‘சிந்தனைச்
சிற்பி’ என அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட சிங்காரவேலர் ஒரு
பன்முகப் போராளியாவார். 1860ம்ஆண்டு பிப்ரவரி 18ம் நாள் மிகவும்
பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர் இந்திய
விடுதலைப் போராட்டம், பொதுவுடமை இயக்கம், தொழிற்சங்க இயக்கம், சமூக
சீர்திருத்த இயக்கம், எழுத்தாளர் என பல துறைகளிலும் வலுவான முத்திரை
பதித்தவர். பல்வேறு போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்ற சிங்காரவேலர்
ஆர்வம் மிக்கஒரு படிப்பாளியாகவும் திகழ்ந்தார். அரசியல், பொருளாதாரம்,
சமூகம், விஞ்ஞானம் என ஏராளமான நூல்களை அவர் கற்றறிந்துள்ளார். அவரைச்
சந்திக்க வருபவர்களிடம் “நேற்று என்ன புத்தகம் படித்தாய்” என அவர் கேட்பது
வழக்கம் என நினைவு கூர்கிறார் குத்தூசி குருசாமி. 1946ம் ஆண்டு பிப்ரவரி
11ம் நாள் தனது 86ம் வயதில் மரணமடைந்த சிங்காரவேலர் இறுதி மூச்சுவரை
போராட்டம் மிக்க தனது பொது வாழ்க்கையை தொடர்ந்தார்.துவக்க காலத்தில் பௌத்த
மதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் பின்னர் இடதுசாரி
கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஒரு பொதுவுடமைவாதியாக மாறினார். கான்பூரில்
1925ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டிற்கு அவர் தலைமை
தாங்கினார். பின்னர் கான்பூர் சதி வழக்கில் அவர் ஒரு குற்றவாளியாகச்
சேர்க்கப்பட்டார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ்
கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர் தன்னை “உலகப் பொதுவுடமை
இயக்கத்தின் பிரதிநிதி” என அறிமுகப்படுத்திக் கொண்டு வாழ்த்துரை
வழங்கினார்.
காந்தியின் மீது பற்றும் முரண்பாடும்
காந்தியின்
மீது துவக்க காலத்தில் மிகப் பெரிய மரியாதையை வைத்திருந்தவர் சிங்காரவேலர்.
விடுதலை பெற்ற இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என அவருக்கு பல பகிரங்கக்
கடிதங்கள் எழுதினார். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் “நம்முடைய
துரதிருஷ்ட மக்கள் தற்போதைய அந்நியர் சுரண்டலிலிருந்தும் எதிர் காலத்தில்
நம்மவர் சுரண்டலிலிருந்தும் விடுபடாத வரை அவர்களுக்கு சுதந்திரம் என்பதோ
மகிழ்வு என்பதோ கிடையாது என நான் நம்புகிறேன். ஆதலால் தான், பொதுவுடமை தான்
நிலங்களையும் தொழிற்சாலைகளையும் பொது நன்மைக்காகவும் தொழிலாளர்களின்
நன்மைக்காகவும் தன்னகத்தே கொண்டுள்ளது எனவும் நம்புகிறேன். இந்தப்
பொதுவுடமை சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் நல்கும் என்பதில்எனக்கு
நம்பிக்கையுண்டு.... ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று கொஞ்சம் நிலத்திற்கு
சொந்தக்காரனாக இருக்க வேண்டும். அவனவன் சொந்த நிலத்தில் அவனவனே பாடுபட்டு
பயிரிட வேண்டும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று சொந்தமான நல்லதொரு
குடிசையில் வாடகையின்றி நலமுடன் வாழ வேண்டும். இந்த உறுதிமொழியை வழங்காதவரை
எந்தவித சுயராஜ்யமும் சிறந்ததாக நான் நிச்சயம் கருதமாட்டேன்” என
எழுதினார். இவ்வாறு காந்தியிடம் மிகவும் எதிர்பார்த்ததற்கு மாறாக அவரது
பேச்சும் நடவடிக்கையும் அமைந்ததைப் பார்த்த சிங்காரவேலர் பிற்காலத்தில்
காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பொதுவுடமை போராளியாக...
பொதுவுடமை
இயக்கச் சித்தாந்தத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடும் உறுதியும் ஆழமானது.
மாமேதை லெனின் மரணமடைந்தபோது அவர் வெளியிட்ட உணர்ச்சி மிக்கஇரங்கல்
செய்தியிலும் இதனை வெளிப்படுத்தினார். அதன் ஒரு பகுதி வருமாறு. “தம்
சொந்தநாட்டில் நிக்கோலாய் லெனின் அரசியல், சிந்தனை, தத்துவம் ஆகிய
துறைகளில் ஏற்படுத்திய மிகப்பெரும் புரட்சி அழிக்கப்படலாம். ஒரு கால்
மக்கள் சிலரின் தன்னலப்போக்கினால் ஒதுக்கி தள்ளப்படலாம். ஆனால் அது
மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறுதியாக உலகம் முழுவதும் உள்ள
தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகச் சிறப்புள்ளதாகவும், இன்பம் உள்ளதாகவும்
ஆக்கும். ஏராளமானவற்றை செய்துள்ள அவருக்கு ஒவ்வொரு மனிதனும் மற்ற
மனிதர்களைப் போலவே உழைக்கவும், வாழவும் உரிமை உண்டு என்ற தெளிவான தோற்றத்தை
தொழிலாளிக்கு தந்தஅவருக்கு, நம் அன்பையும் நன்றி உணர்வுடனான வணக்கத்தையும்
காட்டுகிற முறையில் எங்கள் கரங்களை உயர்த்துகிறோம்”. பிற்காலத்தில்
சோவியத் யூனியன் சுயநல சக்திகளாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும்
சிதறுண்டதையும் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்ததையும் நாம் அறிவோம். ஆயினும்
பின்னாளில் நடக்க இருப்பது குறித்து எவ்வளவு தீர்க்க தரிசனமாக 1924ம்
ஆண்டே சிங்காரவேலர் வெளிப்படுத்தினார் என்பது வியக்கத்தக்கதாகும்.
நாடாளுமன்ற
நடவடிக்கைகளில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது புரட்சிகரமானதல்ல என
வாதிடுவோருக்கு 1930களில் அவர் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார். “சமதர்ம
ஞானத்தை பொதுமேடையிலிருந்து தெரிவிப்பதுடன் சட்டசபைகளிலும் மற்ற பல
தேசியஸ்தாபனங்களிலும் நுழைந்து பொதுமக்களி டம் நெருங்க வேண்டும். சட்ட
சபைகளால் மட்டும் சமதர்மத்தை நாட்டில் ஸ்தாபிக்க முடியாது. ஆனால்
அவ்விடத்தில் செய்யும் பிரச்சாரம் பல கோடி மக்களுக்கு முழுமையாக
எட்டும்”.இந்தியாவில் முதல் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய பெருமை 1905ல்
ஹார்வி மில் தொழிலாளர்களுக்கான சங்கத்தை உருவாக்கிய வ.உ.சிக்கு உண்டு.
ஆனால் இந்தியாவில் 1918ம் ஆண்டு வாக்கில் ஒரு இடதுசாரி தொழிற்சங்க
இயக்கத்தை உருவாக்கிய பெருமை சிங்காரவேலருக்கே உண்டு. தென் இந்திய ரயில்வே
தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தலைமையேற்று நடத்திய காரணத்திற்காக
சிங்காரவேலர் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆயினும்
தண்டனை முடியும் முன்பே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பெரியாருடன் நட்பும் - முரண்பாடும்
மூடநம்பிக்கைகளுக்கு
எதிராகவும், சமூக சீர்திருத்த கருத்துகளுக்காகவும் தீவிரமாகச்
செயல்பட்டவர் சிங்காரவேலர். பெரியாருடன் நட்புக் கொண்டிருந்த சிங்காரவேலர்
அவரை சமதர்மக் கருத்துக்களை ஏற்க வைத்தார். இதனையொட்டித்தான் பெரியார்
1931-32 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து
திரும்பிய பிறகு பொதுமேடைகளில் தீவிரமாக சுயமரியாதை கருத்துக்களுடன்
சமதர்மக் கருத்துக்களையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார். ஈரோட்டில்
நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டை “சுயமரியாதை சமதர்ம இயக்கமாநாடாக”
நடத்திய பெரியார் அதில் சிங்காரவேலரையும் பங்கேற்க வைத்தார். பெரியார்
நடத்திய சமதர்ம பிரச்சாரம் கண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அச்சமடைந்தது.
சுயமரியாதை இயக்கத்தில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும்
அச்சமடைந்தனர். நிர்ப்பந்தம் காரணமாக பெரியார் பிற்காலத்தில் சமதர்ம
பிரச்சாரத்தை கைவிட்டு சுயமரியாதை இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்.
இதனால் அதிருப்தியடைந்த சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் சுயமரியாதை
இயக்கத்துடனான தங்கள் தொடர்பை முறித்துக் கொண்டனர். பெரியாரிடம் ஏற்பட்ட
மாற்றத்திற்காக சிங்காரவேலர் பிற்காலத்தில் அவரை விமர்சனம் செய்தும்
பிரச்சாரம் செய்தார்.
சமூக சீர்திருத்தத்தில் தனிக் கவனம்
எனினும்
தன்வாழ்நாள் முழுவதும் பொதுவுடமை இயக்க கருத்துக்களோடு சமூக சீர்திருத்த
கருத்துக்களிலும் தனிக் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தார் சிங்காரவேலர்.
இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது. “நமது நாட்டில் மூன்று
முக்கியமான தீமைகள் பரவியுள்ளதைக் காணலாம். அவையாவன: மதபேதம், ஜாதிபேதம்,
பொருளாதார பேதம். மற்ற தேசங்களில் பொருளாதார பேதம் ஒன்றே காணப்படும்.
இந்திய தேசத்தில் மாத்திரம் இம்மூன்றும் நிலைபெற்றுள்ளது. ஆதலின் இந்திய
தேசத்தில் பொருளாதார வித்தியாசத்தை ஒழிப்பதோடு சாதி, மத வித்தியாசங்கள்
ஒழிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். சிலர் பொருளாதார பேதம் ஒழிந்தால் மத
பேதமும், சாதிபேதமும் தானாகஒழிந்து விடும் என்கிறார்கள்.
ஆனால்
இதுமாத்திரம் போதாதென்று தோன்றுகிறது. ஏனெனில் நமது தேசம் மற்ற தேசங்களை
விட விசித்திரமானதோர் தேசமாகும். எங்குமில்லாத சமூக வித்தியாசங்கள் இங்கு
தோன்றியுள்ளன”. வர்க்க ஒடுக்குமுறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஏக
காலத்தில் போராட வேண்டுமென 1930களில் அவர் கூறியது இன்றளவும் பொருந்தக்
கூடிய ஒன்றாகும்.தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை
பெற அவர்கள் மென்மேலும் விழிப்புணர்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார்
சிங்காரவேலர். இது குறித்து அவர் கூறுவதாவது. “நமது தாழ்த்தப்பட்ட மக்களின்
நிலைமை அபிவிருத்தியடைய வேண்டுமானால் பஞ்சமர், பறையர்என தாழ்த்தப்பட்ட
மக்கள் அரசியல்துறையில் இறங்கி தங்கள் சமத்துவத்தைப் பெற தாங்களே முயற்சி
செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட வம்சத்தில் உதித்த இரண்டொரு முதலாளிகளால்
தங்களுக்கு எதுவும் கூடி வரப்போவதில்லை. சமதர்ம ஆட்சி வரும் வரை
தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளை தாங்களே பெற வேண்டும்.
தீண்டாமை ஒழிக என்ற மந்திர உபதேசம் செய்வதால் 7 கோடி மக்களின் தரித்திரம்
ஒழியும் என்பது வஞ்சனையே ஆகும்”.
முன்னெடுத்துச் செல்வோம்
இவ்வாறு
பொதுவாழ்வின் பல்வேறு தடங்களில் ஆழமான முத்திரை பதித்தவர் சிங்காரவேலர்.
எனினும் அவர் நடத்திய போராட்டங்கள், வெளியிட்ட கருத்துக்கள், செய்த
பணிகளுக்கு ஏற்ப போதுமான அளவில் அவர் நினைவு கூரப்படவில்லை என்ற நியாயமான
ஆதங்கம் பலருக்கும் உள்ளது. அதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய கடமை இன்றைய
தலைமுறைக்கு உண்டு.இடதுசாரி இயக்கம் இன்று அரசியல், சித்தாந்த, சமூக
ரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ளும்
திராணியும், உறுதிப்பாடும் அதன் கோட்பாடுகளுக்குள்ளேயே உண்டு.
சிங்காரவேலரின் பல்வேறு பங்களிப்புகளை நினைவுகூர்வது மட்டுமல்ல
முன்னெடுத்துச் செல்வது இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் உரமூட்டும்.
கட்டுரையாளர், தோழர் பி.சம்பத் நன்றி தீக்கதிர்18.02.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக