இந்தியா
பொருளாதார வளர்ச்சியில் 9 சத விகிதத்தை எட்டியுள்ளது. வறுமை குறைக்கப்
பட்டிருக்கிறது. வேளாண்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது என மூன்று
ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர்
மன்மோகன் சிங் சாதனைகளை அடுக்கியுள்ளார்.அவரின் சொல்லுக்கும் உண்மைக்கும்
வெகுதூரம் இருப்பதை பிரதமரால் அறிவதுகொஞ்சம் சிரமம்தான். ஆனால் புள்ளி
விபரங்களுக்குள்ளாவது ஒற்றுமை இருக்க வேண்டாமா? கடந்த இரண்டு வருடமாக
இந்தியப் பொருளாதாரம் நிதிப்பற்றாக்குறையாலும், நடப்புக் கணக்குப்
பற்றாக்குறையாலும் திணறிக் கொண்டிருக்கிறது. தலைமைக் கணக்கு தணிக்கைக் குழு
அளித்திருக்கும் அறிக்கையின் படி நடப்புக் கணக்கு நிதிப் பற்றாக்குறை
இவ்வாண்டு மார்ச் வரையிலான பட்ஜெட்மதிப்பீட்டில் 94 சதவிகிதத்தை இப்போதே
எட்டியிருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4.8
சதவிகிதத்திற்கு மேல் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு அபாய மணி ஒலிக்க
துவங்கியிருக்கிறது. மறுபுறம் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வின் காரணமாகவே
மக்கள் எங்களை 4 மாநிலத் தேர்தல்களில் முச்சந்திக்கு தள்ளியிருக்கின்றனர்
என பிரதமரே ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கையில்
பொருளாதார வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பதை அவரே
தெளிவாக்கியிருக்கலாம். மில்லியன் ஃபார்மர்ஸ் இனிஷியேட்டிவ் திட்டம் என்ற
பெயரில் ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்கு ரூ.3000 கோடியை ஒதுக்கினார் பிரதமர்.
ஆனால் அதனை ரிலையன்ஸ், ஐடிசி உள்ளிட்ட 20 பெரும் கார்ப்பரேட்
கம்பெனிகளிடம் கொடுத்திருக்கிறார்.
இதுதான் வேளாண்துறையின்
வளர்ச்சி. விவசாயிகள் பேரிலும் கார்ப்பரேட்கள் வளர்ச்சி பெறுவதையே நமது
பிரதமர் ஒட்டுமொத்த வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார் போலும்.அதுமட்டுமல்ல
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.8 கோடியாக
குறைந்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் ஏன் 2013 ம்
ஆண்டு ஐ.நாவின் கணக்குப்படி உலக அளவில் உள்ள 187 நாடுகளில், இந்தியா மனித
மேம்பாட்டுக் குறியீட்டில் மிகவும் பின்தங்கி136 வது இடத்தில் இருக்கிறது.
தனியார் பள்ளிகளில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி
சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டுவது போல், வறுமைக் கோட்டிற்கான வரையறையில்
2400, 2100 கலோரிகள் என்ற வரையறையை கிராமப்புறத்திற்கு 1999 கலோரி என்றும்,
நகர்ப்புறத்திற்கு 1770 கலோரி என்றும் கணக்கிட்டு வறுமையின் அளவை
குறைத்து, வறுமையைக் குறைத்திருக்கின்றனர். இதுதான் மத்திய அரசின் வறுமை
ஒழிப்பின் லட்சணம்.
இந்த அரசு ஊழலை ஒழிப்பதில் உறுதியாக
இருக்கிறதாம். அதுதான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் வெளிவந்த உலகளாவிய
ஊழல்கள். பிரதமர் உள்ளிட்டோருக்கு வாங்கப்பட்ட ஹெலிகாப்டரில் கூட ஊழல்
கறைபடிந்திருப்பது தெரிய வந்ததால் முந்தைய நாள்தான் அந்த ஒப்பந்தத்தை ரத்து
செய்தார் என்பதைக் கூட வசதியாக மறைத்து விட்டார். அதைவிட பிரதமருக்கு
ஆனந்தமே, இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் இறையாண்மையை
காவுகொடுக்கும் விதமாகஅமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம்தான் என
புளகாங்கிதம் அடைந்துள்ளார். அதிலும் அணு விபத்து ஏற்பட்டால் அமெரிக்க
கார்ப்பரேட் நிறுவனங்கள் முழு இழப்பீட்டையும் தர வேண்டியதில்லை என்பதும்
ஒருசரத்து. அதாவது இந்திய மக்களின் உயிர்களை காவு கொடுத்தாவது
கார்ப்பரேட்களின் வளர்ச்சியை உறுதி செய்வோம் என்பதுதான் பிரதமரின்
உறுதிப்பாடு. அந்த வகையில் காங்கிரஸ், தலைமையிலான மத்திய ஆட்சியில்
கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சிதான் பெற்றிருக்கிறது.
நன்றி தீக்கதிர் 04.01.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக