோழர் P. அபிமன்யு அவர்கள் இன்று ஒய்வு பெறுகிறார்.

நமது கடலூர் மாவட்ட்த்தில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பணியாற்றி நமக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் இன்று நிறுவனப் பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

பெற்ற உரிமைகளை போற்றி பாதுகாத்திட அவர் பணி தொடரட்டும்..

அவர் நீடுழீ வாழ்க! வாழ்க!! என்று இந்நாளில் நமது கடலூர்  மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்


இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இன்று காலமானார். அவருக்கு வயது 75 பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த சென்றிருந்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் என தகவல்கள் தெரிவிகின்றன.இயற்கை வேளாண் விஞ்ஞானிக்கு அஞ்சலி செலுத்துவோம் .

சென்னை சொசைட்டி டைரி

அன்பார்ந்த தோழர்களே!

நமது சென்னை தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களுக்கு  31-12-2013 அன்று கடலூரிலும் 01-01-2014 அன்று விழுப்புரத்திலும் டைரி வழங்கப்பட உள்ளது. தலமட்ட நிர்வாகிகள் அதனைப்பெற்று நமது தோழர்களுக்கு கிடைக்கப்பெற ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், 30 டிசம்பர், 2013

கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
திண்டிவனம் துணைக்கோட்ட நிவாகத்தின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து 30.12.2013 அன்று மாலை கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும், தோழியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திண்டிவனம்  துணைக்கோட்ட நிர்வாகமே!

தனிப்பட்ட காரணங்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யாதே!

இதுவரையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறாதே!

எங்கள் சங்க உறுப்பினர்களை குறிவைத்து தாக்காதே!

நடுநிலையான பாரபட்சமற்ற நடைமுறைகளை கடைபிடி!

தொழிலமைதியை சீர்குலைக்காதே!  

பயங்கர வங்கியின் நூறாண்டு!

அது 1910ம் ஆண்டு.சக்திவாய்ந்த 7 பெரும் பணக்காரர்கள் ரகசியமாக சந்தித்தார்கள். அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் இந்த சந்திப்பு நடந்தது. ராக்பெல்லர், ஜே.பி.மோர்கன், ரோத்ச்சைல்டு ஆகிய மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் முதலாளிகள்தான் அவர்கள்.சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள்.

இந்த மூன்று பெரும் முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அடுத்த 3 ஆண்டுகளில் உதயமானதுதான் இன்றைக்கு ‘பெட் ரிசர்வ்’ என்று ஊடகங்களால் புகழ்ந்து தள்ளப்படுகிற அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி.அரசாங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத, முற்றிலும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே இப்படி ஒரு வங்கியை உருவாக்குவதற்கு, அன்றைய தினம் அமெரிக்காவின் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற போதிலும், ஜனாதிபதி உட்ரோ வில்சன் நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்தார். பணக்காரர்களின் நாடாளுமன்றம் மிகப் பெரிய விவாதம் இல்லாமல், 1913ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாள் முன்பு நள்ளிரவில் இதற்கு ஒப்புதல் அளித்தது.

அமெரிக்கர்களின் தலைவிதியை மட்டுமல்ல, பிற்காலத்தில் ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் தனது காலடியின் கீழ் கொண்டுவரப் போகும் பெடரல் ரிசர்வ் ஆக்ட் என்ற அந்த மசோதாவை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு செல்லும் அவசரத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து பார்க்காமலேயே கைதூக்கி நிறைவேற்றினார்கள்.அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம்.முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது.

‘நான் மிகவும் சோகமான மனிதனாக இருக்கிறேன். தெரிந்தே எனது நாட்டை நாசமாக்கிவிட்டேன். ஒரு மாபெரும் தொழில்வள நாடான அமெரிக்கா முற்றிலும் வங்கிக் கடன் முறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக மாறுவதற்கு காரணமாகிவிட்டேன். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் இப்போது வெகுசில தனிநபர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த உலகிலேயே ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிற, சுதந்திரமான கருத்துக்களுடன் செயல்பட முடியாத, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உறுதிமொழிகள் அளிக்க முடியாத, முற்றிலும் சில ஆதிக்க மனிதர்களால் வழிநடத்தப்படுகிற அரசாங்கமாக அமெரிக்க அரசாங்கம் மாறிவிட்டது...’ என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதே உட்ரோவில்சன் எழுதினார்.1860களில் அமெரிக்காவின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.

அப்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, வங்கிகளை நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வங்கி நடத்துபவர்களுக்கு வட்டி என்ற பெயரில் பெருவாரியான பணம் போவதை அவர் தடுத்து நிறுத்தினார். லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்கள் நடமாடும் வீதிகளிலிருந்த நிதி அதிகாரங்கள் முற்றிலும் பெருமுதலாளிகள் குடி கொண்டிருக்கும் வால்ஸ்டிரீட் எனும் பணக்கார வீதிக்கு மாறியது.அங்கிருந்தே இன்றைக்கு உலகம் முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார யுத்தம் உலக நாடுகள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மனிதகுலத்தின் மீது நிதியுத்தம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. டாலர் எனும் பணத்தின் மூலம் உலகம் முழுவதும் சந்தையை கட்டுப்படுத்துகிற பெடரல் ரிசர்வ் எனும் அமெரிக்காவின் மத்திய வங்கி, இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறது.

2013 டிசம்பர் 23ம்தேதியன்று பெடரல் ரிசர்வ் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிதித் துறையில் மிகப் பெரும் போரை கட்டவிழ்த்துவிட்டது பெடரல் ரிசர்வ். உலகப் பொருளாதாரங்களின் லாபங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்துக் கொண்டது; கோடிக்கணக்கான மக்களின் உழைப்பையெல்லாம், விலைவாசியை உயர்த்தி சுரண்டிக் கொண்டது.இதைத்தான் நிதித்துறை தொடர்பான வரலாற்று அறிஞர் கரோல் குய்க்லி, தனது ‘துயரமும் நம்பிக்கையும்‘ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நிதி மூலதனத்தின் அடிப்படையில் இயங்குகிற இன்றைய முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் பரப்பி வருகிறது;

உலகம் முழுவதும் உள்ள நிதிக் கட்டமைப்பை சில குறிப்பிட்ட தனியார் முதலாளிகளின் கைகளுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசியல் கட்டமைப்பையும் தகர்க்கவோ அல்லது தனக்குச் சாதகமாக மாற்றவோ முயற்சிக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கிடையே நடக்கிற சந்திப்புகளும், ரகசிய ஒப்பந்தங்களும், இந்த வங்கிகளது தலைவர்களின் மாநாடுகளும் இதை நோக்கியே பயணப்படுகின்றன. இவர்களை பொறுத்தவரை பணத்தின் சக்தியே உயர்ந்தது; அதுவே உலகம் முழுவதும் பொருளாதாரங்களை, வணிகத்தை, அரசியலை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தை கொண்டிருக்கிறது’.

பெடரல் ரிசர்வ் போலவே இந்த உலகில் சக்திவாய்ந்த மேலும் 3 வங்கிகள் உள்ளன. அவை பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய சென்ட்ரல் பேங்க் மற்றும் பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவையே. இந்த 4 வங்கிகளுக்கும் தலைமை அதிகாரி போல சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச வங்கி (பிஐஎஸ்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கப் பெருமுதலாளிகளது தலைமை வங்கியாக, அவர்களது சட்டவிரோத பணத்தையெல்லாம் பாதுகாக்கிற வங்கியாக சுவிஸ் வங்கி செயல்படுகிறது.சட்டவிரோத பணத்தைப் பாதுகாக்க ஒரு சுவிஸ் வங்கி, சட்டவிரோதத்தை அமலாக்குகிற மைய வங்கியாக பெடரல் ரிசர்வ் என இந்த பூமியையே இரண்டு வங்கிகள்தான் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

இவை நினைத்தால் உலக நாடுகளின் பொருளாதாரங்களை ஆக்கவும் முடியும்; ஒரே நாளில் அழிக்கவும் முடியும்.லாபங்கள் அனைத்தையும் ஆளும் வர்க்க பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது, நட்டங்கள் அனைத்தையும் சமூகமயமாக்குவது என்பதே இந்த இருபெரும் வங்கிகளின் தாரக மந்திரம்.இந்தியாவில் நடக்கும் வங்கித்துறை “சீர்திருத்தத்தின்“ அடிப்படை இதுவே. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஒரு நூற்றாண்டு பயங்கரம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்த இந்தியாவையும் உறிஞ்சுகிற ஆக்டோபஸாக மாறப் போகிறது. தடுத்து நிறுத்த வேண்டுமானால், பெடரல் ரிசர்வ் எனும் ஆக்டோபஸின் பிடியிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியை காக்க வேண்டுமானால் மாற்றுக் கொள்கை கொண்ட அரசாங்கம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை.---- எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி தீக்கதிர் 30.12.2013

எதிர்பாரா விபத்தென்றுஏற்க முடியுமா இதனை?

பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வது, ஒப்பீட்டளவில் அது பாது காப்பானது என்பதற்காகவும்தான். அதனால்தான் பெரிய அளவில் ரயில் விபத்துகள் நடக்கிறபோது அது நாடு முழுவதுமே அதிர்ச்சியலைகளை ஏற் படுத்துகிறது. சனிக்கிழமையன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகில் பெங்களூரு - நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அத்தகையதுதான். அதில் ஒரு குழந்தை உட்பட 26 பேர் உடல் கருகி மாண்டுவிட்டனர். பலர் பலத்த நெருப்புக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இழப் பீடுகளால் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட் டுள்ள இழப்பை ஈடுகட்டிவிட முடியாது.2013ம் ஆண்டில் 5 தீ விபத்துகளும், 3 பெரும்மோதல் விபத்துகளும், 43 தடம்புரண்டு கவிழ்ந்த விபத்துகளும் நடந்துள்ளன.

ஒவ்வொரு பெரியவிபத்தின்போதும் காரணங்களைக் கண்டறி வதற்கும் தடுப்பதற்கான வழிகளைப் பரிந் துரைப்பதற்கும் விசாரணைக்குழுக்கள் அமைக் கப்படுகின்றன. மக்களுக்குத் தெரியாமலே போவது என்னவென்றால், அந்தக் குழுக்கள் கண்டுபிடித்தது என்ன என்ற விவரங்கள்தான்.வண்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற அடிப்படையான பராமரிப்பு ஏற்பாட்டில் கூட நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். முன்பு பிரதான பரா மரிப்பு என்பது அன்றாட நடவடிக்கையாக இருந்தது. ஆனால், வண்டிகளின் இயக்கங்கள் பலதடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் போதுமான பெட்டிகள் உறுதிப்படுத்தப் படவில்லை.

இதனால் ஒரு தடத்தில் வந்த வண்டியே, பெயர்ப்பலகை மாற்றி வேறொரு தடத்தில் இயக்கப்படுகிறது. அன்றாடப் பராமரிப்பு ஏற்பாட்டைக் கைவிட்டு, ஒரு வண்டிமொத்தம் 4,500 கி.மீ. ஓடியபிறகு பராமரிப்பை மேற்கொண்டால் போதும் என்று முடிவு செய்துவிட் டார்கள். 12 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்ட காலமுறைப்படியான ஒட்டுமொத்த பராமரிப்பு இப்போது 24 மாதங்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டது.ஒவ்வொரு வண்டிக்குமான தனி மின்சாரப் பணியாளர் கிடையாது. பொதுவாகவே ரயில் வேயில் பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே 1,49,000 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பாதுகாப்பு ஆய்வுக்குழுவே கூறியிருக்கிறது. அமைச்சகமோ 60,000 காலியிடங்கள்தான் இருப்ப தாகக் கூறி, பாதுகாப்பு தொடர்பான 25,000 பணியிடங்களை மட்டும் நிரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது. ரயில்வேயில் இத்தனை பாது காப்புப் பணியிடங்கள் காலியாக இருப்பதையும், ஓராண்டுக்கு மேலாகிவிட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. மின் கசிவால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உறுதியாகுமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

ஆனால், பழுது ஏற்படுவதற்கு முன் பராமரிப்பு என்ற கொள்கையைக் கைவிட்டு, பழுது ஏற்பட்ட பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையைக் கொண்டுவந்ததற்கு யார் பொறுப்பு? ரயில்வே பணிகளைப் பாதுகாப்பு உத்தரவாதமற்ற தனியார் நிறு வனங்களிடம் ஒப்படைத்தது யாருடைய முடிவு? அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாத வரையில், இப்படிப்பட்ட சோகங்களை எப்படி எதிர்பாராத விபத்து என்று சொல்வது?
நன்றி தீக்கதிர் 30.12.2013

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கடலூர் கிளைகளின் 7வது இணைந்த கிளை மாநாடு





நீதித் தமிழ்!

வழக்கறிஞராக 20 ஆண்டுகள் சீனியர் கவுன்சிலராக 10 ஆண்டுகள்சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதியாக ஏழு ஆண்டுகள் பொறுப்பு வகித்த சந்துரு, 2013மார்ச்சில் ஓய்வுபெற்றார்.

ஏழு ஆண்டுகளில் 96 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளித்ததுஅர்த்தமுள்ள ஒருசாதனைஉத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடித்துத் தள்ள உத்தரவிட்டது,கோயில்களில் பெண்கள்  பூசாரிகளாகப்  பணியாற்றலாம் என்று தீர்ப்பளித்தது'பெரியார் அனைவருக்கும் பொதுவானவர்’ என்று அவரின் படைப்புகளை பொதுவுடைமை ஆக்கியது என,தன் பணிக்காலம் முழுக்க நீதியை நிலைநாட்டினார் சந்துரு.

கிட்னிபழுதான டாஸ்மாக்ஊழியர் தொடுத்தவழக்கில்,'மக்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும்மறைமுகமாகப் பாழ்படுத்தும் டாஸ்மாக் நிறுவனம்மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடிகளைச்சம்பாதிக்கிறதுஆனால்அதன் ஊழியரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள மறுப்பது தொழிலாளர் நலசட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறிஅந்த ஊழியரின் முழு மருத்துவச் செலவையும் அரசேஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

ஒரு நீதிபதியாகத் தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார் சந்துருநீதிபதியாகப் பொறுப்பேற்றமேடையிலேயே தன் சொத்துக் கணக்கை வெளியிட்டுஇந்திய நீதித் துறைக்கு முன்மாதிரி ஆனார்.நீதிபதிக்கு முன்பாக வெள்ளைச்   சீருடை ஊழியர்கள்செங்கோல் ஏந்தி 'உஷ்’ என்று சத்தம்எழுப்பிக்கொண்டு செல்லும் நடைமுறையை  நிராகரித்தார்தன் நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள்,நீதிபதியை 'மை லார்ட்.’ என்று அழைக்கத் தேவை இல்லை என்று உத்தரவிட்டார்ஓய்வுபெறும்நீதிபதிகளுக்கான பிரிவு உபசார விழாவைக்கூட மறுத்து, 'இத்தகைய சடங்குகள் வீண் செலவு’ என்றுதலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி விடைபெற்றார்வழக்காடிய கனல் காலங்கள்வழங்கிய கனல்தீர்ப்புகளைப் போலவேஓய்வுக்குப் பிறகான கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் அருமைத்தமிழன்... நம் பெருமைத் தமிழன்!
நன்றி: விகடன்

சனி, 28 டிசம்பர், 2013

தோழர். T.S. ராஜன் இயற்கை எய்தினார்.


அன்பார்ந்த தோழர்களே!

தன்னலமற்ற தன்னிகரற்ற தோழர்.T.S.ராஜன் தந்திப்பகுதியின் ஒப்பற்ற தலைவர் இன்று காலை இயற்கை எய்தினார்.தந்திப் போக்குவரத்து 3ம் பிரிவு சங்கத்தின் தமிழ் மாநில செயலராகவும், மாநில தலைவராகவும், அகில இந்திய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாராகவும், உதவித் தலைவராகவும் அவர் சங்கப்பணீயாற்றியுள்ளார். தந்திப்பகுதியில் அனைத்து தரப்பு ஊழியர்களின் மதிப்பையும், தந்திப்பகுதியில் அனைத்து சங்ககங்களின் மதிப்பையும் பெற்ற ஒரே தலைவர் தோழர்.T.S. ராஜன் எனபதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இறுக்க முடியாது. தான் பின் பற்றிய கொள்கையை வாழ்க்கையிலும் கடைபிடித்தவர். 1968 போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது புன்சிரிப்புடன் அதனை ஏற்றவர். பின்னர் சங்க முயற்சியால் திரும்பவும் பணியில் சேர்ந்து இறுதி மூச்சு வரை தொழிலாளிக்காகவும், இடதுசாரி கருத்துகளுக்காகவும் வாழ்ந்தவர். நமது சங்கம் AIBDPA சங்கத்தை துவக்கியதும் அதில் த்ன்னை இணைத்துக் கொண்ட மாமனிதர். அவரது மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். நமது சங்கக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

மத்திய செயற்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே!

நமது BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும்  வரும் பிப்ரவரி மாதம் 7,8 மற்றும் 9 தேதிகளில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு குழு உருவாக்கப்பட்டு விட்டது .இதன் சேர்மன் ஆக தோழர் P.K.தக்கர் அவர்களும்,பொதுச் செயலராக தோழர் D.K.பகுற்றா அவர்களும் பொருளராக தோழர் N.J தேசாய் அவர்களும் செயல்படுவர் .

வியாழன், 26 டிசம்பர், 2013

உங்கள் சிந்தனைக்கு

Detroit bankruptcy


டெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் !



GM World vehicles
20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு‍ மடங்கு‍ பெரிய நகரம் டெட்ராய்ட்.  அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் 18 லட்சம் (1.8 million) மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர்.
இந்நகரம் திவாலானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று‍ம் உதவி தேவை என்றும் ஜூலை 18, 2013 இல் வழக்கு‍ தொடரப்பட்டது. இது‍ மிச்சிகன் மாநில சட்டத்துக்கு விரோதமானது, நகரத்தின் திவால் அறிவிப்பை ஏற்றால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் போவதோடு, ஏற்கெனவே கடன் கொடுத்த பல்லாயிரக்கணக்கானோரின் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று‍ கூறி இங்காம் கவுன்ட்டி நீதிபதி ஜுலை மாதம் நிராகரித்துவிட்டார். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் மிச்சிகன் அட்டர்னி ஜெனரல்.
அமெரிக்காவிலேயே அதிக அளவு தனி நபர் வருமானம் கொண்ட நகரம் இன்று போரில் சீரழிந்த நகரம் போல் காட்சியளிக்கிறது. உலகின் மோட்டார் நகரம் என புகழப்பட்ட டெட்ராய்ட் கடந்த பத்தாண்டுகளில் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. நிதிச் சுமை, உற்பத்தி நிறுவனங்கள் முற்றாக வெளியேறியமை, மக்கள் தொகை பாதியாகக் குறைந்தது, நகர் முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. சுமார் 78,000 கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. வீதிகள் வெறிச்சோடி உள்ளன.
Abandoned Factory in Detroit
Abandoned Factory in Detroit
மெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப் பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் நகரம் தற்போது திவாலாகிவிட்டது. டெட்ராய்ட் நகர வருவாயில், ஒவ்வொரு டாலருக்கும், 38 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால், 2017 இல், ஒவ்வொரு டாலர் வருவாய்க்கும், 65 சதவீதம் கடன் செலுத்த வேண்டியிருக்கும். நிலைமையை சமாளிக்க, திவால் அறிக்கை வெளியிட்டுள்ளது.
1970-களில் உலக முதலாளித்துவத்தை பீடித்த பொருளாதார சுணக்கத்தின் நடுவில் ஜப்பான், கொரியா மற்றும் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வாகனங்களுக்கான உலகச் சந்தையில் வெற்றிகரமாக நுழைந்தன. அடுத்த 20-30 ஆண்டுகளில் ஃபோர்ட் (Ford Motor Company), ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors Corporation) போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தி தளங்களை மெக்சிகோ, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றி டெட்ராயிட்டில் இருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடின. இதனால் டெட்ராய்ட்டில் வேலை வாய்ப்புகள் பெருமளவு குறைந்தன.
Abandoned house in Detroit
Abandoned house in Detroit
கடன் அடிப்படையில் பெரிய நகராட்சி ஒன்று திவாலானதாக அறிவிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நவீன உலகின் சொர்க்கம், உலகின் தலைவிதிகளை தீர்மானிக்கும் நகரம் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால், இன்று திவால் ஆகிவிட்டது.
டெட்ராய்ட் திவால் நிலைமை மீது தீர்ப்பு…
18 பில்லியன் டாலர் கடன் சுமையால் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலாகிவிட்டதாக 2013, டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெட்ராய்ட் திவால் நிலைமை மீது வழங்கப்பட்ட தீர்ப்பானது அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பு முனையாகும். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய முனிசிபாலிட்டியின் திவால் நிலைமைக்கு டெட்ராய்டின் பெடரல் நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.  மிக முக்கியமாக பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய உரிமை இல்லை என்ற தீர்ப்பையும் சேர்த்து‍ வழங்கியுள்ளனர்.
“டெட்ராய்ட் திவால் நிலைமையில் திருப்புமுனை” என்ற ஒரு தலையங்கத்தோடு வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் அந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது‍.
கடன் வழங்கி உள்ள வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பணம் செலுத்த, நகர சொத்துக்களை விற்பதற்கு அந்த தீர்ப்பு பாதை அமைத்து தந்திருக்கிறது. தீர்ப்புக்கு மறுநாள், பொது மக்களுக்கு சொந்தமான டெட்ராய்ட் கலைக்கூடத்தில் உள்ள அரிய படைப்புகளின் மீது அதன் முதல் மதிப்பீட்டை கிறிஸ்டியின் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது‍.
வீழ்ந்து வரும் முதலாளித்துவ சிந்தனை…
பிரபல கார் கம்பெனி நிறுவனங்களான போர்டு, கிரிஸ்லர், ஜெனரல் மோட்டார் இப்படி பல கம்பெனிகள் டெட்ராய்டில்தான் பிறந்தன, வளர்ந்தன, உலகெங்கும் செல்வாக்கோடு விளங்கின. ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும் அழிவின் விளிம்புக்குச் சென்று ஏதோ ஒரு வழியில் தப்பி தங்களின் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தொடர் வீழ்ச்சியினால் அழிந்த தொழில்கள் பல. கடந்த முப்பது ஆண்டுகளில், இதில் வேலை செய்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு சீரழிந்து ஊரை விட்டு ஓடும் அவலத்தைக் கண்டது இந்த நகரம். இறுதியில் அதன் மரணத்தையும் சந்திக்க வேண்டிய நேரம் இது.
டெட்ராய்ட் நகரின் அழிவு பலரையும் சிந்திக்கச் செய்ய இன்னொரு காரணம் உண்டு. முதலாளித்துவ அறிஞர்களின் மூளைகளையும் அவர்கள் சேவைகளையும் நிரந்தரக் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் சில அமெரிக்க நிறுவனங்கள் உண்டு. அவற்றில் ஒன்று போர்டு பவுண்டேசன் (Ford Foundation). தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற இன்ன பிற முதலாளித்துவ தத்துவ கொள்கைகளை உருவாக்கிய விச ஜந்துகளில் முக்கியமானது போர்டு பவுண்டேசன். அதுவும் இங்கு தான் பிறந்தது.
பிரபலமான கார் மற்றும் இரும்புக் கம்பெனியான போர்டு நிறுவனத்தின் உரிமையாளர் தன் சொத்தைத் தானமாக கொடுத்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் உலகெங்கும் வளர்ந்து வந்த சோசலிச புரட்சிகளுக்கு எதிரான வேலைகளை செய்ய தன் பெயரிலேயே இந்த அறக்கட்டளையை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் பிறகு அமெரிக்க முதலாளித்துவ தத்துவத்தின் அடிப்படைகளை உலகம் பூராவும் இந்த போர்டு பவுண்டேசன் ஏற்றுமதி செய்து வந்தது. இன்றும் செய்து வருகிறது.
ஊருக்கு உபதேசம் சொன்ன போர்டு அறக்கட்டளையின் சொத்துகளே, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பங்கு மார்க்கெட் சூதாட்டத்தில் சிக்கிப் பல மடங்கு குறைந்து போய்விட்டது. உலகெங்கும் அவர்கள் பரப்பிய தத்துவ வித்தைகள் அவர்களுக்கே வேலை செய்யவில்லை. அது பிறந்த மண்ணிற்கும் இன்று உதவவில்லை.
முன்னாள் இந்தியப் பிரதமர் ‘மாமா’ நேரு இந்த நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனத்தின் சேவையை இந்தியாவிற்குள் கொண்டு வந்தார். இந்தியாவின் பிரபலமான வட்டார வளர்ச்சி திட்டங்கள், வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல திட்டங்களை இந்த நிறுவனம் தான் உருவாக்கி தந்தது. பி.டி.ஒ (Block Development Officer), அக்ரி ஆபீசர் Agri officer) உட்பட பல விதமான இந்திய ஆபீசர்களை நமக்கு உருவாக்கித் தந்த அறிவாளிகள் இந்த போர்டு பவுண்டேசன் நிதியில் தான் உருவாக்கினார்கள். இன்றும் அவர்கள் உருவாக்கிய திட்டங்கள் அலுவலகங்கள் இந்தியாவெங்கும் நடைமுறையில் உள்ளன. அதன் லட்சணத்தை நாம் அறிவோம். தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
1970-களில் சியாட்டில் நகரம் திவாலை அறிவித்த நேரம்.. அதன் விமான நிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய விளம்பரப் பலகையில், ‘இந்த நகரிலிருந்து வெளியேறும் கடைசி நபர் நகரின் விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்லுங்கள்,” என எழுதப்பட்டிருந்ததாகவும் யாருமே அதை கடைசி வரை அணைக்கவே இல்லை என்பதை பத்திரிக்கைகள் செய்திகளில் வெளியிட்டன. அந்த அளவுக்கு‍ மனித நடமாட்டம் இல்லாத நகரமாக மாறியிருந்தது.
நகரத்தை வறட்சிக்கு கொண்டு சென்ற பெருநிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் உருவாக்கிய நெருக்கடிக்கு அவர்களே பணம் செலுத்த வேண்டுமென எங்குமே அறிவுறுத்தவில்லை. டெட்ராய்டை மையமாக கொண்ட வாகனத்துறை உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு 12 பில்லியனுக்கு அதிகமான டாலர்களை லாபமாக ஈட்டினர் என்பது‍ எவரும் மறுக்க முடியாத உண்மை…
டெட்ராயிட் திவால் நிலை ஒரு உலகளாவிய கொள்கையின் வீழ்ச்சியாகும். முதலாளித்துவத்திற்கு‍ உற்பத்தி செய்ய ஒரு‍ இடம் தேவைப்பட்டது. அது‍ டெட்ராய்ட் ஆக இருந்தது. அதைவிட சந்தையை ஒட்டிய நல்ல இடங்கள் கிடைத்ததால் தன் கடையை  கிடைத்த இடத்திலெல்லாம் விரித்தது. அதைவிட குறைந்த சம்பளத்திற்கு‍ ஆட்கள் கிடைத்ததும் அதற்கு‍ மிகவும் வசதியாகிவிட்டது. இதற்கு‍ நம்ம ஸ்ரீபெரம்பதூரே உதாரணம்…
வரலாறு‍ தொடர்ச்சியான முறையில் முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கும் என்றால் புரட்சியின் தேவையே இருக்காது…
உழைக்கும் மக்களின் மிக அடிப்படையான தேவைகளை, முதலாளித்துவத்துடன் நல்லிணக்கமான வகையில் பூர்த்தி செய்வது சாத்தியமற்றதாகும். அடிப்படையான சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய லாயக்கற்ற ஒரு அமைப்புமுறை முதலாளித்துவம். அது‍ முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்னும் செய்தியைத்தான் இந்த திவால் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறை “சர்வ நாசம் விளைவிக்கும் முழுநிறைப் போர்” (Universal war of devastation) என்பதை டெட்ராய்ட் திவால் நிரூபித்திருக்கிறது‍.
சமூகக் கோபம் பெருகிச் செல்லும் சூழ்நிலைகளின் கீழ், தாக்குதலை முன்னெடுத்து, நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு முறைக்கு முற்றிலும் எதிரானதொரு இயக்கத்தை கட்டமைப்பதற்கான சந்தர்ப்பம் தொழிலாளர்களிடத்தில் தான் இருக்கிறது. இதை தொழிலாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும் என்று‍ நம்புவோம்.

   நன்றி ... மாற்று சமூக வலைத்தளம்

கிளைச்செயலர்கள் கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டத் தலைவர் தோழர் V. குமார் தலைமையில் 4.12.2013அன்று  கிளைச்செயலர்கள் 
 கூட்டம் நடைபெற்றது. பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
1 ) ஜனவரி 2014 ற்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது.
2 ) மாவட்ட ,மாநில,அகிலஇந்திய  சங்க நன்கொடை பாக்கிகளை                விரைவாக வசூலித்து மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
3 ) ஜனவரி 7 அன்று சென்னையில் நடைபெறவுள்ள சேவை கருத்தரங்கம் மற்றும் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் வாகன ஏற்பாட்டுடன் 200 தோழர்கள் கலந்துகொள்வது.
        மேற்கண்ட முடிவுகளை  முழுமையாக அமுல்படுத்திட கிளைச்சங்க நிர்வாகிகளும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றி வெற்றிகரமாக்கிட தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
K.T.சம்பந்தம் 
மாவட்ட செயலர்

புதன், 25 டிசம்பர், 2013

இரங்கல்செய்தி!!

நமது DGM(FINANCE) திரு P சாந்தகுமார் அவர்களின் தாயார் இன்று(25-12-2013) காலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் வண்டிபாளையம் முருகன்கோயில் தெருவில் 26-12-2013 அன்று காலை 7 மணியளவில்  நடைபெறும் .

வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்!




டிசம்பர் 25, 2013. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டத்தில், குறிப்பாக கிழக்கு தஞ்சையில் பெரும்பகுதியாக இருந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவான்தாரர்களால் விலங்கு களிலும் இழிவாக நடத்தப்பட்டனர்.
சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. செங்கொடி இயக்கம்தான் அவர்களை தலைநிமிர வைத்தது. தோழர் பி.சீனிவாசராவ் உள்ளிட்ட பொதுவுடமை இயக்க தலைவர்கள் வலுவான போராட்டங்களை நடத்தினர். கூலி உயர்வுக்காக மட்டுமின்றி, சமூக நீதிக்காகவும் சமரசமற்ற போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் வயல்களில் குனிந்தே கிடந்த சேற்று மனிதர்கள் தலைநிமிர்ந்தார்கள். ஆனால் இதனை ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்திருந்தனர்.அவர்கள் நடத்திய கோரத் தாண்டவம்தான் இன்றளவும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் வெண்மணியில் பற்றவைக்கப்பட்ட நெருப்பாகும்.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர் பகுதிகளில்) விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்தலைமையில் போராடினார்கள்.
பேச்சு வார்த்தை மூலம் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் (நிலச்சுவான்தார்கள் சங்கம்) குண்டர்கள் வெண்மணி கிராமத்திலுள்ள விவசாயத்தொழிலாளர்/தலித் மக்களை கொடூரமாகத் தாக்கினர். தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத 44 தலித் மக் கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராமையாவின் குடிசைக்குள் நுழைந்தனர். நிலச் சுவான்தாரின் குண்டர்கள் அந்த குடிசைக்கு வெளியில் தாளிட்டு, குடிசைக்கு தீயிட்டு 44 பேரையும் கோரமாக உயிரோடு கொளுத்தினர். அந்த நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெண்மணி வீரவணக்க நாளாக அனுஷ்டித்து வருகிறது. வெண்மணியில் தலித் மக்களை தாக்குகிற போது, இங்கு பறந்து கொண்டிருக்கும் செங்கொடியை இறக்கி விட்டு நெல் உற்பத்தி யாளர்கள் சங்கக்கொடியை ஏற்றினால் நீங்கள் கேட்கும் கூலியைத் தருகிறோம் என நிலச்சுவான்தார்களின் குண்டர்கள் மிரட் டினார்கள்.
“எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை தலித் மக்கள் மனிதர்களாக நிமிர்ந்து வாழ, தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராடிய இந்த செங்கொடியை இறக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என தலித் மக்கள் உறுதியாக நின்றனர். இதற்குப் பிறகுதான் அந்த கோரச் சம்பவத்தை கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நிலச்சுவான்தார்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் அரங்கேற் றினார்கள். வெண்மணி கிராமம் உள்ளிட்டு, நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அக்காலத்தில் நடந்த போராட்டம் கூலி உயர்வுக்காக மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவச்சுரண்டலுக்கும், தீண்டாமை ஒழிப்புக்குமான போராட்டமாகத்தான் அது நடந்தது. நிலச்சுவான்தார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தையும் அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தோழர் மைதிலி சிவராமன் 1970-ஆம் ஆண்டு கீழத்தஞ்சையில் தலித் விவ சாயத் தொழிலாளர்களையும், சில மிராசு தாரர்களையும் பேட்டி கண்டு எழுதிய கட்டு ரையில் வெண்மணி தலித் மக்கள் மீது நிலச்சுவான்தார்கள் தொடுத்த தாக்குதலின் பின்னணியை தெளிவாகக் கொண்டு வந்துள்ளார். “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் அமைதியாக இருந்தது. விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாகத்தான் உழைத்து வந்தார்கள். என் வீட்டிற்கு கொல்லைப்புறமாக வந்து எங்களோடு அச்சத்தோடு பேசி வந்த விவசாயத் தொழிலாளர்கள் தற்போது செருப்பணிந்து வீட்டிற்கு முன் புறமாக வந்து நிற்கிறார்கள். சரியாக மாலை 5 1/2 மணிக்கு எங்கள் தலைவர் பேசுகிறார், கூட்டம் நடைபெறுகிறது, நாங்கள் செல்கிறோம் என்று சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள்.என்னுடைய வீட்டிற்கு அருகாமையிலேயே செங் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கூட்டம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஆணவம் வந்து விட்டது. எங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான்” - என தோழர் மைதிலி சிவராமனிடம் வெண்மணிக்கு அருகிலுள்ள ஆலத்தம்பாடி கிராமத்தைச் சார்ந்த ஒரு மிராசுதாரர் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
ஆணவம் தலித் மக்களுக்கு அல்ல, நிலச் சுவான்தார்களுக்குதான் என்பது மேற்கண்ட பேட்டியில் தெளிவாகிறது.மேற்கண்ட நிலச்சுவான்தார் அளித்த பேட்டியிலிருந்தே வெண்மணி மக்கள் மீதான தாக்குதலுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். 1940-களில் துவங்கி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒட்டுமொத்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடி வருகிறது. சாதிக் கொடுமைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற வீரமிக்க இயக்கத்தை ஒடுக்க வேண்டுமென்பதே நிலச்சுவான்தார்களின் நோக்கம். நிலச்சுவான்தார்களின் நலன் களுக்கு ஆதரவாக நின்ற அன்றைய மாநில அரசு, இத்தகைய தாக்குதலைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கவில்லை. வெண்மணியில் தலித் மக்களை தாக்கி உயிரோடு கொளுத்தினால் செங் கொடி இயக்கம் அழிந்து விடும் என நிலச் சுவான்தார்கள் மனப்பால் குடித்தார்கள்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், செங்கொடி இயக்கமும் முன்பைவிட முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வெண் மணித் தீயில் வெந்த அந்த 44 கண்மணிகள் தீண்டாமை ஒழிப்புக்கான/ நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் தியாகிகள் ஆனார்கள். இன்றும் தமிழகத்தில் ஏன் நாடு முழுவதும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், தீண்டாமைக் கொடுமையும் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன.தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து போராடியதால்தான் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் ஓரளவு உரிமைகளை பெற முடிந்தது. வர்க்க ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டதால்தான் அது சாத்தியமானது. ஆனால் இன்றைக்கு தலித் மக்களுக்கு எதிராக சில சாதி சங்கத்தலைவர்கள் அணிதிரளும் அவலக் காட் சியை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக, எளியமக்களை சாதியின் பெயரால் மோத விடும் சதி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
கிராமப்புறங்களில் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. விவசாயம் நலிந்து ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புக்காக நகரங் களை நோக்கி குடிபெயர்ந்து செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்து மக் கள் தொகையில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களில் பாதிப்பேர் தலித் மக்கள். மீதி பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதி வித்தியாசம் இல்லாமல் விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தீண்டாமை ஒழிப்புக்காக, நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக போராட வெண்மணி தினத்தில் சூளுரைப்போம்.

நன்றி தீக்கதிர்

தேசிய கவுன்சில் முடிவுகள்

23-12-2013 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்டவை படிக்க :-Click Here

மாறிய சூழ்நிலையில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !

புதிய அங்கீகார விதிகளின் படி இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தேசிய குழுவின் முதல் கூட்டம் 23.12.2013 அன்று நடைபெற்றது.இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டது பிஎஸ்என்எல் வரலாற்றில் முதல் முறையாக இருந்தது. ஊழியர் தரப்பில் இருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 5 உறுப்பினர்கள் நியமனத்தை மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை மேற்கோள் காட்டி, நிர்வாகம் ஏற்று கொள்ளாததால் மீதமுள்ள 5 உறுப்பினர்கள் பங்கேற்க முடியவில்லை. கூட்டம்  ஸ்ரீ A.N.ராய் ,இயக்குனர் ( மனித வளம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது . தோழர் .P அபிமன்யூ, ஊழ்யர் தரப்பு செயலாளர் , தோழர்.இஸ்லாம் அகமது,ஊழியர் தரப்பு தலைவர்  ஆகியோர் ஊழியர் தரப்பை வழி நடத்தினர் விவாதங்கள் மிகவும் பயனுள்ளபடி இருந்தன.பல நியாயமான பிரச்சினைகளை நிறுவனத்தின் சீரழிந்து உள்ள நிதி நிலையை காரணம் காட்டி, நிர்வாக தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தது . பிரச்சனைகளை விவாதித்ததில் மற்றும் எதிர்கொள்வதில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஒட்டு மொத்த ஒற்றுமை இருந்தது.அந்த அணுகுமுறையின் விளைவாக இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இடையே பரஸ்பர விவாதத்தை அடுத்து, நிர்வாகத்திடம் ஒற்றுமையாக பிரச்சனைகள் (ITEMS ) சமர்ப்பிக்கப்பட்டன, இதேபோல், 22-12-2013 அன்று நடைபெற்ற முன் (P r e )தேசிய குழு கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்  தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஒன்றுபட்ட புரிதலை உருவாக்கியது.அதனால் இரு சங்கங்களும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிர்வாகத்தின் முன்னே ஒரே குரலில் பேச உதவியது. இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மேலும் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து பிஎஸ்என்எல் ஐ பாதுகாக்கவும் உதவும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை .
மாநில  சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு

நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசம்.
Photo: நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.

வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசம்.

நன்றி : வினவு & தீக்கதிர்

நன்றி : வினவு & தீக்கதிர்

செவ்வாய், 24 டிசம்பர், 2013

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் . . .

கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
 இன்று மாலை (24.12.2013) 4.00 மணிக்கு கிளைச்செயலர்கள் கூட்டம் நமது தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அனைத்து கிளைச்செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், 23 டிசம்பர், 2013

இரங்கல் செய்தி!!

ஓய்வு பெற்ற தோழர் S காப்ரியல் STS  அவர்கள்    இன்று 23-12-2013 காலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.இறுதி நிகழ்ச்சிகள் கடலூர் சாமிபிள்ளை நகரில் இன்று  23-12-2013 மாலை  நடைபெறும் .



மார்க்கெட் ஷேர் 31-10-2013 வரை



தமிழ் மாநில ஊழியர் சேமநல வாரியக் கூட்ட முடிவுகள்