சனி, 29 ஆகஸ்ட், 2015

குஜராத் கலவரம் நோக்கம் என்ன?



மக்கள் தொகையில்  முற்படுத்தப்பட்ட பிரிவினர் 26% (பட்டேல்கள்- 14%, பிராமணர்கள்-4%, பனியாக்கள்-3% ஏனையோர்-5%) பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 46%சிறுபான்மையோர் 9% (கிறித்துவர்கள் 0.52% உட்பட) தலித் பிரிவினர் 6% மலைவாழ் ஆதிவாசிபிரிவினர் 13%

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தம்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனக்கோரி நடக்கும் போராட்டத்தில் 9 பேர் கொல்லப்பட்டதுமின்றி ஏராளமான வன்முறைகள் நடந்தேறியுள்ளன. இட ஒதுக்கீடு தேவை என ஆரம்பித்த கோரிக்கை “அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்” என திசை திரும்பியுள்ளது. இடஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் உட்பட சங்பரிவாரங்கள், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தொடங்கியுள்ளன. மோடியின் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு இரத்தமும் சதையுமாக இருந்த பட்டேல் சமூகமே போராட்டத்தில் குதித்திருப்பது மோடியின் குஜராத் மாடல் வெறும் மோசடியான மாயைதான் என்பதை வெள்ளிடைமலையாக வெளிக்காட்டியுள்ளது.

குஜராத்தில் சமூக நிலைமை
கடந்த பல ஆண்டுகளாக குஜராத்தின் அரசியல், சமூக, பொருளாதார அரங்கில் மிகப் பெரும் செல்வாக்கை செலுத்திவருபவர்கள் பட்டேல் இனத்தவர். ஆரம்பத்தில் பணக்கார விவசாயிகளாகவும் நிலவுடமையாளர்களாகவும் இருந்த பட்டேல் இனத்தவர் 1960களில் அமலான பசுமைப் புரட்சி மூலம் மிகப்பெரிய நன்மைகளை அடைந்தனர். விவசாய உற்பத்தி மூலம் கிடைத்த உபரியை இவர்கள் நகர்ப்புறத்தில் வணிகம், ரியல் எஸ்டேட், தொழில் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்தனர். கிராமப்புறத்தில் சமூக ஆளுமை செலுத்திய இவர்கள் ஒரு குறுகிய காலத்தில் நகர்ப்புற ஆளுமையையும் தம்கீழ் கொண்டுவந்தனர்.

பாஜகவின் ஆதரவாளர்களாகபட்டேல் இனத்தவர்!
ஆரம்பத்தில் பட்டேல் இனத்தவர் காங்கிரசின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். காங்கிரஸ் கட்சி தேசியமயம், சோசலிசம் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தபொழுது அக்கொள்கைகள் தமக்கு எதிரானது என பட்டேல்கள் கருதினர். காகிதப்பூ மணக்காது; காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது என்று போய்விட்டது தனிக்கதை! எனினும் காங்கிரசிலிருந்து விலக ஆரம்பித்த பட்டேல் இனத்தவருக்கு இராஜாஜி துவங்கிய சுதந்திரா கட்சி பொருத்தமான அரசியல் அமைப்பாக இருந்தது. அன்றைக்கே இராஜாஜி தனியார்மயம்தான் தேவை என்று கூறியதும் தேசியமயத்தை கண்மூடித்தனமாக எதிர்த்ததும் வரலாறு! மிகப்பெரும்பான்மையான பட்டேல் இனத்தவர்கள் சுதந்திரா கட்சி பக்கம் சாய்ந்தனர்.

1962, 67 தேர்தல்களில் குஜராத்தில் சுதந்திரா கட்சி ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வந்தது.பின்னர் சுதந்திராகட்சி மங்கியபொழுது, பட்டேல்கள் ஜனசங்கம் பக்கம் சாய்ந்தனர். 1980ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர் கல்வி அமைப்புகளில் இடஒதுக்கீடு அமல்படுத்திய பொழுது பட்டேல் இனத்தவர் அதனை எதிர்த்து குஜராத்தில் மிகப்பெரிய வன்முறையில் ஈடுபட்டனர். தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அன்று ஆர்.எஸ். எஸ். உட்பட சங்பரிவாரம் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தது. எனவே பட்டேல்களுக்கு சங்பரிவாரம் மிகவும் விரும்பத்தக்க அமைப்பாக மாறத்தொடங்கியது. 1990ல் மண்டல் கமிஷன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தபொழுதும் குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்பொழுதும் இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது பட்டேல் இனத்தவர்தான்.
அப்பொழுதும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து பட்டேல் இனத்தவருக்கு ஆதரவு அளித்தது சங்பரிவாரம். இதற்கு பிறகு பட்டேல் இனத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அசைக்க முடியாத அடித்தளமாக மாறினர். இந்த அடித்தளத்தை மையமாக வைத்து ஏனைய சமூகத்தவரையும் தன்வயப்படுத்தி பாஜக குஜராத்தில் தன்னை வளர்த்துக்கொண்டது. இதற்கு இஸ்லாமிய சமூகத்தையும் கிறித்துவ சமூகத்தையும் ஒட்டு மொத்த இந்துக்களுக்கு எதிரானவர்களாக உருவாக்குவதில் சங்பரிவாரம் வெற்றி பெற்றது எனில் அதற்கு முக்கிய காரணம் பட்டேல் இனத்தவர் பெரும்பான்மையாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவாளர்களாக இருந்ததுதான்! இதனை 2007ம் ஆண்டு வாக்கு விவரங்கள் தெளிவாக்குகின்றன

பட்டேல் இனத்தவரின்சமூக - அரசியல் ஆளுமை
பல ஆண்டுகளாக தமது சமூக ஆளுமையை பயன்படுத்தி பட்டேல் இனத்தவர் வணிகத்திலும் தொழிலிலும் பல சலுகைகளைப் பெற்று அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்தனர் எனில் மிகை அல்ல. இந்த முன்னேற்றம் பா.ஜ.க. ஆட்சியில் விசுவரூபம் எடுத்தது. ற ரூ.10 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்துள்ள தொழிற்சாலைகள் மொத்தம் 6146 உள்ளது; எனில் அவற்றில் 1700 ஆலைகள் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானது! ற குஜராத்தில் உள்ள 120 பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர்களில் 40 பேர் பட்டேல்கள். மாநில முதல்வர், உள்துறை அமைச்சர், பா.ஜ.க. தலைவர் ஆகியோரும் பட்டேல் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ற குஜராத் அமைச்சரவையில் 9 பேர் பட்டேல்கள்.ற நிர்மா, சுல்சான், காடில்லா, சைடஸ், எலிக்கான் இன்ஜினியரிங் ஆகிய மிகப்பெரிய குழுமங்களும் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானவை. ற மிகப்பெரிய வைர வியாபாரிகளான சாவ்ஜி தலோக்கியா(இவர்தான் தமது ஊழியர்களுக்கு தீபாவளி இனாமாக கார்கள் மற்றும் வீடுகளை பரிசளித்தார்), வல்லப் பட்டேல், லால்ஜி பட்டேல்(இவர்தான் மோடியின் உடையை 4.3 கோடிக்கு வாங்கியவர்) போன்றோரும் பட்டேல்களே! ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குழுமங்களான பர்சவந்த் குழுமம், கணேஷ் குழுமம், சூர்யா குழுமம் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானவை!ற அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 25 சதவீதம் பட்டேல் இனத்தவர்.ற அமெரிக்காவில் 22000 ஓட்டல்களை இந்தியர்கள் நடத்துகின்றனர், இவற்றின் மதிப்பு 127 பில்லியன் டாலர்கள். அவற்றில் 60 சதவீதம் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானவை!

போராட்டத்தின் உண்மை நோக்கம் என்ன?
இப்படி சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் ஆளுமை இடத்தில் உள்ள பட்டேல்கள் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் குதிக்க காரணம் என்ன?குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 60,000 சிறிய மற்றும் நடுத்தர ஆலைகள் மூடப்பட்டு விட்டன. இது மோடியின் அதானி - நிர்மா போன்ற பெருமுதலாளிகளை ஆதரிக்கும் கொள்கைகளினால் உருவான விளைவு ஆகும். மூடப்பட்ட ஆலைகளில் பெரும்பாலானவை பட்டேல் இனத்தவருக்கு சொந்தம். வெளிநாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக வைரத்தொழில் மங்கிவிட்டது. சூரத்தில் பல சிறிய வைர ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. சிறு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் சுமார் 90பேர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இவர்களில் பட்டேல் இனத்தவரும் உண்டு.பட்டேல் இனத்தவரில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் நிரந்தரமற்ற அரசுப் பணிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7500/- மட்டுமே! தம்மைவிட கீழ் நிலையில் இருந்த பிற்படுத்தப்பட்டவர்களும் தலித் மற்றும் பழங்குடியினரும் அரசு வேலைகளை பெறுகின்றனர்; இதற்கு காரணம் அவர்களுக்கான இடஒதுக்கீடுதான் எனும் தவறான உணர்வு பட்டேல் இனத்தவருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்று பட்டேல் இனத்தவர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இடஒதுக்கீட்டை எதிர்த்து கலகம் செய்த பட்டேல் இனத்தவர் இன்று இடஒதுக்கீடு கோருவது முரண்பாடகவே உள்ளது. “எங்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடு; அல்லது இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கு” என போராட்டக்காரர்கள் கூறுவது போராட்டத்தின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. குஜராத்தை 13 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே தமக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை உணர்வதற்கு பதிலாக, பட்டேல் இனத்தவர் தமது கோபத்தை இடஒதுக்கீடுக்கு எதிராக திருப்புவது நியாயமற்ற ஒன்று! அதனை அனுமதிப்பது என்பது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய தீங்கு ஆகும்.பட்டேல் போராட்டத்தை ஒரு காரணமாக பயன்படுத்தி இடஒதுக்கீட்டை அழித்திட ஆர்எஸ்எஸ் பரிவாரம் முயல்கிறது. இடஒதுக்கீடு நியாயம் எனும் கருத்து உள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது!
நன்றி :தீக்கதிர் 29.08.2015

கருத்துகள் இல்லை: