மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி - அரசு கூட்டு வஞ்சம்!
நன்றி தீக்கதிர்
மாருதி
சுசூகி கார் தொழிற்சாலையின் 147 தொழிலாளர்கள் கடந்த 17 மாதங்களாக
ஹரியானாவில் உள்ள போண்ட்சி சிறையில் அடைபட்டுக்கிடக்கின்றனர். 17
மாதங்களாகியும் இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும்
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது வாரண்டோடு மறைந்து வாழ்கின்றனர். எப்போது
வேண்டுமானாலும், எவ்வளவு பேரை வேண்டுமானாலும் சிக்கவைக்கும் வகையில்
வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் சட்டப்படியான எந்தவாய்ப்பும் வழங்கப்படாமலே வெடுக்கென்று
வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.
என்ன குற்றம் ?
மூவாயிரம்
குடும்பங்கள் நிலைகுலைந்து நிற்கின்றன. குரங்கு பிய்த்தெறிந்த
குருவிக்கூட்டைப் போல சிறையில் உள்ளோரின் குடும்பங்கள் சிதைந்து
சிதறிக்கிடக்கிறது. திருமணமான புதுத்தம்பதிகள், கர்ப்பிணியான மனைவி, சிறு
கைக்குழந்தைக்கார தாய், தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப முடியாத தளிர்கள்,
பிள்ளைகள் நிழலில் வாழ்ந்திருந்த முதியோர், திருமணம் நின்று போனவர்கள் என
இவர்களின் நிலையை நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கிறது.இந்த மாருதி தொழிலாளர்கள்
என்ன குற்றம் புரிந்தனர்? பேரிடி போன்ற கொடுந்தாக்குதல் அவர்கள் தலையில்
ஏன் இறங்குகிறது?
சிறை போல...?
மாருதி தொழிற்சாலை இந்தியாவில்
கார் உற்பத்தியில் முதன்மை நிறுவனம். மலைபோல் லாபம் குவிக்கும்
செல்வச்சுரங்கம். இதை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தொழிலாளர் ஊதியமோ
சொற்பத்திலும் சொற்பம். இதில் பெரும்பாலோர் நிரந்தரமற்ற, ஒப்பந்த மற்றும்
கேஷூவல் தொழிலாளர்கள். நிற்க நேரமில்லாத இடைவெளியில்லாத வேலை. 56 நொடிக்கு
ஒரு கார் என்று சோளப்பொறி போல பொறித்துத்தர வேண்டும். கக்கூஸ் போகக்கூட
கன்டிசன்கள். தேநீர் இடைவேளை 7 நிமிடந்தான். இந்த நேரத்தில் தான்
அதிகாரிகள் விசாரிப்புகளும் நடக்கும்.
கிடைக்கிற கொஞ்சம்
சம்பளத்திலும் பாதி உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கப்படி. எனவே பாதி
சம்பளத்திற்கு உறுதியோ உத்தரவாதமோ இல்லை.நிர்வாகத்தோடு
ஒத்துப்போய்ஊளைச்சதையை வளர்த்துக்கொண்டிருந்த சிலர், சங்கத்தலைமை
என்றுகூறிக்கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமான துரோகங்களை இழைத்து வந்தனர்.
இங்கேயும் இதை நாம் கண்டு வருகிறோம்.இதை எதிர்த்து உண்மையான சங்கத்தை
உருவாக்கும் முனைப்பில் மாருதி தொழிலாளர்கள் இறங்கினர். பெரும்பான்மைத்
தொழிலாளர்கள் கூடி சங்கம் அமைத்தனர். இது தான்மாருதி தொழிலாளர்கள்
செய்தபெரிய குற்றம். அரசியலமைப்புச்சட்டம் வழங்கும் உரிமையை பயன்படுத்தியது
தான் இவர்கள் செய்த பாவம்.
மர்மச்சாவு
நிர்வாகத்தின்
சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் உண்மையான நிலை எடுத்தால் பெரும்
அடக்குமுறை ஏவப்படும் என்பதன் சான்றுதான் மாருதிக் கொடுமை. ஒரு அதிகாரி
ஜாதியைச் சொல்லி ஒரு தொழிலாளியை பலர் முன்னிலையில் தேநீர் இடைவேளையில்
திட்டினார். அந்தத்தொழிலாளி இதைஆட்சேபித்தான். உடனே அவன் சஸ்பென்ட்
செய்யப்பட்டான். இந்த ராணுவ பாணி அடக்குமுறையை மற்ற தொழிலாளர்கள் கூட்டாக
எதிர்த்து நியாயம் கேட்டனர். இதுதான் அங்கு நடந்த போராட்டத்தின் உடனடி
காரணம். ஏற்கனவே தொழிற்சாலைக்குள் வைத்திருந்த அடியாட்களைக்கொண்டு சங்க
நிர்வாகிகளை நிர்வாகம் தாக்கியது. இந்த நிகழ்வில் ஒரு அதிகாரி
உயிரிழந்தார். அவர் மீது பலத்த காயம்ஏதுமில்லை. எனவே தொழிலாளர்கள்
அவரைத்தாக்கிய பிரச்சனையே இல்லை. அவர் மரணம் மர்மமாகவே உள்ளது.
கொடுங்கோன்மை
இது
தொழிலாளர்கள் செய்த கொலை என்று புனைந்து கூறித்தான் பெருந்தாக்குதலை
நிர்வாகம் கட்டவிழ்த்துள்ளது. இதற்கு அரியானாவின் காங்கிரஸ் அரசாங்கம்
எல்லா வகையிலும் துணை நிற்கிறது. 2005ல் ஹோண்டா ஸ்கூட்டர் நிறுவனத்தில் இது
போன்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் கைதும், வேலைநீக்கமும் செய்யப்பட்டனர்.
அன்று மத்தியில் இடதுசாரிகள் துணையில் ஆட்சி இருந்தது. இடதுசாரிகளின் தொடர்
அழுத்தத்தால் அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இன்று முதலாளித்துவ
கட்சிகளின் தடையற்ற தர்பாரில் 17மாதமாக ஜாமீன்கூட
மறுக்கப்படுகிறது.விலைவாசியைக் கட்டுப்படுத்த துப்பற்றவர்கள், முதலாளிகளின்
ஊழல் பண மூட்டையில் புரண்டு துய்ப்பவர்கள், ஜனநாயக போர்வையில்
முதலாளித்துவ சேவையாற்றுபவர்கள், முதலாளிகளையும் சுரண்டலையும் காப்பதே
சட்டம் ஒழுங்கைக் காப்பதாகும் என்று செயல்படுவர்கள், அமைப்பாக
தொழிலாளர்கள் பலம் பெறுவதை ஏற்கமாட்டார்கள். கிருஷ்ணனை ஒழிக்க கம்சன்
பச்சைக்குழந்தைகளை வேட்டையாடியதைப்போல தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக
கொடுங்கோன்மை புரிவார்கள் அவர்கள்.
தனித்துவிடோம் !
அவ்வப்போது
வருகின்ற இப்படிப்பட்ட தாக்குதலை தொழிலாளிகளின் ஒன்றுபட்ட சக்தி
புரட்டிப்போட்டு புறந்தள்ளியிருக்கிறது.தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமை,
காண்ட்ராக்ட் ஒழிப்பு, பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்பு போன்ற முழக்கங்களோடு
தமிழகத்தில் நாம் களத்தில் நிற்கிறோம். அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடி
வருகிறோம். இப்போது மாருதி தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்
தனித்துவிடப்படலாகாது !மாருதி தொழிலாளியின் வாழ்வுரிமையையும், சட்ட
உரிமைகளையும் பறிக்காதே என தமிழகமெங்கும் நமது ஆதரவுக்குரல் ஓங்கி
முழங்கட்டும் ! மாருதிப்போராட்டம் நம் அனைவரின் போராட்டம் என்பதே
செய்தியாகட்டும் !
நன்றி தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக