வியாழன், 12 மார்ச், 2015

பாலையாகும் நெய்தல் நிலம்?கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் `தேச வளர்ச்சி’ என்ற ஒற்றைச் சொல்லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறி வைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப்பெரிய சவால்.
 
13 மாவட்டங்களை உள்ளடக்கி 1076 கிலோமீட்டரில் 551 கிராமங்களில் வசிக்கும் சுமார் எட்டு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது தமிழகத்தின் நெய்தல் பகுதியான கடற்கரை. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கரையோர மக்களை வாரி சுருட்டி எறிந்த சுனாமிக்கு முன்புவரை தமிழகத்தின் சமவெளி மனிதர்களுக்கும் கடற்கரை யோர சமூகத்திற்குமான உறவு என்பது சந்தையில் மீன் பேரம் பேசுவதைத் தவிர அதிகம் இருந்தது கிடையாது.சுனாமிதான் அம்மக்களின் துயரை வெளி உலகிற்கு கொண்டு வந்தது. ஆனால் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்த சுனாமி கடற்கரையை ஒரு தங்கச் சுரங்கமாய் அடையாளப் படுத்தியது.

மூலதனக்குவிப்பு
உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் மறுவாழ்வு பணிகளை விட்டுவிட்டு அதை அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளைமட்டுமே தமிழக அரசு மேற்கொண்டது. எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் வந்தன. உண்மையில் மக்களுக்காக சில அமைப்புகள் பணியாற்றவும் செய்தன. அதன் பிறகான ஆண்டுகளில் கடற்கரையில் கடுமையான மாற்றங்கள் துவங்கின.பலவகையான கணக்கெடுப்புகள் நடந்தன. சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான படகுகள் குவிக்கப்பட்டன. படகுகள் அதிகமானதால் போட்டிகள் அதிகமாயின. விசைப்படகுகளின் விசை அதிகரிக்கப்பட்டது. சாதாரண வலைகளைப் பயன்படுத்திய கிராமங் களில் எல்லாம் இரட்டைமடி வலையும், சுருக்கு வலையும் சகஜமானது. கரை யோரம் கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்தவர்களின் நிலை மோசமானது. உள்ளூர்ச் சந்தைகளுக்கான மீன் பிடிப்பு சர்வதேசச் சந்தையை நோக்கி திருப்பப்பட்டது.

பெரும் மூலதனம் மீன்பிடித் தொழிலில் இறங்கியது.மற்றொரு பக்கம் பேரிடரை முன்வைத்து புதிய வகையான மூலதனக் குவிப்பு கடற்கரையை நோக்கிவரத் துவங்கியது. பல்வகை தொழிற்சாலைகள், அனல் மின்நிலையங்கள், எண்ணெய்ச் சுத்திகரிப்பு மண்டலங்கள், நிறுவனங் களுக்கான சிறிய துறைமுகங்கள், ஜவுளிப் பூங்காக்கள், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என படையெடுக்கத் துவங் கின. உதாரணமாக கடலூர் ஓ.டி முதல்பரங்கிப்பேட்டை வரையிலான 30கி.மீ. தூரத்தில் மட்டும் சுமார் 8000 ஏக்கர்நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இப்படியான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே `சிப்காட்’ ரசாயன வளாகங்களால் இந்தியாவின் அபாயமான கடற்கரையாக அறியப்பட்ட கடலூரின் நிலை மேலும் மோசமானது.

அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத் தில் சீர்காழி, தரங்கம்பாடி, கீழையூர் ஆகிய வட்டங்களில் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 12 அனல்மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 16 அனல் மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆக இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்னும் சில ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடல் உள்ளது.

ஆக்கிரமிப்புகள்... மீறல்கள்... அழித்தல்கள்...
தமிழகத்தில் இத்தனை அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட்டால் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கிவிடும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் தமிழகஅரசுடன் இதற்கான ஒப்பந்தம் போட்டதாகத் தெரியவில்லை. புதிய தொழிற் சாலைகள் ஒரு பகுதிக்குச் செல்லும் போது ஆட்சியாளர்கள் வைக்கும் முழக்கம் “நாட்டின் வளர்ச்சிக்கு இது அவ சியம்” என்பதுதான்.இந்த வளர்ச்சி என்றமுழக்கம் பலரை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. இது யாருக்கான வளர்ச்சிஎன்ற கேள்வி எங்கும் எழுப்பப்படு வதில்லை. உலகமய அமலாக்கத்தின் முன் அனுபவங்களைப் பார்க்காமல் வளர்ச்சி வரும் என்ற வார்த்தைகளை நம்புகின்றனர். தொழில்மயம் வேலை வாய்ப்பை பெருக்கும் என்பது உலகமயச் சூழலில் பகல் கனவாய் மாறியதுதான் கடந்த இரு பத்தாண்டு கால அனுபவம். மிகப்பெரும் நிறுவனங்களை துவங் கும் போது அவர்கள் சொல்லும் உறுதி மொழிகள் கட்டமைப்புப் பணிகள் முடிந்ததும் வெற்று வாக்குறுதிகளாகவே இருந்து விடுவதுதான் வேதனை.

மற்றொரு பக்கம் இப்படி கடற்கரை சார்ந்து வரும் தொழிற்சாலைகள் செய்யும் சட்ட மீறல்களும், புதிய அரசியல் புரோக் கர்களை வைத்து செய்யும் அடாவடிகளும் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. நிறு வனங்களுக்கு இடைத்தரகர்களாக இருக்கும் இவர்கள் மக்களைப் பிரித் தாள மிக இயல்பாக சாதி, வட்டார வெறியைக் கிளப்பி விடுகின்றனர். நிறுவனங் களில் கிடைக்கும் ஒப்பந்தத் தொழிலுக் காக நில உடமையாளர்களை இந்த தரகர்கள் கட்டாயப்படுத்தி நிலம் அப கரித்த கதைகள் ஒரு நூறு இருக்கிறது.பரங்கிப்பேட்டை பகுதியில் இரவு 12 மணி வரை பத்திரப் பதிவு அலுவல கங்கள் செயல்பட்டது ஒரு சிறிய உதாரணம். மக்கள் பயன்பாட்டில் உள்ள தரிசுநிலங்கள், சுடுகாடுகள், பள்ளி விளை யாட்டு மைதானங்கள், மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடித் தளங்கள் கைப்பற்றப்பட்டன. சுனாமியிலிருந்து இயற்கையாய் மக்களை பாதுகாத்த மணல் குன்றுகள் சமப்படுத்தப்பட்டன. வரலாற்றுப் புகழ்மிக்க கால்வாய்கள் சீரழிக்கப்பட்டன.

பொய்யான ஆய்வுகள்... கசப்பான உண்மைகள்
கடற்கரையோரம் வருகின்ற பல்வேறு நிறுவனங்கள் அங்கு உள்ள நிலைமையை முழுமையாக ஆய்வு செய்வ தில்லை, அப்படியே செய்தாலும் உண்மை நிலையைச் சொல்வதில்லை. பல்வேறு நிறுவனங்கள் தங்களது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் பொய்யான தகவல்களையே சொல்லி உள்ளனர். உதாரணமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பணிகளை மேற்கொண்டுள்ள ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல்மின் நிலையம் தனது அறிக்கை யில் மாங்குரோவ் காடுகள் உள்ள பிச்சாவரத்தை 12 கி.மீ. தூரத்திற்கு அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. 6 கி.மீ.க்குள்தான் மாங்குரோவ் காடுகள்உள்ளன. அதே போல வேளங்கி ராயன்பேட்டை கிராமத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றுபொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட் டம் நடத்திய குட் எர்த் ஷிப் யார்டு என்றநிறுவனம் மறைமுகமாக பாஸ் பேட் இரசாயன நிறுவனத்தை கொண்டு வருவது கண்டறியப்பட்டு சி.பி,எம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டது. நிறுவனங்கள் அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும், இத்தனை ஆயிரம்பேருக்கு நேரடி, மறைமுக வேலைகள்கிடைக்கும் என தங்களது அறிக்கை களில் நிறுவனங்கள் கூறும். ஆனால் உண்மை மிகவும் கசப்பானது. நாகைமாவட்டம் பிள்ளைபெருமாள் பேட்டை யில் நிலம் கையகப்படுத்தும் போது உள் ளூர் மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் தற்போது அங்கு விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளூர் மக்கள் வேலை செய்கின்றனர். கட்டுமானப் பணிகளில் உள்ளூர் அல்லது தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் படுவதில்லை.

வடமாநில இளைஞர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். திறன்மிக்க தொழிலாளர்கள் தேவை என்று அவர்கள் கூறினாலும் அதில் முழுமையான உண்மை இல்லை. குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்ட அவர்களை கொத் தடிமைகளாய் கொண்டு வருகின்றனர். அப்பணிகளை உள்ளூர் இளைஞர்கள் செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு அதிகக் கூலி கொடுக்கவேண்டும் என்பதும், சங்கம் அமைப்பார்கள் என்பதும்தான் புறக்கணிப்புக்கான அடிப்படைக் காரணமாகும்.

மிரட்டலும் அகற்றுதலும் அப்புறப்படுத்தலும்
மீனவர்களின் வாழ்க்கை மோசமான தாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பாரம்பரியமாக படகுகளை நிறுத்தும் இடங்கள், வலைகளை காயவைத்த இடங்கள், கடல் புறம்போக்கு நிலங்கள் எல்லாம் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் கடற்கரையில் நீளமாக வேலி அமைத்து அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது என மீனவ மக்களை எச்சரிக்கிறது. கடற்கரை சார்ந்த பல்வேறு சட்டங்களை மீறி கடற்கரையில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. கடலூரில் சிப்காட் வளாகத்தின் ரசாயனக் கழிவுகள் பர வனாற்றின் வழியாகவும், நேரடியாகவும் கடலில் கலக்கப்படு கிறது. மீன்பிடியைத் தவிர வேறு தொழில்களை இச்சமூகம் இன்னும் பழகவில்லை. அவர்கள் வெளியேற்றப்படுவது இன்னும் சில ஆண்டு களில் நடக்க அதிகம் சாத்தியம் உள்ளது. இது அந்த சமூகத்தில் கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.

கடற்கரையோரவாழ்க்கைச் சூழல் பாதிப்பு
கடற்கரை சார்ந்த மீனவர்களின் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. கடற்கரையோரம் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் அதை நம்பிவாழ்ந்த விவசாயிகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக் குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெண் கள் படும் துயரைச் சொல்லவும் வழி இல்லாமல் தவிக்கின்றனர். காடுகள் அழிக்கப்பட்டு சமவெளியாக மாற்றப்படுவதால் அவர்களது வாழ்க்கைச் சூழல் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.

உள்ளூரில் அவர் களுக்கு கிடைத்த வேலைகள் முற் றிலும் நிறுத்தப்பட்டன. வேலைக்காக அருகில் உள்ள நகரங்களுக்கோ அல்லது பிற கிராமப் பகுதிகளுக்கோ செல்ல நிர்ப்பந் திக்கப்படுகின்றனர். மிக எளிதாக கிடைத்த உணவுக்கான பொருட்கள், விறகுகள் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திடீரென அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளன.

கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் “தேச வளர்ச்சி” என்ற ஒற்றைச் சொல் லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள் விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை பற்றி கொஞ்ச மும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறி வைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப் பெரிய சவால்.இந்நிலையில் மக்கள் போராட்டங்கள் மட்டுமே வாழ்வாதாரத்திற்கு குறைந்த பட்ச பாதுகாப்பை உருவாக்கும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராடி, பல வழக்குகளை சந்தித்து தற்போதுதான் உள்ளூர் மக்களுக்கு பரங்கிப் பேட்டை அனல்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது,

சுற்றி உள்ள கிராம மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், கழிப் பிட வசதிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமங்களில் சீரழிந்த சாலைகளை புதிதாகப் போடுவது போன்ற ஒப்பந்தத்தின் மூலம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முதல் கட்ட ஒப்பந்தத்தை எட்டிஉள்ளது. தமிழகம் முழுவதும் கடற்கரை யோர மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத் திட ஒன்றுபட்ட போராட்டமே தீர்வாகும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் செய்தி.போராட்டம் தொடர்கிறது. 1076 கிலோமீட் டரை ஒருங் கிணைக்கும் போராட்டமாக இதை விரிவாக்க வேண்டும்.
---- தோழர் S.G.ரமேஷ்பாபு, தீக்கதிர் 12.03.2015

கருத்துகள் இல்லை: