வெள்ளி, 5 டிசம்பர், 2014

மோடி பிரதமர் ஆகிவிட்டால் நாடே தலைகீழாக மாறிவிடும் என்று தேர்தல் சமயத்தில் ஆளாளுக்கு அடித்துவிட்டனர் அவரது கட்சியில். ஆனால் அவரோ பதவி ஏற்றதும் இந்தியர்கள் கையில் துடைப்பத்தைக் கொடுத்துவிட்டு, நாளுக்கு ஒரு நாடு என விமானம் ஏறிக்கொண்டிருக்கிறார்.ஆனால் அந்த பயணங்களுக்காக அரசால் சொல்லப்படும் காரணங்கள்’ மட்டுமே லேசாக இடிக்கிறது.சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர். அவருடன் அவரது நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான அடானி குழுமத் தலைவர் கௌதம் அடானியும் சென்றார். இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், ஆஸ்திரேலியாவில் பிரமாண்டமான நிலக்கரி சுரங்கம் அமைக்கும் குத்தகை ஒன்றை அடானி பெற்றிருந்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அந்நாட்டின் மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து இப்போது வரை கடுமையாகப் போராடி வருகிறார்கள். எந்த நாடுதான் மக்கள் போராட்டங்களை மதித்தது? வழக்கம்போல ஆஸ்திரேலியாவும் மக்கள் போராட்டங்களுக்கு காதை கொடுக்காமல் அடானிக்கு அனுமதி வழங்கி அங்கு சுரங்கப் பணிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில்தான் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தில் அடானியும் இடம் பிடித்தார். இந்த பின்னணி குறித்து ஊடகங்களில் அரசல் புரசலாக செய்திகள் அடிபட்டன. என்றாலும் இன்னும் மோடிமேனியா முழுமையாக தீர்ந்துவிடவில்லை என்பதால் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படவில்லை. ஆனால் இப்போது அடானி விஜயத்துக்கான உண்மையான காரணம் இதுதான் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம், அடானி நிறுவனத்தின் ஆஸ்திரேலிய சுரங்கப் பணிகளுக்காக சுமார் 6,100 கோடி ரூபாய் கடன் அளிக்கும் முடிவை அறிவித்துள்ளது. மோடி அரசு பொறுப்பேற்றப் பிறகு வழங்கப்படும் முதல் பிரமாண்ட கடன் தொகை இது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மற்ற வங்கிகள் அனைத்தும் அடானிக்கு கடன் தருவதை தவிர்த்து ஒதுங்கி இருக்கின்றன. காரணம் அதன் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தின் திட்ட மதிப்பு, அங்கு எதிர்கொள்ளும் சிக்கல்கள், சர்வதேச விலை நிலவரம் போன்றவற்றை வைத்து கணக்கிடும்போது இது சிக்கலானது என்பதை அவை திடமாக நம்புகின்றன. பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன என்றபோதிலும் இந்திய அரசோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவோ இதைப்பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை. ஏனென்றால் அடானி, பிரதமர் மோடியின் அத்யந்த நண்பர். பிரதமரின் நண்பர் கேட்கும்போது தரமுடியாது எனச் சொல்லலாமா..அல்லது இவ்வளவு பெரிய தொகையை கடனாக பெற பிரதமரின் நண்பரைத் தவிர வேறு யாருக்கு தகுதி இருக்கிறது. 
ஆப் கே பார் மோடி சர்க்கார்!
நன்றி :-விகடன் செய்திகள் 

கருத்துகள் இல்லை: