வியாழன், 25 செப்டம்பர், 2014

செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது மங்கள்யான். விண்வெளியில் இந்தியா புதிய வரலாறு எழுதியது
இந்தியாவின் மங்கள்யான் சோதனை முழு வெற்றியடைந்துள்ளது. செவ்வாய்கிர கத்தின் சுற்று வட்டப் பாதையில்இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் புதனன்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள் ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அந்த விண்கலங்களை பலமுறை முயற்சி செய்த பிறகே சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடிந்தது. ஆனால் இந்தியா முதல்முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தி விண்வெளியில் புதிய வரலாறை எழுதியுள்ளது.
சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி 15சி 25 எனும் ராக்கெட் மங்கள்யானை சுமந்து சென்றது. பூமியிலிருந்து 246 ஒ 23566 கி.மீ நீள் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் நிறுத்தப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக 1.12.2013அன்று மங்கள்யான் புவி விசையிலிருந்து விலகி செவ்வாய்க்கிரகம் நோக்கி தனது பயணத்தைத் துவக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அதன்பாதை சற்று மாற்றியமைக்கப்பட்டது. ஜூன் மாதம் 11ம் தேதி மங்கள்யானின் பாதை மாற்றப்பட்டு செவ்வாய் நோக்கி திருப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொண்ட மங்கள்யான் புதனன்று சூரிய வட்டப்பாதையிலிருந்து செவ்வாய் சுற்று வட்டப்பாதைக்குள் புதன்கிழமை செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மிகக்கடினமான பணி 300 நாட்கள் கழித்துவிண்கலத்தில் உள்ள திரவ எஞ்ஜினை இயக்குவதுதான். இந்த சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டால் விண்கலத்தை செவ்வாய்க்கிரகத்தை ஒட்டி பாதைக்குள் செலுத்த முடியும் என்று இஸ்ரோ தொலையுணர்வு அறிவியல் செயற்கைக்கோள் தலைமைத்திட்ட இயக்குநர் மயில்சாமிஅண்ணாதுரை தெரிவித்துள்ளார். செவ்வாய்கிரகத்தை ஒட்டி செல்லும் போது மங்கள்யான் விண்கலத்தின் வேகத்தை குறைத்து சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான மிக முக்கியப் பணி புதன்கிழமை காலை 7.17க்கு துவங்கியது. மங்கள்யான் சோதனை வெற்றிகரமாக நடந்தேறியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். செவ்வாய் சுற்றுப்பாதையை அடைந்தமங்கள்யான் நிலைநிறுத்தப்பட்ட சில நிமிடங்களில் பூமிக்கு சிக்னல்களை அனுப்பியது.
இது விஞ்ஞானிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மங்கள்யான் விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள மையத்திலிருந்து பார்வையிட் டார். விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தை ஆராய இதுவரை உலக நாடுகள் 52 விண்கலன்களை அனுப்பியிருந்தபோதும் அதில் 22 மட்டுமே வெற்றி பெற்றது.மங்கள்யான் சோதனை வெற்றிபெற்றதன் மூலம் விண்வெளியில் இந்தியா புதிய சாதனையை வரலாறை நிகழ்த்தியுள்ளது.
நன்றி தீக்கதிர் 24.09.2014

கருத்துகள் இல்லை: