சனி, 9 நவம்பர், 2013

கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் மன்மோகன் அரசு

25 லட்சம் டன் டீசல் பேரம் : ரிலையன்சுக்கு அரசு சலுகைபுதுதில்லி, நவ. 8-
இந்திய ரயில்வேக்கு டீசல் சப்ளை செய்யும் மிகப்பெரும் ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறு வனங்களிடமிருந்து எப்படியேனும் கைப்பற்றுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் நிறுவனமும் முயற்சி மேற்கொண்டுள்ளன.
மேற்கண்ட தனியார் பெரும் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் விதத்தில் மன்மோகன் சிங் அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கை அமைந்திருப்பதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வருடத்திற்கு 25 லட்சம் டன் அளவிற்கு ரயில்வே துறைக்கு டீசல் சப்ளை செய்யும் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான எரிபொருள் கொள்கையை அமலாக்கி வரு கிறது.
முற்றிலும் தனியார் பெரும் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையிலேயே மன் மோகன் அரசின் எரிபொருள் விலை நிர்ணயக்கொள்கை அமைந்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசு கைவிட்டதைப் போலவே இந்த ஆண்டின் துவக்கத்தில் டீசல்விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தையும் அரசு கைவிட்டது.
எண்ணெய் நிறுவனங்களே இஷ்டம்போல் டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரத்தை வழங்கியது. இதன் விளைவாக 15 நாட்களுக்கு ஒருமுறை டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இது நாட்டு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், டீசல் விலை நிர்ணயத்தில் சமீபத்தில் இரட்டைக்கொள்கையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
அதன்படி சில்லரைவிற்பனையைவிட, மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் அரசுப்போக்குவரத்து நிறுவனங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக நாடு முழுவதும் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்தும் தனியார் பெட்ரோல் பங்க்குகளில் சில்லரைக்கு டீசல் நிரப்பும் மோசமான சூழ் நிலைமைக்கு தள்ளப்பட்டன. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் இருக்கின்றன.
ரயில்வே : இந்நிலையில், ரயில்வேயில் டீசல் கொள்முதல் செய்வதிலும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய ரயில்வே துறைதான் நாட்டிலேயே பெரும் அளவில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து டீசல் கொள்முதல் செய்யும் நிறுவனம் ஆகும். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் டன் அளவிற்கு இந்திய ரயில்வே துறை டீசல் கொள்முதல் செய்தது.
இதுவரையிலும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய முப்பெரும் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களே ரயில்வே துறைக்கு டீசல் சப்ளை செய்து வருகின்றன. இந்நிலையில், ரயில்வே துறைக்கு மானிய விலையில் மொத்தமாக டீசலை வழங்க முடியாது என்று இந்நிறுவனங்களும் கைவிரித்துள்ளன.
வழக்கமாக ரயில்வேக்கு மொத்தமாக டீசலை சப்ளை செய்துவிட்டு அதற்கான மானியத் தொகையை அரசாங்கத்திடமிருந்து பின்னர் மேற்கண்ட பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த நடைமுறையை மன்மோகன் அரசு ஒழித்துக்கட்டுவது என்று முடிவு செய்துவிட்டது.
இதன் விளைவாக ரயில்வேக்கு கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.525 தள்ளுபடி செய்து சலுகை விலையில் டீசல் சப்ளை செய்து கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது மொத்த கொள்முதல் விலையான லிட்டர் ஒன்றுக்கு ரூ.63 என்று கூடுதல் விலையிலேயே சப்ளை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
இது, ஏற்கெனவே மானிய விலையில் ரயில்வேத்துறை பெற்றுக்கொண்டிருந்த விலையைவிட சுமார் ரூ.9 முதல் ரூ.10 வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வேயில் பயன்படுத்தப்படுகிற அதிவேக டீசலை சப்ளை செய்து வரும் பொதுத்துறை நிறுவனங்கள் இனி சலுகை விலையில் சப்ளை செய்ய முடியாது என்று கூறியிருப்பதைத் தொடர்ந்து ரயில்வே துறை பொதுத்துறை நிறுவனங்களைவிட குறைந்தபட்ச அளவேனும் சலுகை விலையில் அதிவேக டீசல் சப்ளை செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்களை நாடுவதற்கு முடிவெடுத்துள்ளது.
இதை அறிந்துகொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட தனியார் பெட்ரோலியக் கம்பெனிகள் ரயில்வே துறைக்கு டீசல் சப்ளை செய்யும் மிகப்பெரும் ஒப்பந்தத்தை கைப்பற்றுவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 25 லட்சம் டன் அளவிற்கு நடைபெற வாய்ப்புள்ள டீசல் வியாபாரத்தை எந்த விதத்திலும் இழப்பதற்கு தயாராக இல்லாத முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், நாட்டில் 11 மண்டலங்களில் ரயில்வேக்கு டீசல் சப்ளை செய்ய அனுமதி கேட்டு முயற்சி மேற்கொண்டுள்ளது.
எஸ்ஸார் நிறுவனம் குஜராத்தில் ஒரு மண்டலத்தில் ஒப்பந்தத்தைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. சலுகை விலையில் டீசல் கொள்முதல் செய்வதற்கான ரயில்வேயின் அடுத்த ஆண்டிற்கான டெண்டர் கடந்த புதன்கிழமை துவங்கியுள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனங்களைவிட கூடுதலாக விலை தள்ளுபடி செய்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் உண்மையில் பொதுத்துறை நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.63 விலை நிர்ணயம் செய்துள்ள சூழலில் ரிலையன்ஸ் உள்ளிட்டதனியார் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு வெறும் 1 ரூபாய் மட்டும் குறைத்து ரூ.62 என டெண்டரில் தந்திரமாக குறிப்பிட்டு இந்த மாபெரும் டீசல் ஒப்பந்தத்தை கைப்பற்றுவது என முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
வெறும் ஒரு ரூபாய் வித்தியாசத்தில் 25 லட்சம் டன் டீசல் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இழக்கும் ஆபத்து எழுந்துள்ளது. எனினும் அதைத் தடுத்து நிறுத்த பெட்ரோலிய அமைச்சகமோ, மன்மோகன் அரசோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை......நன்றி தீக்கதிர் 

கருத்துகள் இல்லை: