பொதுத்துறை
தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ பாதுகாத்திடவும் அதன் விரிவாக்கத்
திட்டங்களுக்கு வங்கிகளில் கடன் வாங்க அரசே உத்தரவாதம் அளிக்கவேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தில்
பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் சுமார் இரண்டரை லட்சம் பேர் ஏப்ரல்
மாதம் 21, 22 தேதிகளில் நாடு தழுவியஅளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளனர்.இதுகுறித்து சென்னையில் வியாழனன்று (மார்ச் 12)
செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டார ஊழியர் மற்றும்
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.செல்லப்பா, தலைவர்
ஆர்.பட்டாபிராமன் ஆகியோர் கூறியது வருமாறு :
மக்களின் சொத்தான பல
லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்ட பொதுத்துறை
நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு
நிதிதேவைப்படுகிறது. உரிய சாதனங்கள் இல்லாமல் சிறந்த சேவையை வழங்கமுடியாது.
இந்த சேவையை அளிக்க அதிக கோபுரங்கள் தேவை. இதற்கு பணம் தேவை. ஆனால்
பிஎஸ்என்எல் விரிவாக்கத்திட்டத்திற்கு போதிய பணம் இல்லை.
காரணம்
என்னவென்றால் 2009ல் இருந்து நிறுவனம் நட்டத்தை
சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் 2004ல் பிஎஸ்என்எல்
ரூ.10ஆயிரம் கோடி லாபம் ஈட்டியது. இதற்கு முன்பு இருந்த மன்மோகன்சிங்
அரசாங்கமும் தற்போதுள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கமும் தனியார்மய,
தாராளமய பொருளாதார கொள்கைகளை மிகவேகமாக அமலாக்கி தனியார் நிறுவனங்களுக்கு
ஏராளமான சலுகைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு சதி
உதாரணத்திற்கு
விரிவாக்கம் செய்வதற்கு வங்கியில் பிஎஸ்என்எல் கடன் கேட்டால்
தரமறுக்கிறார்கள். காரணம் அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்கிறார்கள்.
ஆனால் உத்தரவாதம் அளிக்க மத்திய அரசு தயாராக இல்லை. இதனால் பிஎஸ்என்எல்
சேவையை விரிவாக்கம் செய்யமுடியவில்லை. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள்
அனைத்தும் வங்கிகளில் கடன் வாங்கி 2லட்சம் கோடி ரூபாய் வரை பணம்
வைத்திருக்கின்றன. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒரு நட்டமடைந்த நிறுவனமாக
மாற்றி அதை மூடிவிடுவது என்பது தான் அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.
ஆனால் ஊழியர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சங்கங்கள் அனைத்தும் இந்நிறுவனத்தை லாபகரமாக நடத்த தொடர்ந்து போராடி வருகின்றன.
தேசப்பாதுகாப்பு தனியாருக்கு பொருந்தாதா?
2007
ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4கோடியே 50லட்சம் புதிய
செல்போன்சேவைக்கான இணைப்புகளை வழங்குவதற்குதேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு
விடப்படவிருந்த டெண்டர் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ரத்து
செய்யப்பட்டது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற அதிகாரிகளும்
ஊழியர்களும் 2007 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 11ஆம்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
செய்தனர்.
அதன் பின்னர்நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 2கோடியே 25லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை
வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை.
2010ல் பிஎஸ்என்எல் நிறுவனம் கோரிய 9கோடியே 30லட்சம் இணைப்புகளுக்கான
உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.
சீனாவை
சேர்ந்த ஹவாய் நிறுவனத்திடமிருந்து உபகரணங்கள் வாங்கினால் நமது நாட்டின்
பாதுகாப்புக்கு ஆபத்து என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் தலைமை தணிக்கை
அதிகாரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதே நிறுவனத்திடமிருந்து
இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்வதை
மத்திய அரசு தடுக்கவில்லை. தேசப்பாதுகாப்பு என்றால் தனியாருக்கு
பொருந்தாதா?ஏற்கனவே எங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபமாக நடத்தமுடியும் என்ற யோசனைகளை தெரிவித்தும்
25 லட்சம் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை பிரதமரிடம் கடந்த மாதம் 25
ஆம் தேதி அளித்தோம். அதற்கு பிறகும் பிரதமர் மோடியோ அல்லது
தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்தோ எங்களை
பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து
நட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எந்த வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. ஆகவேதான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் உடனடியாக அரசு
இந்தப்பிரச்சனையில் தலையிடவேண்டும் என வலியுறுத்தியும் ஏப்ரல் மாதம் 21, 22
ஆகிய இரண்டு நாட்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதில் இந்தியா முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் ஊழியர்களும்
அதிகாரிகளும் 100 விழுக்காடு பங்கேற்பார்கள். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம்
ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள். எனவே மத்திய அரசு எங்களுடைய
கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்தை நடத்தி தீர்வு காணமுன்வரவேண்டும். இதன்
பின்னரும் அரசு செவிசாய்க்கமறுத்ததால் தொடர்போராட்டமாக மாறும்.
பிஎஸ்என்எல் சொத்து இந்திய மக்களின் சொத்து. அதை காப்பது நாம் அனைவரது
கடமையாகும்.
நன்றி தீக்கதிர் 13.௦3.2௦15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக