மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர்
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் அதிரடியாக இன்று ரத்து
செய்துள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள்
நியமிக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு
13 ஆயிரம் பேரையும் டிஸ்மிஸ் செய்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,
மக்கள் நலப்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம்
அளித்து தமிழக அரசு பணிநீக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மக்கள்
நலப்பணியாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த
மனு நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு
இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான
உடன்படிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர். ஏழைப்
பணியாளர்களை அலைக்கழிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள்
நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய
தீர்ப்பை ரத்து செய்தனர்.
அத்துடன் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரித்து 6
மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்.
நன்றி-- ஹிந்துநாளிதழ் 12.11.2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக