அகமதாபாத்,ஜன.7-குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினார்கள்.
குஜராத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து மோடி அரசு மறுத்து வருகிறது. இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளையும் அமல்படுத்த குஜராத் அரசு மறுத்து வருகிறது. தொடர்ந்து சமூகத்தில் பின் தங்கியிருக்கும் துப்புரவு தொழிலாளர்களை கொத்தடிமைகள் போலவே மோடி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்து, காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை மோடி அரசு மிரட்டி பணிய வைக்கவும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். அல்லது துப்புரவுப் பணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவோம். வேறு நபர்களுக்கு வேலை வழங்கி விடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தொடர்ந்து தொழிலாளர்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். தொடர்ந்து 8-வது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக மோடி அரசை கண்டித்து அகமதாபாத் நகரில் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர்.
சிலைக்கு பல்லாயிரம் கோடியா?
தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் படேல் சிலை அமைக்க பல கோடி ரூபாய்களை அரசு வீணடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏழை மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக நாடு முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் துப்புரவுத் தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை.இதனால் ஏமாற்றம் அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம ரோட்டில் அவர்கள் பேரணியாக சென்றார்கள். வழியில் உள்ள காந்தி சிலைக்கு அவர்கள் பாலாபிஷேம் நடத்தினார்கள். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசின் அசுத்தத்தை கழுவும் வகையில் பாலாபிஷேகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பேரணியில் நகராட்சி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், குஜராத் தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மீது தேர்தலுக்காக போலி அன்பு காட்டும் மோடிக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.பேரணி காந்தியின் சபர்மதி ஆசிரமம் அருகில் சென்று முடிவடைந்தது. அங்கு அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள், பட்டேல் சிலை அமைப்பதற்காக குஜராத் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது. அந்த பணத்தை குஜராத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடலாம் என்று வலியுறுத்தினர்.
நன்றி தீக்கதிர்
நன்றி தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக