சிதம்பரம்
சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கடலூர்
மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல் - எப்.எஸ் என்ற தனியார்
நிறுவனம் அமைந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ``மக்களுக்காகத்தான்
திட்டங்களே தவிர - திட்டங்களுக்காக மக்கள் இல்லை' என்ற முதலமைச்சரின்
அறிவிப்புக்கு விரோதமாக இத்தொழிற்சாலைக்கு பல சலுகைகள் அளித்து வருவது
வேதனையளிக்கிறது.இந்தத் தொழிற்சாலை கனரக வாகனங்கள் கிராம சாலைகள் வழியே
சென்றதால் கரிகுப்பம் - புதுகுப்பம் சாலை, கரிகுப்பம் கிராம சாலைகள்,
கரிகுப்பம் மற்றும் பஞ்சங்குப்பம் பாலம், பஞ்சங்குப்பம் - புதுகுப்பம்
சாலை, பெரியபட்டு - புதுச்சத்திரம் கடற்கரை சாலைகள் அனைத்தும் சேதமடைந்து
மக்கள் வாகனங்களில் செல்லமுடியவில்லை.
புதுகுப்பம் - கரிகுப்பம்
சாலையை அடைத்து காம்பவுண்டு சுவர் எழுப்புவதால் புதுகுப்பம் மக்கள் 4 கி.மீ
சுற்றிவரவேண்டியுள்ளது. மேலும் கடல் அலைகள் எழும்பும் நேரத்தில்
ஊரிலிருந்து வெளியேற முடியாமல் கிராமமே அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கரிகுப்பம், பஞ்சங்குப்பம், புதுகுப்பம் ஆகிய கிராமங்களின் சுடுகாடும்
சுடுகாட்டு பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.ராட்சச குழாய்க்
கிணறுகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் இப்பகுதியில் சுமார் 50
கிராமங்களில் குடிநீர் பாதித்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் நிலை
ஏற்பட்டுள்ளது.கரிகுப்பம் கிராமத்தை சுற்றிலும் முள்வேலி அமைந்துள்ளதால்
கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பிட வசதியின்றி சொல்லொண்ணா
கொடுமைக்குள்ளாகியுள்ளனர். மேலும் அனல் மின்நிலையம் செயல்படும் போது
நிலக்கரி துகள்கள் குடிசை வீடுகளில் படிந்து மக்களின் உணவு மற்றும்
குடிநீர் போன்றவற்றை பாதிப்பதோடு சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பலதலைமுறைகளாக
விவசாயிகள் அனுபவித்து சாகுபடி செய்துவரும் அரசு புறம்போக்கு நிலங்களை
விவசாயிகளுக்கு தெரியாமலேயே கம்பெனிக்கு தாரைவார்த்திட மாவட்ட நிர்வாகம்
ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிகிறோம். சாதாரண ஏழை விவசாயிகள் வாழ்விழந்து
தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.விவசாயத்தையும் விவசாய கூலி வேலையையும்
இழந்துள்ள கிராமங்களுக்கு கம்பெனி நிர்வாகம் கட்டுமான பணிகளில்கூட வேலை தர
மறுத்து வருகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள தனியார்
நிர்வாகத்திற்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி வரும் தமிழக அரசு சுமார்
15க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த ஏழை மக்களின் வேதனைகளை செவிமடுக்க
மறுத்து வருகிறது. மேற்கண்ட பிரச்சனை குறித்து மூன்று முறை தமிழக மின்துறை
அமைச்சரின் முன்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்களின்
நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தது.
ஆனால் ஏற்றுக்கொண்ட ஒன்றைக்கூட நிர்வாகம் நிறைவேற்றி தர
மறுத்துவிட்டது.மீண்டும் அமைச்சர் தலையிட்டு தீர்வுகாண பலமுறை
வலியுறுத்தியும் இப்போதுவரை நடைபெறவில்லை.
எனவே கீழ்கண்ட
கோரிக்கைகளை நிறைவேற்றி கிராமப்புற ஏழை மக்களது வாழ்வை பாதுகாத்திடுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.கரிகுப்பம் கிராமத்தில் குடிசை வீடுகளை மாற்றி அரசு
மற்றும் கம்பெனி நிர்வாகத்தின் பங்களிப்போடு தரமான வீடுகளை - பசுமை
வீடுகளுக்கு நிகரான வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும். தற்போது அரசின்
மானியம் மற்றும் கம்பெனியின் பங்களிப்போடு தரகுறைவாக கட்டப்படும் கழிவறைகளை
தரமானதாக கட்டித்தர வேண்டும். மிலி-திஷி தமிழ்நாடு பவர் கம்பெனி
லிமிடெட் அமைந்து வரும் இடத்தில் விவசாய தினக்கூலி வேலைசெய்து பிழைத்து
வந்த கிராம மக்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும்
இழந்துவிட்டனர். ஆகவே இந்த கிராமங்களில் உள்ள அனைத்து
குடும்பத்தினருக்கும் தற்போது நடைபெறும் கட்டுமான பணிகளில் வேலையளிக்க
வேண்டும்.மேற்கண்ட நிறுவனத்திற்கு நிரந்தர பணியாளர்களை தேர்வு செய்யும்
போது இப்பகுதிகளில் உள்ள படித்து பட்டம் பெற்ற தகுதியான இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இக்கிராமங்களை சேர்ந்த
பெண்கள் நிறுவனம் அமைந்துள்ள இடங்களிலிருந்து முன்பு சவுக்கை, முந்திரி,
பனை மற்றும் இதர மரங்களிலிருந்து கிடைக்கும் விறகுகளை கொண்டு உணவு சமைத்து
வந்தனர். தற்போது விறகுகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து
குடும்பங்களுக்கும் இலவச எரிவாயு சிலிண்டருடன் கூடிய அடுப்புகள் வழங்க
வேண்டும்.பள்ளி மாணவர்கள் படிப்புக்கு உதவிடும் வகையில் கரிகுப்பம்,
பஞ்சங்குப்பம், கொத்தட்டை கிராமங்களில் பள்ளி கட்டிடங்கள் கட்டித்தர
வேண்டும். கொத்தட்டையில் மேல்நிலைப்பள்ளி அமைவதற்கு தேவைப்படும் கோவில்
நிலத்திற்கான கிரய தொகையை நிறுவனம் அரசுக்கு செலுத்தி நிலத்தை பெற்றுத்
தரவேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்துவந்த
விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈட்டை நிறுவனத்திடம் பெற்றுத்தர
வேண்டும்.நிறுவனத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கடல்நீரை
நல்லநீராக மாற்றி தொழிற்சாலைக்கு பயன்படுத்த வேண்டும். மாறாக ஆழ்குழாய்
அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சுவது தடைசெய்யப்பட வேண்டும். புதுகுப்பம்
பிரதான சாலையை அடைப்பதும் சுடுகாடுகளை ஆக்கிரமிப்பதும் தடைசெய்யப்பட
வேண்டும்.நிறுவனம் வரும் பகுதிகளில் உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம்
அடியோடு பாதிக்கப்படுகிறது.
அவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்படும்
அபாயம் எழுந்துள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்திட
கீழ்காணும் ஏற்பாடுகள் அவசியமாகிறது. 1. கடற்கரையோரம் எந்த கட்டுமான
பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. 2. குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்
பதப்படுத்தும் நிறுவனம் துவங்குதல். 3. புதுகுப்பம், புதுப்பேட்டை,
வேளங்கிப்பட்டு, சின்னூர் ஆகிய கிராமங்களிலிருந்து நகர்புறங்களுக்கு செல்ல
பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும்.நீதிமன்ற வழக்குகள் உள்ள
நிலங்கள் சம்பந்தமாக நியாயமான தீர்வுகளை காணவேண்டும்.இப்பகுதி
கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு குடிநீர்
மேல்நிலைத் தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்துத்
தரவேண்டும்.இக்கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்களுடைய தினக்கூலியை நம்பி
அவர்கள் நடத்திவந்த சுயஉதவி குழுக்களின் வழியாக பல வங்கிகள் மற்றும் அரசு
சாரா தொண்டு நிறுவனங்களில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தி வந்தனர்.
தற்போது
அது முழுமையாக முடங்கி உள்ளது. எனவே இப்பகுதி பெண்கள் முன்னேற்றத்திற்கு
தேவையான கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் சிறுதொழில்
அமைப்பதற்கு பயிற்சிகள் அரசுடன் இணைந்து மானிய கடன் வசதி ஏற்படுத்தி
தரவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தாங்கள் அனல் மின்நிலைய நிறுவனத்துடன்
உரியமுறையில் பேசி நிறைவேற்றி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க
வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தீக்கதிர் 02.11.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக