c
ஒபாமா இந்தியா வந்துவிட்டுப் போய் ஒரு வாரத்துக்கு மேலாகியும் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. பரபரப்பைக் கிளப்புவதற்கு நோபல் பரிசு ஏதேனும் இருந்தால் அதைப் பெற எல்லாத் தகுதியும் உடைய நரேந்திர மோடி விட்ட ராக்கெட்டல்லவா? ஜன்தன் யோஜனா, ஸ்வச் பாரத் போன்ற அவரது அதியற்புத சாதனைகள் வரிசையில் ஒபாமா விஜயமும் சேர்க்கப்பட்டுவிட்டது. இவர் அவரை `பராக்’ என செல்லமாக அழைக்க, அவர் இவரை `சாயாவாலா’ எனப் பிரியமுடன் விளிக்க.. பள்ளி நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்டதுபோல் அவர்களிடையே பாசமழை பொழிய, இந்தியாவே விக்கித்து நின்றது.ஆனாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்ற பாடலைக் கொள்கையாக வரித்துக்கொண்ட அமெரிக்க அதிபர்கள் தங்கள் நாட்டுத் தேவைகளை ஒரு கணமும் மறப்பார்களா? ஒபாமாவும் மோடியும் தனிமையில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பரம ரகசியம். அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நமது நிருபர் அதை இங்கே பிட்டுப் பிட்டு வைக்கிறார். வேறு ஊடகங்களில் வராத உரையாடல் இது.
ஒபாமா : மேட் இன் அமெரிக்கா என்பது உலகம் பூரா ஏற்றுக் கொண்ட பொருளாதாரம். நீங்க என்ன புதுசா மேக் இன் இந்தியான்னு கரடி விடறீங்க? எங்களைச் சீண்டிப் பாக்கறீங்களா? மோடி : அய்யய்யோ! அப்படி ஏதும் தப்புக்கணக்குப் போட்டுராதீங்க.. நான் ஏன் `மேட் இன் இந்தியா’ன்னு சொல்லாம`மேக் இன் இந்தியா’ன்னு சொல்றேங்கறதை நீங்க கவனிக்கணும். நீங்க எங்களுக்காகத் தயாரிச்ச பொருள் எதுவானாலும் அதை மேக் இன் இந்தியான்னு நாங்க சொந்தம் கொண்டாடிக்குவோம். கண்டுக்காதீங்க ஒபாமா : வெரி குட்! இதை அப்படியே மெயின்டைன் பண்ணிக்குங்க.. அமெரிக்காவுல தயாரிச்ச அணு உலைகள் ஏராளமாக் கிடக்கு. அங்கே யூஸ் ஆகாது. இந்தியாவுக்குக் கப்பல்ல ஏத்தி அனுப்பத் தயாரா வச்சுட்டுத்தான் கிளம்பினேன். உங்களை ஒரு வார்த்தை கேட்டுட்டு ஏத்த வேண்டியதுதான்.. மோடி: என்ன வார்த்தையெல்லாம் சொல் றீங்க .. என்னை ஒரு வார்த்தை கேக்கணும்னு சொன்னதே போதும். அந்தப் பெருந்தன்மையைப் பாத்து நான் பூரிச்சுப்போய் நிக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட். அணு உலை மேலே `மேட் இன் அமெரிக்கா’ன்னு எழுதிட வேணாம். இங்கே அனுப்புங்க. நான் `மேக் இன் இந்தியா’ன்னு எழுத ஏற்பாடு பண்ணிக்கறேன். ஒபாமா : அணு உலையிலே விபத்து ஏதும் நடக்காதுன்னு காரண்ட்டி, வாரண்ட்டி ஏதும் நான் கொடுக்க முடியாது. ஒரு வேளை விபத்து ஏதும் நடந்தா எங்களை எதுவும் நீங்க கேக்கக் கூடாது. அதை எப்படி சமாளிக்கறதுங்கறது உங்க கவலை! மோடி : கவலையை விடுங்க! எங்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்லாம் எதுக்கு இருக்கு? அவங்க கிட்ட பாலிசி எடுத்துக்கறோம். மிச்சம் மீதி துண்டு விழுந்தா, கவன்ர்மெண்ட் ஃபண்ட்லேருந்து கொடுத்துக்கறேன். எங்க நாட்டுப் பாரம்பரியம் ஒண்ணு இருக்கு. பெரிய விபத்திலே சிக்கிக்கிட்டவங்களுக்கு நஷ்ட ஈடு எதுவும்நாங்க கொடுக்கறதில்லே. நஷ்டஈடு கேட்டுக்கேட்டுப் போராடி ஒவ்வொருத்தரா சாகறவரை நாங்க அப்படியே விட்டுருவோம். போபால் படுகொலையிலே, சாரி, விபத்துலே, அதை நாங்க நிரூபிச்சுக் காமிச்சிருக்கோம்.ஒபாமா : வெரி குட், வெரி குட்! கீப் இட் அப்! இன்னொரு விஷயம். அணு குண்டு தயாரிக்க மாட்டோம்னு நீங்க சொன்னாப் போதாது. அதை நாங்க அப்பப்ப வந்து இன்ஸ்பெக்ட் பண்ணணும்...மோடி : இதை நாங்க வெளியே சொன்னா என் இமேஜ் என்ன ஆறது? நீங்க நேரடியா வந்து இன்ஸ்பெக்ட் பண்ண வேணாம். உங்களுக்கு நம்பிக்கையா உள்ள வேற யாரையாவது அனுப்புங்க. நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன். ஒபாமா : ஓகே, ஓகே! அடுத்தது, குஜராத் பாணி படுகொலைகளை நீங்க அடியோட மறந்துரணும். மதக்கலவரம் ஏதாவது நடந்தா எங்க வியாபாரம் பாதிக்கும். அண்டர்ஸ்டாண்ட்? மோடி : அடி மடியிலேயே கை வைக்கறீங்கறீங்களே! முஸ்லிம்கள், கிறிஸ்தவங்க மேலே அப்பப்ப வெறுப்பைக் கிளப்பிவிட்டாதான் நாங்க இந்து ஓட்டுக்களைத் தக்க வச்சுக்க முடியும். உலகத்திலே எங்கயாவது சண்டை நடந்துக்கிட்டிருந்தாத்தானே உங்க ஆயுதங்களை நீங்க விக்க முடியுது? அது மாதிரிதான் இது. ஒபாமா : புரியுது, புரியுது.. நாங்க உலக சமாதானத்தைப் பத்தி பேசற மாதிரி, நீங்க மதநல்லிணக்கம் பத்தி பேசிக்கிட்டே உங்க வேலையைப் பாருங்க. அதே சமயம் எங்க வியாபாரம் பாதிக்காமயும் பாத்துக்குங்க.மோடி : எப்பப்ப எந்த வேஷம் போடணும்கறதிலே நாம ரெண்டு பேருமே கில்லாடிங்கதானே? சமாளிப்போம்! ஒபாமா : அப்ப நான் போய்ட்டு வரேன். அமெரிக்கத் தொழிலதிபர்கள் இன்னும் மூணுநாளைக்கு இங்கே இருப்பாங்க. அவங்களை மனம் குளிர, சந்தோஷமா அனுப்பிவைக்க வேண்டியது உங்க பொறுப்பு. விவசாயத்துக்கு நாங்க மானியம் கொடுக்கற மாதிரி நீங்களும் கொடுக்கணும்னு நினைக்காதீங்க. நாங்க வேற.. நீங்க வேற.. அதை மறந்திராதீங்க. மோடி: மறப்பேனா? இங்கே பேசினதெல்லாம் நம்மோட இருக்கட்டும். வெளியே போகும்போது சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்கணும். நான் உங்க தோள்மேலே கைபோட்டுக்கிட்டே வருவேன். தப்பா நினைக்கக் கூடாது. மத்ததை நான் பாத்துக்கறேன்.(இருவரும் சிரித்தபடியே வெளியே வருகின்றனர்.)---தீக்கதிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக