செவ்வாய், 2 டிசம்பர், 2014

தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கிறது மோடி அரசு மாநிலங்களவையில் தபன்சென் பேச்சு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மணிக்கு 2000 ரூபாய் அளவிற்குப் பங்களிப்பினைச் செய்திடும் தொழிலாளிக்கு மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் ஊதியம் கிடைப்பதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கூறினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் 2011ஆம் ஆண்டு சட்டங்கள் (சில நிறுவனங்கள் மாதாந்திர அறிக்கைகள் அனுப்புவது மற்றும் பதிவேடுகள் பராமரிப்பதற்கு விலக்கு) திருத்தச் சட்டமுன்வடிவு மீது தபன்சென் பேசியதாவது: தற்போதைய தொழிலாளர் துறை அமைச்சர் இந்த அமைச்சகத்திற்கே புதியவராவார்.
இந்தச் சட்டமுன்வடிவு குறித்து அமைச்சர் கூறுகையில் இது தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசி கருத்தொருமித்து தாக்கல் செய்யப்படுவதாக அறிக்கை அளித்திருக்கிறார். இது முற்றிலும் தவறான ஒன்று. எனவே அது பதிவேடுகளில் இருக்கக்கூடாது. தயவுசெய்து அதை நீக்கிவிடுங்கள். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவருகிறீர்கள் என்றால் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் இதுவரவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். முத்தரப்பு மாநாட்டிலும் ஒத்த கருத்து ஏற்படவில்லை.நான் தொழிற்சங்க இயக்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர். நான் சிஐடியு-வின் பொதுச்செயலாளராக இருக்கிறேன்.
தொழிலாளர்கள் சம்பந்தமாக ஏராளமான சட்டமுன்வடிவுகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றன. மக்களவையிலும் ஏராளமான சட்டமுன்வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தச் சட்டமுன்வடிவு கொண்டு வருவதற்குப் பின்னேயிருக்கும் ஒட்டுமொத்த காரணங்கள் என்ன? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சிறந்த முறையில் சேவை செய்துவரும் தொழிலாளர்களின் நலன் காக்கவா இதனைக் கொண்டு வருகிறீர்கள்? நிச்சயமாக தொழிலாளர்களுக்காக இல்லை. மாறாக, முதலாளிகளின் சார்பாகத்தான் இதனை நீங்கள் கொண்டு வருகிறீர்கள். தொழிலாளர்களை முதலாளிகளின் கிடிக்கிப்பிடியில் வைக்கக்கூடிய விதத்தில் நீங்கள் இதனைக் கொண்டு வருகிறீர்கள்.
முதலாளிகளின் தயவில் வாழக்கூடிய விதத்தில் நீங்கள் தொழிலாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதே சட்டமுன்வடிவு ஐமுகூ அரசாங்கத்தின் காலத்திலும் கொண்டு வரப்பட்டது. அப்போதும் இதுகுறித்து நாங்கள் தொழிலாளர் அமைச்சருடன் பேசியிருக்கிறோம். எங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறோம். எனவே கருத்தொற்றுமை என்பது கிடையாது. நீங்கள் அமைச்சகத்திற்குப் புதியவராக இருப்பதால் உங்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தச் சட்டமுன்வடிவு முதலில் 2005ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களை மீறும் வேலை அளிப்பவர்கள் (முதலாளிகள்) தண்டனையை அதிகரிக்கும் விதத்தில் அது இருந்தது. அப்போதிருந்த நாடாளுமன்ற நிலைக்குழு இதனை ஒருமனதாகப் பரிந்துரைத்தது.
பின்னர் அரசுக்கு இதனைத் திருப்பி அனுப்பியது. முத்தரப்பு அளவில் குறிப்பாக தொழிற்சங்கங்களின் ஒப்புதல் பெற்று இதனை சட்ட முன்வடிவாகக் கொண்டுவர வேண்டும் என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பியது. அந்த அறிக்கை 2005 டிசம்பர் 25 அன்று அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2005ஆம் ஆண்டு சட்டமுன்வடிவு விலக்கிக் கொள்ளப்பட்டு இப்போது 2011ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அப்போதிருந்த தண்டனைப்பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்ட முன்வடிவு குறித்தும் தொழிற்சங்கங்களுடன் கருத்தொற்றுமை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கருத்தொற்றுமை ஏற்பட்டதாக அமைச்சர் அறிக்கை அளித்திருப்பது உண்மையல்ல. தொழிலாளர் அமைச்சகத்தின் ஆண்டறிக்கை இந்தியத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் அடையாளம் கண்டு பதிவு செய்திருக்கிறது. அதன்படி இந்தியத் தொழிலாளி ஒரு மணி நேரத்திற்கு 4.17 அமெரிக்க டாலர் ஈட்டித்தருகிறார்.
அதாவது மணிக்கு 250 ரூபாய் அல்லது ஒரு நாளைக்கு 2000 ரூபாய் ஈட்டித்தருகிறார். ஆனால் அவருக்கு அளிக்கும் குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு? அதிகபட்சம் மாதத்திற்கு 5000 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் மட்டுமே. ஒரு நாளைக்கு 2000 ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்து தரும் தொழிலாளிக்கு இதுதான் ஊதியம். இந்த விவரங்களை நான் அளிக்கவில்லை. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஆண்டறிக்கை அளித்துள்ள தகவலாகும். நீங்கள் தில்லியைச் சுற்றியுள்ள எந்தவொரு தொழிற்சாலைக்கு வேண்டுமானாலும் போய் பாருங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் பதிவேடுகளில் 20 பேர் மட்டுமே வேலை செய்வதாக இருக்கும். இதுகுறித்து அரசுக்கு முறையீடுகள் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் இன்றைய நிலைமை. இப்போது அரசாங்கமானது அத்தகைய சட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில் இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு திருத்தங்களைத் தொழிலாளர்களின் நலன்களுக்காகக் கொண்டு வருகிறீர்களா? உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகக் கொண்டு வருகிறீர்களா? அரசாங்கத்தின் விவரங்கள் காட்டுவது என்ன? நிறுவனங்கள் ஆண்டு அறிக்கைகள் அனுப்புவதும், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்த பதிவேடுகளைப் பராமரிப்பதும் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இவற்றை நிர்வகிக்க எவரேனும் தவறினால், அவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் அதனைச் செய்யவில்லை. மொத்தம் செயல்படும் நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்கள் இவ்வாறு ஆண்டு அறிக்கைகள் அனுப்புகின்றன. அரசாங்கத்தின் அறிக்கையின்படி சுமார் 25.9 சதவிகித அளவிற்குத்தான் இவ்வாறு அறிக்கைகள் அனுப்புகின்றன. 75 சதவிகித தொழில் நிறுவனங்கள் அவ்வாறு அனுப்புவதில்லை. இதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. எப்போதுமே இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் இருந்ததில்லை. முதலாளி வர்க்கத்தை தாஜா செய்வதற்காகத்தான் இவ்வாறு கூறப்படுகிறது. 75 சதவிகித நிறுவனங்கள் எவ்வித அறிக்கையும் அனுப்புவதில்லை. இதுதான் எதார்த்தநிலை. இப்போது நீங்கள் விதிவிலக்கு அளிக்கிறோம் என்ற பெயரில் இருக்கும் சட்டத்தை மேலும் நீர்த்துப்போக வைத்திருக்கிறீர்கள். யாருக்காக? நாட்டிலுள்ள இதர தொழிலாளர் சட்டங்கள் அனைத்திற்கும் எதிரான சட்டமுன்வடிவாக இது இருக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவு உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம். எனவே, இதனை நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கு ஒரு துல்லியமான திருத்தத்தை நான் அளித்திருக்கிறேன். அதனைஅரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தபன்சென் கூறினார
நன்றி:தீக்கதிர் 2.12.2௦14

கருத்துகள் இல்லை: