சனி, 8 பிப்ரவரி, 2014

எலி வளைகளில் உணவு தேடும் அவலம்



ராம் அவதார் , ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அதன் மீது அவர் உரிமை கொண்டாட முடியாது./உத்தரப்பிரதேசத்தின் குருமிஹா - மாபிடோலாவில் சாதி இந்துக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முஷார் இனமக்கள்
 
ராம் அவதார் (60) வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே ஒரு போராட்டம்தான். இவரது போராட்டம் பணத்திற்கானதோ அல்லது தன் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கானதோ அல்ல. தானும் தன்னைச் சார்ந்தவர்களும் எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இவர் போராடிக் கொண்டிருக்கிறார்களா என்பது ஆச்சர்யமாக இருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் குத்வா திலீப் நகர் கிராமத்தைப் சேர்ந்தராம் அவதார் தாழ்த்தப்பட்ட ‘சாதியில் முஷாஹர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தன் குடும்பத்தினருக்குத் தேவையான கோதுமையையும், அரிசியையும் வயல் வெளிகளில் உள்ள எலி வளைகளிலிருந்து கடந்த முப்பதாண்டுகளாக சேகரித்து வருகிறார்.

அறுபது வயதாகும் ராம் அவதார், உயர் சாதியினரால், எவ்வாறு எலி வளைகளைத் தேடி அவர்களது நிலங்களுக்குள் நுழைந்தற்காக பல முறை கசையடிகளைப் பெற்றிருக்கிறார். இவ்வாறு முஷாஹர் இனத்தைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் தங்கள் நிலத்திற்குள் நுழைந்தால் தங்கள் நிலத்தின் புனிதம் கெட்டுவிடும் என்று நிலப்பிரபுக்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்களின் தாக்குதல்களுக்கு பயந்து, அவர்களுக்குத் தெரியாமல், இரவில்தான் எலிகளின் வளைகளிலிருந்து எலிகள் சேகரித்து வைத்துள்ள உணவு தானியங்களைத் திருடி வருகிறார். ஆயினும் அவ்வாறு சேகரித்து வரும் உணவு தானியங்கள் தன் குடும்பத்தினரைப் பட்டினிக் கொடுமையிலிருந்து பாதுகாத்திடக் கூடிய அளவிற்கு போதுமானவை கிடையாது.ராம் அவதார் குடும்பத்தினர் அசைவ உணவு உட்கொள்பவர்கள்தான். இவர்களுக்குக் கிடைக்கும் அசைவ உணவு என்பது வயல்வெளிகளில் கிடைத்திடும் நந்தைகள்தான்.ராம் அவதாருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.

இவர்களும் தங்களுக்கு ஐந்து வயது ஆன காலத்திலிருந்தே தந்தைக்கு அவர் உணவு தானியங்களை சேகரிப்பதற்கு உதவி வருகிறார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டது. அவர்களும் ராம் அவதாரைப் போன்றே எலி வளைகளில் உள்ள உணவு தானியங்களைத் திரட்டி தங்கள் குடும்பங்களை நடத்தி வருகிறார்கள்.ராம் அவதார் தன் நான்கு பேரக் குழந்தைகளையும், அவருடைய கிராமத்தில் ஓர் அறையில் நடந்து வந்த அரசினர் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆயினும் அந்தப் பள்ளிக் கூடம் 2010ல் அங்கிருந்து பக்கத்திலிருந்த கிராமத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. அங்கே, நிலச்சுவான்தார்களின் குழந்தைகள் முஷாஹர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் மீது கற்களை எறிந்து துரத்தியடித்தன. ஆசிரியர்களும், இக்குழந்தைகளை விரும்பவில்லை. எனவே, ராம் அவதார் தன் பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்.வருவாய்த்துறையில் உள்ள ஆவணங்களின்படி ராம் அவதாரின் பெயருக்கு ஒரு ஏக்கர் நிலம் உண்டு. ஆனால் அது எங்கிருக்கிறது என்று கூறுவதற்கே ராம் அவதார் அச்சப்படுகிறார். ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது, அந்த நிலம் ராம் அவதாருக்குக் கிடைத்தது. ஆயினும் இப்போது அந்த நிலத்தைப் பயன்படுத்தி வரும் நிலப்பிரபுவிடமிருந்து அதனைப் பெறக் கூடிய வல்லமை ராம் அவதாருக்குக் கிடையாது.

அரசாங்கத்திடமிருந்து ராம் அவதார் தன் வாழ்நாளில் பெற்ற உதவி என்னவென்றால் இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் அரைகுறையாகக் கட்டித்தரப்பட்ட செங்கல் வீடு ஒன்றுதான்.இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் ராம் அவதார்கள் ஒருவர், இருவர் அல்ல. இதேபோன்று உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட முஷாஹர்கள் மிகவும் வறுமையில்வாடி வதங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் உணவுக்காக எலி வளைகளைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்
நன்றி தீக்கதிர் :ச.வீரமணி(ஆதாரம்: தி மெயில் டுடே)

கருத்துகள் இல்லை: