ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சொல்லக் கொதிக்குதம்மா நெஞ்சம்!

மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி - அரசு கூட்டு வஞ்சம்!




மாருதி சுசூகி கார் தொழிற்சாலையின் 147 தொழிலாளர்கள் கடந்த 17 மாதங்களாக ஹரியானாவில் உள்ள போண்ட்சி சிறையில் அடைபட்டுக்கிடக்கின்றனர். 17 மாதங்களாகியும் இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது வாரண்டோடு மறைந்து வாழ்கின்றனர். எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு பேரை வேண்டுமானாலும் சிக்கவைக்கும் வகையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டப்படியான எந்தவாய்ப்பும் வழங்கப்படாமலே வெடுக்கென்று வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.
என்ன குற்றம் ?
மூவாயிரம் குடும்பங்கள் நிலைகுலைந்து நிற்கின்றன. குரங்கு பிய்த்தெறிந்த குருவிக்கூட்டைப் போல சிறையில் உள்ளோரின் குடும்பங்கள் சிதைந்து சிதறிக்கிடக்கிறது. திருமணமான புதுத்தம்பதிகள், கர்ப்பிணியான மனைவி, சிறு கைக்குழந்தைக்கார தாய், தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப முடியாத தளிர்கள், பிள்ளைகள் நிழலில் வாழ்ந்திருந்த முதியோர், திருமணம் நின்று போனவர்கள் என இவர்களின் நிலையை நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கிறது.இந்த மாருதி தொழிலாளர்கள் என்ன குற்றம் புரிந்தனர்? பேரிடி போன்ற கொடுந்தாக்குதல் அவர்கள் தலையில் ஏன் இறங்குகிறது?
சிறை போல...?
மாருதி தொழிற்சாலை இந்தியாவில் கார் உற்பத்தியில் முதன்மை நிறுவனம். மலைபோல் லாபம் குவிக்கும் செல்வச்சுரங்கம். இதை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தொழிலாளர் ஊதியமோ சொற்பத்திலும் சொற்பம். இதில் பெரும்பாலோர் நிரந்தரமற்ற, ஒப்பந்த மற்றும் கேஷூவல் தொழிலாளர்கள். நிற்க நேரமில்லாத இடைவெளியில்லாத வேலை. 56 நொடிக்கு ஒரு கார் என்று சோளப்பொறி போல பொறித்துத்தர வேண்டும். கக்கூஸ் போகக்கூட கன்டிசன்கள். தேநீர் இடைவேளை 7 நிமிடந்தான். இந்த நேரத்தில் தான் அதிகாரிகள் விசாரிப்புகளும் நடக்கும்.
கிடைக்கிற கொஞ்சம் சம்பளத்திலும் பாதி உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கப்படி. எனவே பாதி சம்பளத்திற்கு உறுதியோ உத்தரவாதமோ இல்லை.நிர்வாகத்தோடு ஒத்துப்போய்ஊளைச்சதையை வளர்த்துக்கொண்டிருந்த சிலர், சங்கத்தலைமை என்றுகூறிக்கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமான துரோகங்களை இழைத்து வந்தனர். இங்கேயும் இதை நாம் கண்டு வருகிறோம்.இதை எதிர்த்து உண்மையான சங்கத்தை உருவாக்கும் முனைப்பில் மாருதி தொழிலாளர்கள் இறங்கினர். பெரும்பான்மைத் தொழிலாளர்கள் கூடி சங்கம் அமைத்தனர். இது தான்மாருதி தொழிலாளர்கள் செய்தபெரிய குற்றம். அரசியலமைப்புச்சட்டம் வழங்கும் உரிமையை பயன்படுத்தியது தான் இவர்கள் செய்த பாவம்.
மர்மச்சாவு
நிர்வாகத்தின் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் உண்மையான நிலை எடுத்தால் பெரும் அடக்குமுறை ஏவப்படும் என்பதன் சான்றுதான் மாருதிக் கொடுமை. ஒரு அதிகாரி ஜாதியைச் சொல்லி ஒரு தொழிலாளியை பலர் முன்னிலையில் தேநீர் இடைவேளையில் திட்டினார். அந்தத்தொழிலாளி இதைஆட்சேபித்தான். உடனே அவன் சஸ்பென்ட் செய்யப்பட்டான். இந்த ராணுவ பாணி அடக்குமுறையை மற்ற தொழிலாளர்கள் கூட்டாக எதிர்த்து நியாயம் கேட்டனர். இதுதான் அங்கு நடந்த போராட்டத்தின் உடனடி காரணம். ஏற்கனவே தொழிற்சாலைக்குள் வைத்திருந்த அடியாட்களைக்கொண்டு சங்க நிர்வாகிகளை நிர்வாகம் தாக்கியது. இந்த நிகழ்வில் ஒரு அதிகாரி உயிரிழந்தார். அவர் மீது பலத்த காயம்ஏதுமில்லை. எனவே தொழிலாளர்கள் அவரைத்தாக்கிய பிரச்சனையே இல்லை. அவர் மரணம் மர்மமாகவே உள்ளது.
கொடுங்கோன்மை
இது தொழிலாளர்கள் செய்த கொலை என்று புனைந்து கூறித்தான் பெருந்தாக்குதலை நிர்வாகம் கட்டவிழ்த்துள்ளது. இதற்கு அரியானாவின் காங்கிரஸ் அரசாங்கம் எல்லா வகையிலும் துணை நிற்கிறது. 2005ல் ஹோண்டா ஸ்கூட்டர் நிறுவனத்தில் இது போன்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் கைதும், வேலைநீக்கமும் செய்யப்பட்டனர். அன்று மத்தியில் இடதுசாரிகள் துணையில் ஆட்சி இருந்தது. இடதுசாரிகளின் தொடர் அழுத்தத்தால் அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இன்று முதலாளித்துவ கட்சிகளின் தடையற்ற தர்பாரில் 17மாதமாக ஜாமீன்கூட மறுக்கப்படுகிறது.விலைவாசியைக் கட்டுப்படுத்த துப்பற்றவர்கள், முதலாளிகளின் ஊழல் பண மூட்டையில் புரண்டு துய்ப்பவர்கள், ஜனநாயக போர்வையில் முதலாளித்துவ சேவையாற்றுபவர்கள், முதலாளிகளையும் சுரண்டலையும் காப்பதே சட்டம் ஒழுங்கைக் காப்பதாகும் என்று செயல்படுவர்கள், அமைப்பாக தொழிலாளர்கள் பலம் பெறுவதை ஏற்கமாட்டார்கள். கிருஷ்ணனை ஒழிக்க கம்சன் பச்சைக்குழந்தைகளை வேட்டையாடியதைப்போல தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக கொடுங்கோன்மை புரிவார்கள் அவர்கள்.
தனித்துவிடோம் !
அவ்வப்போது வருகின்ற இப்படிப்பட்ட தாக்குதலை தொழிலாளிகளின் ஒன்றுபட்ட சக்தி புரட்டிப்போட்டு புறந்தள்ளியிருக்கிறது.தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமை, காண்ட்ராக்ட் ஒழிப்பு, பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்பு போன்ற முழக்கங்களோடு தமிழகத்தில் நாம் களத்தில் நிற்கிறோம். அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடி வருகிறோம். இப்போது மாருதி தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் தனித்துவிடப்படலாகாது !மாருதி தொழிலாளியின் வாழ்வுரிமையையும், சட்ட உரிமைகளையும் பறிக்காதே என தமிழகமெங்கும் நமது ஆதரவுக்குரல் ஓங்கி முழங்கட்டும் ! மாருதிப்போராட்டம் நம் அனைவரின் போராட்டம் என்பதே செய்தியாகட்டும் !

நன்றி தீக்கதிர்


உங்கள் சிந்தனைக்கு

https://googledrive.com/host/0B9lxcUMWp688UUk0ZmN2ZC1NSVU/1554527_1435274086703298_1066996972_n.jpg

சனி, 4 ஜனவரி, 2014

யாருக்கான வளர்ச்சி ?


இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 9 சத விகிதத்தை எட்டியுள்ளது. வறுமை குறைக்கப் பட்டிருக்கிறது. வேளாண்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது என மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் சாதனைகளை அடுக்கியுள்ளார்.அவரின் சொல்லுக்கும் உண்மைக்கும் வெகுதூரம் இருப்பதை பிரதமரால் அறிவதுகொஞ்சம் சிரமம்தான். ஆனால் புள்ளி விபரங்களுக்குள்ளாவது ஒற்றுமை இருக்க வேண்டாமா? கடந்த இரண்டு வருடமாக இந்தியப் பொருளாதாரம் நிதிப்பற்றாக்குறையாலும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாலும் திணறிக் கொண்டிருக்கிறது. தலைமைக் கணக்கு தணிக்கைக் குழு அளித்திருக்கும் அறிக்கையின் படி நடப்புக் கணக்கு நிதிப் பற்றாக்குறை இவ்வாண்டு மார்ச் வரையிலான பட்ஜெட்மதிப்பீட்டில் 94 சதவிகிதத்தை இப்போதே எட்டியிருக்கிறது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4.8 சதவிகிதத்திற்கு மேல் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு அபாய மணி ஒலிக்க துவங்கியிருக்கிறது. மறுபுறம் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வின் காரணமாகவே மக்கள் எங்களை 4 மாநிலத் தேர்தல்களில் முச்சந்திக்கு தள்ளியிருக்கின்றனர் என பிரதமரே ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கையில் பொருளாதார வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பதை அவரே தெளிவாக்கியிருக்கலாம். மில்லியன் ஃபார்மர்ஸ் இனிஷியேட்டிவ் திட்டம் என்ற பெயரில் ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்கு ரூ.3000 கோடியை ஒதுக்கினார் பிரதமர். ஆனால் அதனை ரிலையன்ஸ், ஐடிசி உள்ளிட்ட 20 பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுத்திருக்கிறார்.

இதுதான் வேளாண்துறையின் வளர்ச்சி. விவசாயிகள் பேரிலும் கார்ப்பரேட்கள் வளர்ச்சி பெறுவதையே நமது பிரதமர் ஒட்டுமொத்த வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார் போலும்.அதுமட்டுமல்ல இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.8 கோடியாக குறைந்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் ஏன் 2013 ம் ஆண்டு ஐ.நாவின் கணக்குப்படி உலக அளவில் உள்ள 187 நாடுகளில், இந்தியா மனித மேம்பாட்டுக் குறியீட்டில் மிகவும் பின்தங்கி136 வது இடத்தில் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டுவது போல், வறுமைக் கோட்டிற்கான வரையறையில் 2400, 2100 கலோரிகள் என்ற வரையறையை கிராமப்புறத்திற்கு 1999 கலோரி என்றும், நகர்ப்புறத்திற்கு 1770 கலோரி என்றும் கணக்கிட்டு வறுமையின் அளவை குறைத்து, வறுமையைக் குறைத்திருக்கின்றனர். இதுதான் மத்திய அரசின் வறுமை ஒழிப்பின் லட்சணம்.

இந்த அரசு ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறதாம். அதுதான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் வெளிவந்த உலகளாவிய ஊழல்கள். பிரதமர் உள்ளிட்டோருக்கு வாங்கப்பட்ட ஹெலிகாப்டரில் கூட ஊழல் கறைபடிந்திருப்பது தெரிய வந்ததால் முந்தைய நாள்தான் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் என்பதைக் கூட வசதியாக மறைத்து விட்டார். அதைவிட பிரதமருக்கு ஆனந்தமே, இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் இறையாண்மையை காவுகொடுக்கும் விதமாகஅமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம்தான் என புளகாங்கிதம் அடைந்துள்ளார். அதிலும் அணு விபத்து ஏற்பட்டால் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முழு இழப்பீட்டையும் தர வேண்டியதில்லை என்பதும் ஒருசரத்து. அதாவது இந்திய மக்களின் உயிர்களை காவு கொடுத்தாவது கார்ப்பரேட்களின் வளர்ச்சியை உறுதி செய்வோம் என்பதுதான் பிரதமரின் உறுதிப்பாடு. அந்த வகையில் காங்கிரஸ், தலைமையிலான மத்திய ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சிதான் பெற்றிருக்கிறது.
நன்றி தீக்கதிர் 04.01.2014

07.01.2014 -அன்று சென்னையை நோக்கி அணிதிரள்வீர் !!!

  அன்பார்ந்த தோழர்களே!
  எதிர்வரும் 07.01.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ள  நமது BSNL நிறுவனத்தின்  சேவை கருத்தரங்கத்திற்க்கும் ,அதற்கு அடுத்தாற்போல நடைபெற இருக்கும் நமது பொதுச்செயலரின் பணி நிறைவு நிகழ்ச்சிக்கும் நமது கடலூர் மாவட்ட தோழர்கள்  சென்னையை நோக்கி திட்டமிட்டபடி அணி வகுப்போம். இந்த  நிகழ்ச்சிக்கு சிறப்பு விடுப்பு (SPECIAL CASUVAL LEAVE) உண்டு என்பதால் அதை நமது தோழர்கள் பயன்படுத்தவும். கிளைச்செயலர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டுகிறோம்  

சிறப்பு விடுப்பு கோரும் கடிதம்  <<<click here>>>

மத்திய சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே!

        டைரக்டர் (மனிதவளம் ) திரு .A .N .ராய் அவர்களுடன் நமது பொது செயலர் இன்று பேசிய போது  18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகத்துடன்  உடன்பாடு ஏற்பட்ட பிரச்சனைகளில்  தீர்வில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டி கட்டியுள்ளார் .
 
  01-01-2007 க்கு பிறகு பணி நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையிலும் தீர்வில் கடும் கால தாமதம் ஏற்படுவதை கடுமையாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் .இது விசயமாக நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் படிக்க :Click Here
 
   மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும் மேற்பட்ட  Officiating JTO க்களின் பிரச்னை தீர்வாகும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது .இப் பிரச்சனையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது.
 
              TTA கேடர்க்கான புதிய ஆளெடுப்பு விதிகளை நிர்வாகம் இறுதி செய்து விட்டது .10+2 தகுதி அல்லாத ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில் அனுமதிப்பது என்ற நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் இன்று பேசிய போது குறைந்த பட்சம் ஒரு தகுதி தேர்வை மட்டுமாறு நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது நிர்வாகம் இந்த பிரச்னை விசயமாக நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி உள்ளார். 
 
அதே போல் JTO ஆளெடுப்பு விதிகளை இறுதி செய்யும் போது தேர்வில் பங்கேற்க சேவைக்கால வரம்பை குறைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார் .
தோழமையுடன்
K.T.சம்பந்தம் 
மாவட்டச்செயலர்

வியாழன், 2 ஜனவரி, 2014

ஓய்வூதிய பாதுகாப்புக்கு வேட்டு காங்கிரஸ் - பாஜக கைகோர்ப்பு

ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா  செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும் 6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

இந்த சட்டம் பாஜகவினால் 1.1.2004 முதல் அமல்படுத்தப்பட்ட சட்ட விரோதமான புதிய பென்சன் திட்டத்தை அந்த தேதியிலிருந்தே சட்டப்படியானதாக்குகிறது. சட்ட விரோத ஆணையத்தை சட்டப்படையானதாக்குகிறது என்று ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறினார்.இந்த சட்டப்படி புதிய பென்சன் திட்டத்தில் வருபவர்களுக்கு ஓய்வூதியம் பங்குச் சந்தையின் லாப நஷ்டத்தை பொருத்தது. லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சட்டமே கூறுகிறது. குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதமும் இல்லை. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. அதுமட்டுமல்ல 1972 பணிக்கொடை சட்டத்தின்படி கூட பணிக்கொடை கிடையாது.

வருங்கால வைப்பு நிதி கிடையாது. ஊழியருடைய விருப்பம் கேட்காமலேயே கட்டாயமாக அவரை அதில் சேர்க்கவேண்டும். அதுமட்டுமல்ல, 12(5) பிரிவுபடி பழைய ஓய்வூதிய விதியில் வருபவர்களையும் மத்திய அரசு இன்னொரு அறிவிக்கை வெளியிட்டு இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரலாம். மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர தனி அறிவிக்கைக் கொண்டுவரவேண்டும். நேரடியாக அவர்களுக்கு இது பொருந்தாது. அதனால்தான் கேரளத்தில் இடதுசாரிகள் ஆண்ட போது புதிய பென்சனை அமல்படுத்த மறுத்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழியர்களை ஒரு அறிவிக்கை மூலம் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டது.

திரிபுரா அரசும் இடதுசாரிகள் ஆள்வதாலும் மேற்குவங்கத்தில் ஆண்டதாலும் அமல்படுத்தவில்லை.இந்த மசோதா மக்களவையில் வந்தபோது எலியும் பூனையுமாக அடித்துக் கொண்டதுபோல நாடாளுமன்றத்தில் காட்டிய பாஜகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்துகொண்டு மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர்.தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவும், காங்கிரஸ் பாஜகவுடன் சேர்ந்து ஆதரித்து வாக்களித்தனர். தொல்திருமாவளவன் (விசிக) தலித்துகளுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வேண்டாம், பணிக்கொடை வேண்டாம் என கருதிவிட்டார் போலும். எனவே, அவரும் காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். டி.கே.எஸ். இளங்கோவன் தான் எதிர்த்ததாக பேசிவருகிறார்.

மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம் இடதுசாரிகளும் திரிணாமூல் காங்கிரசும் மட்டுமே எதிர்த்ததாகவும் மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரித்ததாகவும் பேசினார். மக்களவையில் மசோதா மீது ஆதரித்தும் எதிர்த்தும் வாக்களித்தவர்களின் பட்டியல் இப்போது மக்களவை இணையதளத்தில் காணக் கிடைக்கிறது. அதில் இடதுசாரிகளுடன் இணைந்து ஏழு அதிமுக உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். ப.சிதம்பரம் வேண்டுமென்றே இதை மறைத்து அதிமுகவும் அவர்களுடன் சேர்ந்து வாக்களித்தது போல மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

மாநிலங்களவையில் வாக்களித்தவர்களின் பெயர்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுமென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முக்கிய திருத்தங்களை இந்த மசோதா மீது கொண்டுவந்தனர். 

திருத்தம் 1 : உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வருவாய்“ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பங்குச் சந்தையிலோ, பத்திரங்களிலோ இடும் மூலதனத்திற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி அளவுக்கு குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதம் செய்யவேண்டும்.” என்று கட்டாக் உறுப்பினர் ஒரு திருத்தம் கொண்டுவந்தார். இதை இடதுசாரிகளும் அதிமுக உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். அப்படி உத்தரவாதம் தேவை இலலையென்று காங்கிரஸ், பாஜகவுடன், திமுக, விசிக கட்சிகள் இணைந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர்.

திருத்தம் 2 : பொதுத்துறைநிதி மேலாளர்கள்மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவந்தார். “ஓய்வூதிய நிதி மேலாளர்கள் ஒருவர் மட்டும் பொதுத்துறையாய் இருந்தால் போதும் என்பதை மாற்றி அனைவரும் பொதுத்துறையாய் இருக்க வேண்டும்.” என்ற திருத்தத்தை இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுகவும் ஆதரித்து வாக்களித்தது. திமுகவும் விசிகவும் காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து எதிர்த்து வாக்களித்து திருத்தத்தை தோற்கடித்தனர்.

திருத்தம் 3 : குறைந்தபட்ச ஓய்வூதியம்“குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதம் செய்யப்படவேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமானது மத்திய அரசு ஊழியர்களில் 1.1.2004க்கு முன் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு அது குறையக்கூடாது.” இந்த திருத்தம் நிறைவேறினால் ஆனுவிட்டி கம்பெனிகள் குறைந்தபட்சம் 3500ம் அத்துடன் விலைவாசி ஏறும்போதெல்லாம் பஞ்சப்படியும் சேர்த்து கொடுக்க வேண்டிவரும்.இந்த திருத்தத்தையும் இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால், காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து திமுகவும் விசிகவும் குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம் வேண்டாம் என்று திருத்தத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர். இவர்களின் பட்டியலும் இணையதளத்தில் உள்ளது.

திருத்தம் 4 : அந்நிய நேரடி முதலீடு“ஓய்வூதிய நிதி நிறுவனங்களில் 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு வரலாம். அத்துடன் எப்போதெல்லாம் காப்பீட்டு சட்டம் திருத்தப்பட்டு இந்த சதவீதம் 49, 74, 100 என்று உயருகிறதோ அப்போதெல்லாம் ஓய்வூதிய நிதிநிறுவனங்களிலும் அதே அளவு அன்னிய நேரடி முதலீடு வரலாம்.”

இதன் மூலம் ஓய்வூதியர்களின் நிதி அந்நியர்களிடம் விடப்பட்டு அவர்கள் அமெரிக்காவில் நடந்ததுபோல சுருட்டிக்கொண்டு ஓடவும் அனுமதி வழங்கப்படுகிறது. ஓய்வூதியர்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பத்ருகாரி மஹதாப் என்ற ஒரு உறுப்பினர் இதில் 26 சதத்தை ஆதரிக்கிறார்.

ஆனால், காப்பீட்டு சட்டத்தில் உயரும்போதெல்லாம் உயர்த்தவேண்டும் என்ற அம்சத்தை கைவிட வேண்டுமென்று ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அந்த திருத்தத்தை இடதுசாரிகளும் அதிமுகவினரும் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால், அந்நிய நேரடி மூலதனத்தை சில்லரை வர்த்தகத்தில் எதிர்ப்பதாக கூறும் திமுகவும் விசிகவும் காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து எதிர்த்து வாக்களித்து இந்த சிறு திருத்தத்தைக் கூட தோற்கடித்தனர்.

ஒரு சிறு மாற்றமுமின்றி மசோதாவை அப்படியே சட்டமாக்க தமிழகத்தின் திமுகவும், விசிகவும், காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து ஆதரித்து வாக்களித்தனர்.

- ஆர்.இளங்கோவன், செயல்தலைவர், டிஆர்இயு
நன்றி தீக்கதிர் 02.01.2014

மான்சாண்டோக்கள் நலன் மத்திய அரசின் தவம்!


மரபணு நீக்கப்பட்ட பயிர்களை இந்திய வயல்களில் விளைவிக்க அனுமதிக்கக்கூடாது என்று விவசாயிகளும், இயற்கைச் சமநிலைவாதிகள் மட்டுமல்ல, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூட எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது. மத்திய அரசோ அந்த எதிர்ப்புகளைப் புறக் கணித்துவிட்டு, அனுமதிப்பதற்கு சாதகமான நிலைப்பாட்டை உருவாக்க முயன்று வருகிறது என்ற செய்தி ஏற்கெனவே வந்தது. இப்போது, இப்பயிர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவைத் தாக்குவதற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்தை உடன்பட வைக்கவும் மத்திய அரசு தயாராகிவருகிறது என்ற செய்தி வந்துள்ளது.இடைக்கால அறிக்கையை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த உச்சநீதிமன்றக் குழு தற் போது இறுதி அறிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்துகளை மீறி வளரக்கூடிய மரபணு நீக்கப் பயிர்கள் இந்திய மண்ணுக்கு ஏற்றவை அல்ல என்று குழு கூறியிருக் கிறது. பல்லுயிர்த் தன்மை வாய்ந்த இந்திய நிலங்களில் இந்தப் பயிர்கள் ஆழ்ந்த தீங்குகளை ஏற்படுத்திவிடும் என்று குழு எச்சரித்துள்ளது.

இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒழுங்கு முறை கட்டமைப்பு முறையாக இல்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. இப் படிப்பட்ட குறைபாடுகள் களையப்படும் வரை யில் இப்பயிர்களை விதைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பதும் குழுவின் ஒரு பரிந்துரை.குழுவின் ஒரு முக்கியமான விமர்சனம், மர பணு நீக்கப்பட்ட பயிர்களால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், பொருளாதாரப் பாதிப்புகள் ஆகியவை பற்றி கண்டுகொள்ளப்படவில்லை என்பதாகும். தற்போது மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகமும் அறிவியல்துறை அமைச்சகமும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்வதற்காக ஒரு வாக்குமூல அறிக்கை யைத் தயாரித்துள்ளன. அதில், குழுவின் இந்தவிமர்சனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட் டுள்ளதாகத் தெரிய வருகிறது.

குறிப்பாக, இவ்வகை விதைகளின் சமூகப் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து குழு கருத்துக் கூறியிருப் பதை இவ்விரு அமைச்சகங்களும் கடுமையாகச் சாடியுள்ளன. குழுவினர் தங்களது ஆய்வு வரம்புக்கு அப்பால் சென்றுள்ளதாகவும், அறி வியல் அம்சங்களோடு மட்டும் நிற்க வேண்டும் என்று அமைச்சகங்கள் கூறியுள்ளனவாம். சமூகப் பொருளாதாரத்திற்கு சம்பந்தமில்லாத அறிவியல் யாருக்குப் பயன்படும்?ஆராய்ச்சி நோக்கங்களுக்கான இவ் வகைப் பயிர்களை ஒரு விதமாகவும், வணிக நோக் கங்களுக்கான பயிர்களை வேறு விதமாகவும் கையாள வேண்டும் என்பதும் குழுவின் பரிந் துரை. இதற்கு இவ்விரு அமைச்சகங்களும், வணிக நோக்கத்திற்குப் பயன்படுமா என்று மதிப்பிடுவது என்பது ஆராய்ச்சியின் ஒரு பகுதிதான் என்று விளக்கம் அளித்துள்ளன.

ஆக, யாருடைய நலன்களுக்குத் தோதாக மன்மோகன் சிங் அரசு இயங்குகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்திய வேளாண் சந்தையை வளைக்கத் துடிக்கும் மான்சாண்டோ போன்ற அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது மத்திய அரசு. அதற்காக உச்சநீதிமன்றக் குழுவை மட்டுமல்ல, மக்கள் வெளிப்படுத்திவரும் கோபத்தை யும் இந்த அரசு கொஞ்சமும் மதிக்கவில்லை என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.
நன்றி தீக்கதிர் 02.01.2014

20ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

புதன், 1 ஜனவரி, 2014

மாவட்ட செயலகக் கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே!
நமது மாவட்ட செயலகக் கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர் V. குமார் தலைமையில் நடைபெற்றது.அதில்மறைந்த  தோழர் T.S.ராஜன் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆகியோர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு சென்னை கருத்தரங்கம், கிளைமாநாடுகள், திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோதப்போக்கு,கடலூர் வெளிப்புறப் பகுதி பிரச்சினைகள், ஆழமாக விவாதிக்கப்பட்டது. பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள்
1) சென்னை கருத்தரங்கத்திற்க்கு கடலூர் மாவட்டத்திலிருந்து கடலூர்-மூன்று,சிதம்பரம்,நெய்வேலி,கள்ளக்குறிச்சி,விருத்தாச்சலம்,திண்டிவனம்-தலா
ஒரு சிற்றுந்து(VAN) மற்றும் விழுப்புரத்திலிருந்து ஒரு பேருந்து(BUS) ஏற்பாடு செய்வது.


2) கிளைமாநாடுகளை திட்டமிட்டபடி குறித்த காலங்களில் நடத்துவது.

3} திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினை களைந்திட வலியுறுத்தி மாவட்ட நிவாகத்திற்கு கடிதம் கொடுப்பது,விரிவான நோட்டீஸ் போடுவது.


4) கடலூர் கோட்ட வெளிப்புறப்பகுதி நிர்வாகத்துடன்இறுதியாக மீண்டும் ஒருமுறை கடலூர் கிளைச்சங்கம் பேசுவது.


5) குற்றச்செயல்கள்,ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் திண்டிவனம் பகுதி நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் இரண்டு தனித்தனி கடிதங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (RTI)கீழ் கொடுப்பது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக செய்து முடிக்க இணைந்து பணியாற்றுவோம் மேலும் முன்னேறுவோம்.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம் 
மாவட்டசெயாளர்

01-01-2014 முதல் IDA 5% உயர்வு

அன்பார்ந்த தோழர்களே!
01-01-2014 முதல் IDA உயர்வு 5 சதமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதனால் மொத்த IDA 90.5 சதமாக உயர்ந்துள்ளது எனவே,ஜனவரி 2014 சம்பளத்தில் 5%உயர்த்தி கிடைக்கும்.

மாவட்ட செயலகக் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
 இன்று மாலை 01.01.2014  4.00 மணிக்கு மாவட்ட செயலகக்கூட்டம்  கூட்டம் நமது மாவட்டத் தலைவர் தோழர் V.குமார் தலைமையில் கடலூரில் நமது தொழிற்சங்க அலுவலகத்தில்  நடைபெறவுள்ளது.அனைத்து செயலகக்கூட்ட நிர்வாகிகளும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்




தோழர்.P.அபிமன்யு அவர்கள் பணிநிறைவு சிறக்கட்டும்



1975 ஆண்டு துவக்கத்தில் தபால் தந்தி துறையில்

தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்து

தொழிற்சங்க இயக்கத்தில் NFPTEயில் இணைந்து

அமரர் தோழர் K.G. போஸ் வழி காட்டலில் இயங்கி

தோழர் C.S .பஞ்சாபகேசன் போட்ட பாதையில் நடந்து

தொலைதொடர்பு துறைதொழிற்சங்கங்களில் 
சீர்திருத்தவாத தலைமைக்கு எதிராக போராடி, 

சங்கத்தில் தொழிற்சங்க ஜனநாயகத்தை நிலை நிறுத்தி  BSNLலில் BSNLEUவை உருவாக்கி

ஊழியர்கள் வாழ்வில் மேம்பாடு அடைந்திட அல்லும் பகலும் பாடுபட்டு நிறைவான ஊதியம் பெற்றுத் தந்து,

பதவி உயர்வுத் திட்டம் உருவாக்கி தனியார்மயத்தை தடுத்திட்ட மாமனிதர் தோழர் P. அபிமன்யு அவர்கள் இன்று ஒய்வு பெறுகிறார்.

நமது கடலூர் மாவட்ட்த்தில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பணியாற்றி நமக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் இன்று நிறுவனப் பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

பெற்ற உரிமைகளை போற்றி பாதுகாத்திட அவர் பணி தொடரட்டும்..

அவர் நீடுழீ வாழ்க! வாழ்க!! என்று இந்நாளில் நமது கடலூர்  மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்


இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இன்று காலமானார். அவருக்கு வயது 75 பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த சென்றிருந்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் என தகவல்கள் தெரிவிகின்றன.இயற்கை வேளாண் விஞ்ஞானிக்கு அஞ்சலி செலுத்துவோம் .

சென்னை சொசைட்டி டைரி

அன்பார்ந்த தோழர்களே!

நமது சென்னை தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களுக்கு  31-12-2013 அன்று கடலூரிலும் 01-01-2014 அன்று விழுப்புரத்திலும் டைரி வழங்கப்பட உள்ளது. தலமட்ட நிர்வாகிகள் அதனைப்பெற்று நமது தோழர்களுக்கு கிடைக்கப்பெற ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், 30 டிசம்பர், 2013

கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
திண்டிவனம் துணைக்கோட்ட நிவாகத்தின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து 30.12.2013 அன்று மாலை கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும், தோழியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திண்டிவனம்  துணைக்கோட்ட நிர்வாகமே!

தனிப்பட்ட காரணங்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யாதே!

இதுவரையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறாதே!

எங்கள் சங்க உறுப்பினர்களை குறிவைத்து தாக்காதே!

நடுநிலையான பாரபட்சமற்ற நடைமுறைகளை கடைபிடி!

தொழிலமைதியை சீர்குலைக்காதே!  

பயங்கர வங்கியின் நூறாண்டு!

அது 1910ம் ஆண்டு.சக்திவாய்ந்த 7 பெரும் பணக்காரர்கள் ரகசியமாக சந்தித்தார்கள். அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் இந்த சந்திப்பு நடந்தது. ராக்பெல்லர், ஜே.பி.மோர்கன், ரோத்ச்சைல்டு ஆகிய மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் முதலாளிகள்தான் அவர்கள்.சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள்.

இந்த மூன்று பெரும் முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அடுத்த 3 ஆண்டுகளில் உதயமானதுதான் இன்றைக்கு ‘பெட் ரிசர்வ்’ என்று ஊடகங்களால் புகழ்ந்து தள்ளப்படுகிற அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி.அரசாங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத, முற்றிலும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே இப்படி ஒரு வங்கியை உருவாக்குவதற்கு, அன்றைய தினம் அமெரிக்காவின் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற போதிலும், ஜனாதிபதி உட்ரோ வில்சன் நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்தார். பணக்காரர்களின் நாடாளுமன்றம் மிகப் பெரிய விவாதம் இல்லாமல், 1913ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாள் முன்பு நள்ளிரவில் இதற்கு ஒப்புதல் அளித்தது.

அமெரிக்கர்களின் தலைவிதியை மட்டுமல்ல, பிற்காலத்தில் ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் தனது காலடியின் கீழ் கொண்டுவரப் போகும் பெடரல் ரிசர்வ் ஆக்ட் என்ற அந்த மசோதாவை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு செல்லும் அவசரத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து பார்க்காமலேயே கைதூக்கி நிறைவேற்றினார்கள்.அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம்.முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது.

‘நான் மிகவும் சோகமான மனிதனாக இருக்கிறேன். தெரிந்தே எனது நாட்டை நாசமாக்கிவிட்டேன். ஒரு மாபெரும் தொழில்வள நாடான அமெரிக்கா முற்றிலும் வங்கிக் கடன் முறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக மாறுவதற்கு காரணமாகிவிட்டேன். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் இப்போது வெகுசில தனிநபர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த உலகிலேயே ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிற, சுதந்திரமான கருத்துக்களுடன் செயல்பட முடியாத, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உறுதிமொழிகள் அளிக்க முடியாத, முற்றிலும் சில ஆதிக்க மனிதர்களால் வழிநடத்தப்படுகிற அரசாங்கமாக அமெரிக்க அரசாங்கம் மாறிவிட்டது...’ என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதே உட்ரோவில்சன் எழுதினார்.1860களில் அமெரிக்காவின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.

அப்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, வங்கிகளை நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வங்கி நடத்துபவர்களுக்கு வட்டி என்ற பெயரில் பெருவாரியான பணம் போவதை அவர் தடுத்து நிறுத்தினார். லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்கள் நடமாடும் வீதிகளிலிருந்த நிதி அதிகாரங்கள் முற்றிலும் பெருமுதலாளிகள் குடி கொண்டிருக்கும் வால்ஸ்டிரீட் எனும் பணக்கார வீதிக்கு மாறியது.அங்கிருந்தே இன்றைக்கு உலகம் முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார யுத்தம் உலக நாடுகள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மனிதகுலத்தின் மீது நிதியுத்தம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. டாலர் எனும் பணத்தின் மூலம் உலகம் முழுவதும் சந்தையை கட்டுப்படுத்துகிற பெடரல் ரிசர்வ் எனும் அமெரிக்காவின் மத்திய வங்கி, இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறது.

2013 டிசம்பர் 23ம்தேதியன்று பெடரல் ரிசர்வ் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிதித் துறையில் மிகப் பெரும் போரை கட்டவிழ்த்துவிட்டது பெடரல் ரிசர்வ். உலகப் பொருளாதாரங்களின் லாபங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்துக் கொண்டது; கோடிக்கணக்கான மக்களின் உழைப்பையெல்லாம், விலைவாசியை உயர்த்தி சுரண்டிக் கொண்டது.இதைத்தான் நிதித்துறை தொடர்பான வரலாற்று அறிஞர் கரோல் குய்க்லி, தனது ‘துயரமும் நம்பிக்கையும்‘ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நிதி மூலதனத்தின் அடிப்படையில் இயங்குகிற இன்றைய முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் பரப்பி வருகிறது;

உலகம் முழுவதும் உள்ள நிதிக் கட்டமைப்பை சில குறிப்பிட்ட தனியார் முதலாளிகளின் கைகளுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசியல் கட்டமைப்பையும் தகர்க்கவோ அல்லது தனக்குச் சாதகமாக மாற்றவோ முயற்சிக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கிடையே நடக்கிற சந்திப்புகளும், ரகசிய ஒப்பந்தங்களும், இந்த வங்கிகளது தலைவர்களின் மாநாடுகளும் இதை நோக்கியே பயணப்படுகின்றன. இவர்களை பொறுத்தவரை பணத்தின் சக்தியே உயர்ந்தது; அதுவே உலகம் முழுவதும் பொருளாதாரங்களை, வணிகத்தை, அரசியலை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தை கொண்டிருக்கிறது’.

பெடரல் ரிசர்வ் போலவே இந்த உலகில் சக்திவாய்ந்த மேலும் 3 வங்கிகள் உள்ளன. அவை பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய சென்ட்ரல் பேங்க் மற்றும் பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவையே. இந்த 4 வங்கிகளுக்கும் தலைமை அதிகாரி போல சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச வங்கி (பிஐஎஸ்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கப் பெருமுதலாளிகளது தலைமை வங்கியாக, அவர்களது சட்டவிரோத பணத்தையெல்லாம் பாதுகாக்கிற வங்கியாக சுவிஸ் வங்கி செயல்படுகிறது.சட்டவிரோத பணத்தைப் பாதுகாக்க ஒரு சுவிஸ் வங்கி, சட்டவிரோதத்தை அமலாக்குகிற மைய வங்கியாக பெடரல் ரிசர்வ் என இந்த பூமியையே இரண்டு வங்கிகள்தான் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

இவை நினைத்தால் உலக நாடுகளின் பொருளாதாரங்களை ஆக்கவும் முடியும்; ஒரே நாளில் அழிக்கவும் முடியும்.லாபங்கள் அனைத்தையும் ஆளும் வர்க்க பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது, நட்டங்கள் அனைத்தையும் சமூகமயமாக்குவது என்பதே இந்த இருபெரும் வங்கிகளின் தாரக மந்திரம்.இந்தியாவில் நடக்கும் வங்கித்துறை “சீர்திருத்தத்தின்“ அடிப்படை இதுவே. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஒரு நூற்றாண்டு பயங்கரம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்த இந்தியாவையும் உறிஞ்சுகிற ஆக்டோபஸாக மாறப் போகிறது. தடுத்து நிறுத்த வேண்டுமானால், பெடரல் ரிசர்வ் எனும் ஆக்டோபஸின் பிடியிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியை காக்க வேண்டுமானால் மாற்றுக் கொள்கை கொண்ட அரசாங்கம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை.---- எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி தீக்கதிர் 30.12.2013

எதிர்பாரா விபத்தென்றுஏற்க முடியுமா இதனை?

பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வது, ஒப்பீட்டளவில் அது பாது காப்பானது என்பதற்காகவும்தான். அதனால்தான் பெரிய அளவில் ரயில் விபத்துகள் நடக்கிறபோது அது நாடு முழுவதுமே அதிர்ச்சியலைகளை ஏற் படுத்துகிறது. சனிக்கிழமையன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகில் பெங்களூரு - நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அத்தகையதுதான். அதில் ஒரு குழந்தை உட்பட 26 பேர் உடல் கருகி மாண்டுவிட்டனர். பலர் பலத்த நெருப்புக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இழப் பீடுகளால் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட் டுள்ள இழப்பை ஈடுகட்டிவிட முடியாது.2013ம் ஆண்டில் 5 தீ விபத்துகளும், 3 பெரும்மோதல் விபத்துகளும், 43 தடம்புரண்டு கவிழ்ந்த விபத்துகளும் நடந்துள்ளன.

ஒவ்வொரு பெரியவிபத்தின்போதும் காரணங்களைக் கண்டறி வதற்கும் தடுப்பதற்கான வழிகளைப் பரிந் துரைப்பதற்கும் விசாரணைக்குழுக்கள் அமைக் கப்படுகின்றன. மக்களுக்குத் தெரியாமலே போவது என்னவென்றால், அந்தக் குழுக்கள் கண்டுபிடித்தது என்ன என்ற விவரங்கள்தான்.வண்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற அடிப்படையான பராமரிப்பு ஏற்பாட்டில் கூட நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். முன்பு பிரதான பரா மரிப்பு என்பது அன்றாட நடவடிக்கையாக இருந்தது. ஆனால், வண்டிகளின் இயக்கங்கள் பலதடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் போதுமான பெட்டிகள் உறுதிப்படுத்தப் படவில்லை.

இதனால் ஒரு தடத்தில் வந்த வண்டியே, பெயர்ப்பலகை மாற்றி வேறொரு தடத்தில் இயக்கப்படுகிறது. அன்றாடப் பராமரிப்பு ஏற்பாட்டைக் கைவிட்டு, ஒரு வண்டிமொத்தம் 4,500 கி.மீ. ஓடியபிறகு பராமரிப்பை மேற்கொண்டால் போதும் என்று முடிவு செய்துவிட் டார்கள். 12 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்ட காலமுறைப்படியான ஒட்டுமொத்த பராமரிப்பு இப்போது 24 மாதங்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டது.ஒவ்வொரு வண்டிக்குமான தனி மின்சாரப் பணியாளர் கிடையாது. பொதுவாகவே ரயில் வேயில் பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே 1,49,000 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பாதுகாப்பு ஆய்வுக்குழுவே கூறியிருக்கிறது. அமைச்சகமோ 60,000 காலியிடங்கள்தான் இருப்ப தாகக் கூறி, பாதுகாப்பு தொடர்பான 25,000 பணியிடங்களை மட்டும் நிரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது. ரயில்வேயில் இத்தனை பாது காப்புப் பணியிடங்கள் காலியாக இருப்பதையும், ஓராண்டுக்கு மேலாகிவிட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. மின் கசிவால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உறுதியாகுமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

ஆனால், பழுது ஏற்படுவதற்கு முன் பராமரிப்பு என்ற கொள்கையைக் கைவிட்டு, பழுது ஏற்பட்ட பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையைக் கொண்டுவந்ததற்கு யார் பொறுப்பு? ரயில்வே பணிகளைப் பாதுகாப்பு உத்தரவாதமற்ற தனியார் நிறு வனங்களிடம் ஒப்படைத்தது யாருடைய முடிவு? அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாத வரையில், இப்படிப்பட்ட சோகங்களை எப்படி எதிர்பாராத விபத்து என்று சொல்வது?
நன்றி தீக்கதிர் 30.12.2013