வெள்ளி, 6 டிசம்பர், 2013

தோழர் நெல்சன் மண்டேலாவிற்கு நமது அஞ்சலி

நெல்சன் மண்டேலா: கண்ணீரிலிருந்து பிறந்த நெருப்பு!

சிந்தன் ரா


Nelson Rolihlahla Mandela
Nelson Rolihlahla Mandela

உலக ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராளியும், ஆதர்ச நாயகனுமான நெல்சன் மண்டேலா தனது 95 வது வயதில் காலமானார். அவர் வாழ்ந்து போராடிய ஆப்பிரிக்க நிலப்பரப்பும், உலகம் முழுவதுமுள்ள தோழமைகளின் கண்ணீர் பெருக்கெடுக்க இந்தச் செய்தி காதுகளை வந்தடைந்தது.
ஆப்ரிக்க மக்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மண்டேலா உலகத்தால் மதிக்கப்படும் பெரும் தலைவர்களின் ஒருவர். அவரின் வாழ்க்கை நாம் கற்று பின்பற்றத் தகுந்ததாகும்.
வாழ்க்கை குறிப்பு:

நெல்சன் மண்டேலா – 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் பிறந்தார். இளங்கலை படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். தன் வாழ்க்கையை, தென் ஆப்ரிக்க மண்ணில் சமத்துவம் மலர்வதற்காக அற்பணித்துக்கொண்ட அவரின் போராட்டங்கள், ஜனநாயக முறையிலும், ஆயுதப் போராட்டமாகவும் – அடக்குமுறையை எதிர்த்த சமத்துவத்துக்கான போராட்டமாகவும் இருந்தது. இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது,1990 ஆம் ஆண்டு இந்திய வம்சாவழி அல்லாத மண்டேலாவுக்கு முதன்முறையாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் செயல்பட்ட ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இன்றுவரை அரசை வழி நடத்தி வருகிறது.

ஆயுதப் போராட்டம்:

அமைதி வழிப் போராட்டம் பலனளிக்காதபோது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் துணிந்த மண்டேலா – இனவெறிக்கு எதிராக மனித நேயத்தை முன் நிறுத்துவதில் தெளிவாக இருந்தார். அது குறித்து பேசும்போது,

”1961 ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நானும் எனது நண்பர்களும், நம் நாடு உள்ள நிலையில் அமைதியையும், அகிம்சையையும் பேசிக்கொண்டிருப்பது கற்பனாவாதம், வன்முறை தவிர்க்க முடியாதது என முடிவு செய்தோம். அந்தக் காலகட்டத்தில் அரசு எங்கள் அமைதியான கோரிக்கைகளை அடக்குமுறை கொண்டு நிராகரித்தது”
”இந்த முடிவுக்கு நாங்கள் எளிதில் வந்துவிடவில்லை. எல்லா வழிமுறைகளும் தோல்வியடைந்த பிறகே, அமைதி வழிப் போராட்டத்துக்கான எல்லா வழிகளும் அடைபட்ட பிறகே இந்த முடிவைச் செய்தோம்… அரசு எங்களுக்கு வேறெந்த வாய்ப்பையும் வழங்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

வெள்ளை அடக்குமுறையை எதிர்த்தபோதும், எம்.கே அமைப்பினர் தெளிவாக – கருப்பர் இனவாதத்தை ஒதுக்கி வைத்தனர். தங்கள் பிரகடனத்தை இவ்வாறு அமைத்துக் கொண்டனர். “அமைதியும், ஒருமைப்பாடும், அனைத்து மக்களுக்கும் சம உரிமையும் கொண்ட தென் ஆப்ரிக்காவுக்காக நாங்கள் போராடுகிறோம்.” “வெள்ளை அடக்குமுறையாளர்களைப் போல நாங்கள் இனவெறியர்கள் அல்ல. எங்கள் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் இந்த தேசத்தில் வாழும் ‘அனைவருக்குமான சுதந்திரத்தை’ தன் செய்தியாக அறிவிக்கிறது”.

ஒடுக்குமுறைக்கு எதிராக சமத்துவத்தை பிரகடனம் செய்தது அந்தப் போராட்டத்திற்கு ஆன்ம வலுச் சேர்த்தது.

மண்டேலாவுக்கு தடை:

1956 இல் அமைதியழிப் போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவரை தேசத் துரோக வழக்கில் கைது செய்தனர். இதனை எதிர்த்து 1961 வரை சட்டப் போராட்டம் நடத்தி விடுதலை பெற்றார். இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நிறவெறி அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்த பின்னர், அவர்கள் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். ஆனால், ஆப்ரிக்க அரசு, அதையே காரணமாக வைத்து – மண்டேலா உள்ளிட்டவர்களை தடை செய்தது. 1962 மீண்டும் அரசால் கைது செய்யப்பட்டார். 1963 இல் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்ரிக்காவின் அடக்குமுறையாளர்கள் மண்டேலாவை கம்யூனிஸ்ட் என்றும், கம்யூனிச நாடுகளுடன் துணையோடு கலகம் செய்வதாகவும் குற்றம் சாட்டினர். உலக அளவில் நடந்துகொண்டிருந்த ‘பனிப்போர்’ சூழலை பயன்படுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது ஆப்ரிக்க அரசு. அவர் மீது ஆப்ரிக்க அரசு மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, அமெரிக்காவில் நுழைய விதித்தது. இந்தத் தடை ஜூலை 2008 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

நானொரு கம்யூனிஸ்ட் அல்ல:

அப்போது (1961 ஆம் ஆண்டு) ஆப்ரிக்க நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரை புகழ்பெற்றது. அந்த உரையில் தானொரு கம்யூனிஸ்ட் அல்ல என்பதையும், வெள்ளை ஆப்ரிக்கர்களால், விடுதலைக்கும், ஜனநாயகத்துக்குமான இயல்பான குரலை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் வாதிடுகிறார். (Pretoria Supreme Court, 20 April 1964)

“1944 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தேன். எனது இளமைக் காலங்களில் கம்யூனிஸ்டுகளை தேசிய காங்கிரசில் இணைக்க வேண்டும் என விரும்பினேன். கம்யூனிஸ்ட்க் கட்சியும், தேசிய காங்கிரசும் சில பிரச்சனைகளில் இணைந்து செயல்பட வேண்டுமென விரும்பினேன். ஆனால் ஆப்ரிக்க தேசியவாதக் கொள்கை நீர்த்துப் போய்விடுமென பலர் அதனை எதிர்த்தார்கள்.

நான் ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் அணியில் இருந்தபோது ஒரு குழு கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகளை நீக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தது. அந்தப் பிரிவினர், பிற்போக்குவாதிகளாகவும், அடிப்படைவாதிகளாகவும் இருந்தனர். அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து, தோல்வியடையச் செய்தோம்…

கம்யூனிசம் குறித்து, முன்முடிவோடு அணுகும் தென்னாப்ரிக்க வெள்ளையர்களுக்கு, ஆப்ரிக்க அரசியல்வாதிகள் கம்யூனிஸ்டுகளை ஏன் தங்கள் நண்பர்களாகக் கருதுகிறார்கள் என்பது புரியாது. ஆனால், அதற்கு தெளிவான காரணம் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதில் எங்களுக்கும் அவர்களுக்கும், கருத்து அடிப்படையில் பல வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்டுகள் மட்டுமே, ஆப்ரிக்க போராளிகளை நண்பர்களாக கருதினார்கள். சமத்துவத்தை பல பத்தாண்டுகளாக ஏற்படுத்தி செயல்பட்டார்கள். எங்களோடு சேர்ந்து உண்டார்கள், பேசினார்கள், வாழ்ந்தார்கள், உழைத்தார்கள். அவர்கள் மட்டும்தான் எங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டார்கள். இதனால் ஆப்ரிக்காவில் பலரும் விடுதலையை, கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார்கள்.

இதனால் (வெள்ளையர்கள்) அனைத்து விதமான ஜனநாயக அரசையும், விடுதலையையும் கம்யூனிசத்தின் பெயரால் விரிவுரைத்து, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களையும் கம்யூனிச தடைச் சட்டத்தின் பேரால் தடை செய்தார்கள். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருபோதும் உறுப்பினராக இருந்ததில்லை, ஆனால் கம்யூனிச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நின்றேன். இதனால் நானும் தடைசெய்யப்பட்டேன்.” என்று குறிப்பிடுகிறார். இதே புரிதலுடன், ஆப்ரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் இன்றுவரை கூட்டாக செயல்படுகின்றன. கம்யூனிஸ்டுகளும், தொழிற்சங்கங்க கூட்டமைப்பும் தேர்தலில் பங்கெடுப்பதில்லை.

சிறை வாழ்க்கையும், பொது வாழ்விலிருந்து விலகியதும்:

உலகில் அதிக ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்த மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் சாட்சியமாகும். சிறைவாழ்க்கையை ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். சிறையில் இருந்த காலத்தில் மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு காச நோய் பீடித்து மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றார். இதற்கு உலக அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து 1990 இல் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்

மண்டேலா வாழ்ந்த சிறை:

அவரது விடுதலைக்கு பிறகு அமைந்த புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக செயலாற்றினார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகத் தகுதியான நபராக, பெருமை சேர்த்தார். சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மண்டேலாவின் சிறை வாழ்க்கையும் ஒரு போராட்டமாக அமைந்து, உலகம் முழுவதும் ஆதரவலைகளை உருவாக்கியது. அவரின் மனைவியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. “மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்ற ஆசை வார்த்தைக்கு மயங்காத அந்தக் தலைவர் – அடக்குமுறையிலிருந்து ஆப்ரிக்காவை விடுதலை செய்து, உலக இனவெறி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றின் மகுடமானார்.தோழர் மண்டேலா அவர்களின்  மறைவிற்கு  நமது BSNLEU கடலூர் மாவட்ட சங்கம் 
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறது 
நன்றி ...மாற்று சமூக வலைத்லைத்தளம்

கருத்துகள் இல்லை: