தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு கூட முடியவில்லை, அதற்குள் தனியொரு கார்ப்பரேட்டுகளுக்கு நிலம் இல்லையெனில் விவசாயிகளை அழித்திடுவோம் என தனி மனிதர்கள் சிலர் சேர்ந்து ஜகத்தினை பட்டினியால் அழிக்கும் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தியா பிரிட்டிசாரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது 1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தது.
அப்போதைய காலகட்டத்தில் இது மிகக் கொடூரமான சட்டமாகக் கருதப்பட்டது. காரணம் இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது, அரசின் செயல்பாட்டிற்கு எந்தக் கேள்வியும் இல்லாமல் நிலத்தைப் பறிக்க முடியும். இதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக முடியும், இழப்பீடு வேண்டுமானாலும் கேட்க முடியும். ஆனால் நிலம் பறிபோவதை யாராலும் தடுக்க இயலாது. 1894ம் ஆண்டு சட்டத்தில் கூட ஆற்றுப்பாசன வசதி, ஏரிப்பாசன வசதி, வாய்க்கால் பாசன வசதி உள்ள நிலங்களை வேறு காரணங்களுக்காக கையகப்படுத்த முடியாது என்றிருந்தது.
2013ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. அப்போது இன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விவாதத்தின் போது விவசாயிகளை பலியிட்டு தொழில்வளர்ச்சி கூடாது என்று பேசினார். அதிமுக கட்சியினரும் வாக்கெடுப்பின்போது இதை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். இன்றோ அதிமுக ஆதரவோடு விவசாயிகளுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பு வளையங்களும் உடைத்தெறியப்படுகிறது. `வளர்ச்சி’ கவர்ந்திழுக்கும் சொல்தான். ஆனால் யாருக்கு என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை.
மக்களின் வாழ்க்கை நிலை
இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 60சதவீதம் அளவிற்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களாகவே மக்கள் உள்ளனர். உலகிலேயே அதிக கால்நடை எண்ணிக்கையையும் (281 மில்லியன்), வளர்ப்பையும் கொண்ட நாடு இந்தியா. வல்லரசாக வேண்டும் என்று கூறும் இந்தியாவில் 40சதவீதம் குழந்தைகளுக்கு உணவில்லாத சூழல் இன்றும் நிலவுகிறது.
இதுவரை 2லட்சத்து 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களது சராசரி வயது 25 முதல் 45 வரை. 2002 முதல் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஐம்பதாண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 35 சதவீதத்திற்கும் மேலான நிலங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக இதுவரை இழப்பீடே கொடுக்கப்படவில்லை,
அதிர்ச்சியளிக்கிறது. 1993-94ல் 25சதவீதமாக இருந்த வேளாண் உற்பத்தி 2005-06ம் ஆண்டுகளில் 13.03சதவீதமாக குறைந்துள்ளது. 2050ல் நாட்டின் மக்கள்தொகை 160கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை 10சதவீதம் உயர்ந்தால் உணவு உற்பத்தியின் தேவை 15சதவீதமாக உயர வேண்டும் என்று அரசின் கணக்கீடு கூறுகிறது. இத்தகைய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் வீடு, கார் வாங்க அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 9.5சதவீதம் வரை, விவசாயத்திற்கான கடன் வட்டி 11.5 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை உள்ளது. நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மக்களது வாழ்வாதாரப் பிரச்சனையாக பார்க்காமல் பாஜக அரசு கார்ப்பரேட்களின் கவுரவ பிரச்சனையாக மட்டுமே பார்க்கின்றனர்.
அரசு கூறும் முதலீடு, வேலைவாய்ப்பு என்பது வெறும் பசப்பு வார்த்தையே. முதலீடு, வேலைவாய்ப்பு என்று கூறி நோக்கியாவையும் பாக்ஸ்கானையும் கொண்டுவந்தார்கள். ஏழை மக்களிடம் நிலங்கள் பறித்துக் கொடுக்கப்பட்டது. அரசின் மூலம் மின்சாரம், தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. வரியில்லாமல் தொழில் நடத்தினர். வேலைவாய்ப்பை வழங்கினர். இன்று வேலை பார்த்தவர்களின் நிலை என்ன? என்பதை இந்நாட்டு மக்களே அறிவர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வே இருண்டுபோய் கிடக்கிறார்கள். இதுதான் வளர்ச்சியா? வேலைவழங்கும் லட்சணமா? நிலத்தைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் இவர்கள் கங்கையை சுத்தம் செய்தும், நதிகளை இணைத்தும் என்ன செய்யப்போகிறார்களாம்?- எம்.மகேஷ் நன்றி : தீக்கதிர் 04.04.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக