வெள்ளி, 24 ஜனவரி, 2014

விவசாய நிலங்களிலும் அந்நிய நேரடி முதலீடா?


சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, வெளியேறுவதற்கு முன் உலகச் சந்தை சக்திகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடத் துடிக்கிறது. ஏற்கெனவே சில்லறை வர்த்தகம், காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, மருந்து ஆகிய துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டது மன்மோகன் சிங் அரசு. விவசாயத்தை மட்டும் விட்டுவைப்பதா என்று இப்போது விவசாய நிலங்களில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து ஆராய முடிவு செய்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

இதற்காக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத், நிதியமைச்சர் ப. சிதம்பரம், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள சட்டத்தின்படி விவசாய நிலங்களில் நேரடி அந்நிய முதலீடு தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களும் கூட விவசாய நிலங்களை வாங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை. விவசாய நிலங்களை பெரு நிறுவனங்கள் மனை வணிக வளாகங்களாக மாற்றிவிடும் என்பதாலேயே அப்படியொரு சட்டப் பாதுகாப்பு. நிலங்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ஊக வணிகமாகவும் மாற்றிவிடுவார்கள் என்பதாலும் அந்நிய முதலீட்டாளர்கள் இதில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நோக்கங்களையெல்லாம் சிதைக்க நினைக்கிறதா மத்திய அரசு?டுனீஷியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இது அனுமதிக்கப்பட்டது. 

காலப்போக்கில், அந்நாடுகளின் விவசாயிகள் தங்கள் நிலங்களை வாங்கிய அந்நிய நிறுவனங்களின் கூலித் தொழிலாளர்களாகிவிட்டனர். தென்கொரியாவின் தாவூ என்ற நிறுவனம் மடகாஸ்கரில் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் டன் மக்காச்சோளம் பயிரிட முடிவு செய்தபோது அது மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டது. விவசாய நிலங்களில் அந்நிய நேரடி முதலீடு என்பது நில அபகரிப்பேயன்றி வேறொன்றுமில்லை.விவசாய நிலங்கள் வேறு நோக்கங்களுக்கு மாற்றப்படுவதால் உணவு நெருக்கடி ஏற்படுவதோடு உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் கழகம் எச்சரிக்கிறது. ஏற்கெனவே விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பதிலாக கட்டடங்கள் முளைத்திருக்கின்றன. பல பெரிய மனைவணிக நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் கிராமப்புற நிலங்களை வாங்கி, வீட்டடி மனைகளாக மாற்றி, பலரிடமிருந்து மனைகளுக்காகவும், வீடுகளுக்காகவும் பணம் பெற்றுள்ளன. சட்டத்தின் தடையால் பல இடங்களில் கட்டடங்கள் எழாமலுள்ளன. 

அந்த நிறுவனங்களுக்கு உதவுவதுதான் அரசின் நோக்கமா? விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களாகப் புலம்பெயர்வதை வேகப்படுத்துவதற்கே அந்நிய நேரடி முதலீடு உதவும் என்பதால், அமைச்சர்கள் குழுவும், அரசும் அதை அனுமதிப்பதில்லை என்ற முடிவையே எடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் இந்த முடிவை தடுக்க மக்கள் சக்தி வலுப்பெற வேண்டும்.
நன்றி தீக்கதிர்  24.01.2014

கருத்துகள் இல்லை: