சனி, 29 ஆகஸ்ட், 2015

குஜராத் கலவரம் நோக்கம் என்ன?மக்கள் தொகையில்  முற்படுத்தப்பட்ட பிரிவினர் 26% (பட்டேல்கள்- 14%, பிராமணர்கள்-4%, பனியாக்கள்-3% ஏனையோர்-5%) பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 46%சிறுபான்மையோர் 9% (கிறித்துவர்கள் 0.52% உட்பட) தலித் பிரிவினர் 6% மலைவாழ் ஆதிவாசிபிரிவினர் 13%

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தம்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனக்கோரி நடக்கும் போராட்டத்தில் 9 பேர் கொல்லப்பட்டதுமின்றி ஏராளமான வன்முறைகள் நடந்தேறியுள்ளன. இட ஒதுக்கீடு தேவை என ஆரம்பித்த கோரிக்கை “அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்” என திசை திரும்பியுள்ளது. இடஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் உட்பட சங்பரிவாரங்கள், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தொடங்கியுள்ளன. மோடியின் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு இரத்தமும் சதையுமாக இருந்த பட்டேல் சமூகமே போராட்டத்தில் குதித்திருப்பது மோடியின் குஜராத் மாடல் வெறும் மோசடியான மாயைதான் என்பதை வெள்ளிடைமலையாக வெளிக்காட்டியுள்ளது.

குஜராத்தில் சமூக நிலைமை
கடந்த பல ஆண்டுகளாக குஜராத்தின் அரசியல், சமூக, பொருளாதார அரங்கில் மிகப் பெரும் செல்வாக்கை செலுத்திவருபவர்கள் பட்டேல் இனத்தவர். ஆரம்பத்தில் பணக்கார விவசாயிகளாகவும் நிலவுடமையாளர்களாகவும் இருந்த பட்டேல் இனத்தவர் 1960களில் அமலான பசுமைப் புரட்சி மூலம் மிகப்பெரிய நன்மைகளை அடைந்தனர். விவசாய உற்பத்தி மூலம் கிடைத்த உபரியை இவர்கள் நகர்ப்புறத்தில் வணிகம், ரியல் எஸ்டேட், தொழில் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்தனர். கிராமப்புறத்தில் சமூக ஆளுமை செலுத்திய இவர்கள் ஒரு குறுகிய காலத்தில் நகர்ப்புற ஆளுமையையும் தம்கீழ் கொண்டுவந்தனர்.

பாஜகவின் ஆதரவாளர்களாகபட்டேல் இனத்தவர்!
ஆரம்பத்தில் பட்டேல் இனத்தவர் காங்கிரசின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். காங்கிரஸ் கட்சி தேசியமயம், சோசலிசம் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தபொழுது அக்கொள்கைகள் தமக்கு எதிரானது என பட்டேல்கள் கருதினர். காகிதப்பூ மணக்காது; காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது என்று போய்விட்டது தனிக்கதை! எனினும் காங்கிரசிலிருந்து விலக ஆரம்பித்த பட்டேல் இனத்தவருக்கு இராஜாஜி துவங்கிய சுதந்திரா கட்சி பொருத்தமான அரசியல் அமைப்பாக இருந்தது. அன்றைக்கே இராஜாஜி தனியார்மயம்தான் தேவை என்று கூறியதும் தேசியமயத்தை கண்மூடித்தனமாக எதிர்த்ததும் வரலாறு! மிகப்பெரும்பான்மையான பட்டேல் இனத்தவர்கள் சுதந்திரா கட்சி பக்கம் சாய்ந்தனர்.

1962, 67 தேர்தல்களில் குஜராத்தில் சுதந்திரா கட்சி ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வந்தது.பின்னர் சுதந்திராகட்சி மங்கியபொழுது, பட்டேல்கள் ஜனசங்கம் பக்கம் சாய்ந்தனர். 1980ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர் கல்வி அமைப்புகளில் இடஒதுக்கீடு அமல்படுத்திய பொழுது பட்டேல் இனத்தவர் அதனை எதிர்த்து குஜராத்தில் மிகப்பெரிய வன்முறையில் ஈடுபட்டனர். தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அன்று ஆர்.எஸ். எஸ். உட்பட சங்பரிவாரம் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தது. எனவே பட்டேல்களுக்கு சங்பரிவாரம் மிகவும் விரும்பத்தக்க அமைப்பாக மாறத்தொடங்கியது. 1990ல் மண்டல் கமிஷன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தபொழுதும் குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்பொழுதும் இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது பட்டேல் இனத்தவர்தான்.
அப்பொழுதும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து பட்டேல் இனத்தவருக்கு ஆதரவு அளித்தது சங்பரிவாரம். இதற்கு பிறகு பட்டேல் இனத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அசைக்க முடியாத அடித்தளமாக மாறினர். இந்த அடித்தளத்தை மையமாக வைத்து ஏனைய சமூகத்தவரையும் தன்வயப்படுத்தி பாஜக குஜராத்தில் தன்னை வளர்த்துக்கொண்டது. இதற்கு இஸ்லாமிய சமூகத்தையும் கிறித்துவ சமூகத்தையும் ஒட்டு மொத்த இந்துக்களுக்கு எதிரானவர்களாக உருவாக்குவதில் சங்பரிவாரம் வெற்றி பெற்றது எனில் அதற்கு முக்கிய காரணம் பட்டேல் இனத்தவர் பெரும்பான்மையாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவாளர்களாக இருந்ததுதான்! இதனை 2007ம் ஆண்டு வாக்கு விவரங்கள் தெளிவாக்குகின்றன

பட்டேல் இனத்தவரின்சமூக - அரசியல் ஆளுமை
பல ஆண்டுகளாக தமது சமூக ஆளுமையை பயன்படுத்தி பட்டேல் இனத்தவர் வணிகத்திலும் தொழிலிலும் பல சலுகைகளைப் பெற்று அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்தனர் எனில் மிகை அல்ல. இந்த முன்னேற்றம் பா.ஜ.க. ஆட்சியில் விசுவரூபம் எடுத்தது. ற ரூ.10 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்துள்ள தொழிற்சாலைகள் மொத்தம் 6146 உள்ளது; எனில் அவற்றில் 1700 ஆலைகள் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானது! ற குஜராத்தில் உள்ள 120 பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர்களில் 40 பேர் பட்டேல்கள். மாநில முதல்வர், உள்துறை அமைச்சர், பா.ஜ.க. தலைவர் ஆகியோரும் பட்டேல் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ற குஜராத் அமைச்சரவையில் 9 பேர் பட்டேல்கள்.ற நிர்மா, சுல்சான், காடில்லா, சைடஸ், எலிக்கான் இன்ஜினியரிங் ஆகிய மிகப்பெரிய குழுமங்களும் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானவை. ற மிகப்பெரிய வைர வியாபாரிகளான சாவ்ஜி தலோக்கியா(இவர்தான் தமது ஊழியர்களுக்கு தீபாவளி இனாமாக கார்கள் மற்றும் வீடுகளை பரிசளித்தார்), வல்லப் பட்டேல், லால்ஜி பட்டேல்(இவர்தான் மோடியின் உடையை 4.3 கோடிக்கு வாங்கியவர்) போன்றோரும் பட்டேல்களே! ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குழுமங்களான பர்சவந்த் குழுமம், கணேஷ் குழுமம், சூர்யா குழுமம் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானவை!ற அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 25 சதவீதம் பட்டேல் இனத்தவர்.ற அமெரிக்காவில் 22000 ஓட்டல்களை இந்தியர்கள் நடத்துகின்றனர், இவற்றின் மதிப்பு 127 பில்லியன் டாலர்கள். அவற்றில் 60 சதவீதம் பட்டேல் இனத்தவருக்கு சொந்தமானவை!

போராட்டத்தின் உண்மை நோக்கம் என்ன?
இப்படி சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் ஆளுமை இடத்தில் உள்ள பட்டேல்கள் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் குதிக்க காரணம் என்ன?குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 60,000 சிறிய மற்றும் நடுத்தர ஆலைகள் மூடப்பட்டு விட்டன. இது மோடியின் அதானி - நிர்மா போன்ற பெருமுதலாளிகளை ஆதரிக்கும் கொள்கைகளினால் உருவான விளைவு ஆகும். மூடப்பட்ட ஆலைகளில் பெரும்பாலானவை பட்டேல் இனத்தவருக்கு சொந்தம். வெளிநாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக வைரத்தொழில் மங்கிவிட்டது. சூரத்தில் பல சிறிய வைர ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. சிறு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் சுமார் 90பேர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இவர்களில் பட்டேல் இனத்தவரும் உண்டு.பட்டேல் இனத்தவரில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் நிரந்தரமற்ற அரசுப் பணிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.7500/- மட்டுமே! தம்மைவிட கீழ் நிலையில் இருந்த பிற்படுத்தப்பட்டவர்களும் தலித் மற்றும் பழங்குடியினரும் அரசு வேலைகளை பெறுகின்றனர்; இதற்கு காரணம் அவர்களுக்கான இடஒதுக்கீடுதான் எனும் தவறான உணர்வு பட்டேல் இனத்தவருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்று பட்டேல் இனத்தவர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இடஒதுக்கீட்டை எதிர்த்து கலகம் செய்த பட்டேல் இனத்தவர் இன்று இடஒதுக்கீடு கோருவது முரண்பாடகவே உள்ளது. “எங்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடு; அல்லது இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கு” என போராட்டக்காரர்கள் கூறுவது போராட்டத்தின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. குஜராத்தை 13 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே தமக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை உணர்வதற்கு பதிலாக, பட்டேல் இனத்தவர் தமது கோபத்தை இடஒதுக்கீடுக்கு எதிராக திருப்புவது நியாயமற்ற ஒன்று! அதனை அனுமதிப்பது என்பது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய தீங்கு ஆகும்.பட்டேல் போராட்டத்தை ஒரு காரணமாக பயன்படுத்தி இடஒதுக்கீட்டை அழித்திட ஆர்எஸ்எஸ் பரிவாரம் முயல்கிறது. இடஒதுக்கீடு நியாயம் எனும் கருத்து உள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது!
நன்றி :தீக்கதிர் 29.08.2015

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

28.08.2015 அன்று உணவு இடைவேளையில் கடலூரில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்
அதானி ஆக்டோபஸ் ......கதறும் கமுதி

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே காட்டு கருவேல மரமும், அதிலிருந்து தயாரிக்கப்படும் கரியும் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதையும் தாண்டி நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் என்று விளையும் நல்ல விவசாயமும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் அடியோடு அழிக்கும் பணி அதிவேகமாக அங்கே துவங்கியிருக்கிறது.

ஆம்!கமுதி வட்டம் செங்கப்படை - தாதகுளம் - இடையங்குளம் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விதவிதமான வாகனங்கள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேற்று மாநிலத்து ஆட்கள் தான் அந்த இயந்திரங்களை இயக்குகிறார்கள். விசாரித்ததில் குஜராத் மாநிலம் என்று தெரிந்தது.சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகள் தான் விறுவிறுப்பாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்கள்.“மதுரை டெம்பிள்சிட்டி, கமுதி சோலார்சிட்டி” என்று அதிமுகவினர் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து ஏராளமான டிஜிட்டல் தட்டிகளை பல வண்ணங்களில் வைத்துள்ளனர்.

காட்டுக் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மைதானமாக காட்சியளிக்கிறது. இத்தனை நாட்களும் அதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் திகைத்து திசைதெரியாமல் நிற்கின்றன. இயற்கை உபாதைகளைக் கழிக்க ஆண்களும், பெண்களும் பயன்படுத்திய இடங்கள் இப்போது கம்பி முள் வேலி போட்டு, கேட் போடப்பட்டு பெரும் நிறுவனத்திற்கு சொந்தமாகிவிட்டது. ஒதுங்க இடமின்றி, இப்போது அல்லல்படுகின்றனர் பெண்கள். தாதகுளம் கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில் பாதிவரை தற்போது கம்பெனியால் வேலி போட்டு மடக்கப்பட்டிருக்கிறது. மெயின் ரோட்டிலிருந்து தாதகுளம் செல்லும் கிராமச்சாலையின் இருபுறமும் இருக்கும் நிலங்களும், சோலார் கம்பெனியால் வாங்கப்பட்டுள்ளது.

 இனி சாலை பொதுச்சாலையாக நீடிக்குமா? ‘அந்நியர்கள் உள்ளே வரக்கூடாது’ அல்லது ‘அனுமதி பெற்று உள்ள வரவும்’ என்று அச்சாலையில் விரைவில் அறிவிப்பு பலகை வைக்கப்படலாம். ஊரை காலி பண்ணி வேற இடத்துக்கு போகப் போறோம் என்று பள்ளி சிறுவர்கள் உட்பட சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.பிறந்து வாழ்ந்த மண்ணைவிட்டு நிரந்தரமாக இடம் மாறிச் செல்வது எவ்வளவு கொடூரமானது? சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் அவலம்! வழிபட்ட கோயிலை, மூதாதையர்களின் கல்லறையை, ஓடியாடி, கூடிக் குழாவிய இடத்தை என எல்லாவற்றையும் இழந்துவிட்டு எங்கே போய் என்ன செய்யப் போகிறார்கள்?நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
 சூரிய ஓளி மின்சார நிலையம் அமைந்தால் வேலை கிடைக்கும் என்று எவனோ சொன்னானாம்! பொக்லைன் எந்திரத்தால் பிடுங்கப்படும் காட்டு கருவேல மரங்களின் சல்லி வேர்களை வெட்டிவிடும் வேலையை இப்போது பெண்கள் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகளின் போது ஒரு சிலருக்கு வேலை கிடைக்கலாம். ஏனென்றால் பெரும்பாலும் அதற்கும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படும். மின்நிலையம் அமைக்கப்பட்ட பிறகு நிலத்தை இழந்த கிராமத்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அதில் என்ன வேலை தருவார்கள்? வேடிக்கை பார்க்கக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.

 மோடி அரசு சட்டம் போட்டு விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிக்க முயற்சிக்கிறது. உள்ளூர் நில புரோக்கர்களோ சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து சாமர்த்தியமாக நிலத்தை அபகரித்துள்ளனர். விபரம் தெரியாத கிராமத்து விவசாயிகளை ஏமாற்றி, “குஜராத்காரன் இங்க வரப்போரானா, அப்படியே வந்தாலும் நம்ம ஊர்க் காரனை மீறி நிலத்துல கால் வைச்சிடுவானா” என்று வெற்றுச் சவடால் பேசியே ஏக்கர் 10 ஆயிரம் ரூபாய் என்று 2008லிருந்து 2010க்குள் பெரும்பாலான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.‘நிலம் உங்கள் கைல தான் இருக்கப் போவுது, பவர் மட்டும் கொடுத்தா போதும்‘ என்று, சும்மா வருகிற பணம் தானே என்று பலரும் பவர் எழுதி கொடுத்திருக்கின்றனர். இரண்டு ஏக்கருக்கு பவர் வாங்கிக் கொண்டு அவருக்கு சொந்தமான 10 ஏக்கரும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.பல நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் இவ்வாறு மோசடியாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.கமுதி வட்டத்திற்குட்பட்ட நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலுள்ள பத்திரபதிவு அலுவகங்களில் தான் விற்பனை பத்திரபதிவு நடைபெற்றுள்ளது.

 இதில் பிரதானமான மோசடிப் பேர்வழிகள் வில்வக்கனி, முத்துவழிவிட்டான் ஆகிய இரண்டு நில புரோக்கர்கள் தான். மற்றொருவகை, இடையங்குளம் கிராமத்தில் வசிக்கும் நல்லக்காள் என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை அவர் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழ் கொடுத்து அவருடைய வாரிசு என்று வேறு சிலரை அழைத்துச் சென்று சிவகாசி பத்திரபதிவு அலுவலகத்தில் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நல்லக்காள் உயிரோடு இருக்கிறார் என்று தற்போது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். தான் உயிரோடிருக்கும் சான்றிதழுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி புகார் கொடுத்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிலத்தில் இன்றைய தேதி வரை இவர் தான் விவசாயம் செய்து கொண்டுள்ளார். இதே போல், 2013ல் லட்சுமண தேவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிட்டனர். தற்போது கிராம நிர்வாக அலுவலரிடம் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் வாங்கி வைத்துள்ளார்.

 இப்படி இன்னும் எத்தனை பேரை உயிரோடு கொன்றிருக்கிறார்களோ - அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்று சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. இல்லையென்றால் உங்கள் இறப்புச் சான்றிதழை உங்களிடமே வழங்கினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.இன்னொரு வகை, ஏக்கர் 10 ஆயிரம் ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு ஏமாந்து விற்று விட்டோமே, இதுபோல் கம்பெனி வருமென்று தெரியாமல் போய்விட்டதே, குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த நிலத்தை அநியாயமாக தாரை வார்த்து விட்டோமே என்று புலம்பும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள். செங்கப்படை கிராம விவசாயிகளுக்கு சொந்தமான மொத்த நிலம் 1800 ஏக்கர். இதில் 1700 ஏக்கர் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

 வீடும் - வாசலும் தான் மிச்சம். கிராம மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கென்று எந்த நிலமும் இல்லை. இப்படியொரு தாலுகாவுக்குட்பட்ட 25க்கு மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மோசடியாகவும், ஏமாற்றியும், மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்போடு, நில புரோக்கர்கள், உள்ளூர் ரவுடிகள் புடைசூழ இந்த மாபெரும் நிலமோசடியை அரங்கேற்றியுள்ளார்கள். பகல்கொள்ளை என்பார்களே அது பத்திரபதிவு, பட்டா மாறுதலுடன் நடைபெற்றிருக்கிறது. இவையனைத்தும் வெட்ட வெளிச்சமானதற்குப் பிறகும், நிலத்தைப் பறிகொடுத்தவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த பிறகும் மாவட்ட நிர்வாகம் கற்சிலையை போல் எந்த அசைவுமின்றி இருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தும் பல கைகள் மாறி தற்போது சோலார் மின்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

 தொழில்துவங்க தனியாரோ, அரசோ, முறையாக நிலங்களை பரிவர்த்தனை செய்து, நியாயமான விலையை விவசாயிகளுக்கு கொடுத்து நிலம் வாங்கலாம்.ஆனால் கமுதியில் மொத்தமும் மோசடியாக இருக்கிறது.எனவே மோசடி பத்திரப்பதிவு, போலி பத்திரம், போலியான பட்டா மாறுதல், பொய்யான சான்றிதழ் அரசுக்கு சொந்தமான கண்மாய், வரத்து வாய்க்கால், சாலைகள், மக்களுக்கான நடைபாதைகள், கிராமத்தின் பொது நிலங்கள் என அனைத்தையும் வாரிச்சுருட்டும் ஆக்டோபஸ் விலங்காக அதானி குழுமம் கமுதியில் காலூன்றி உள்ளது.

 இந்த மாபெரும் நிலமோசடி குறித்து பகிரங்க நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். அதுவரை சோலார் மின்திட்டம் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். நிலபுரோக்கர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்ய வேண்டும். பத்திரப்பதிவு, வருவாய்த்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.உலகுக்கே உணவளிக்கும் உழவர்களின் நிலத்தைப் பறித்து, உண்ணும் சோற்றில் மண் அள்ளிப் போட்ட கயவர்களை எதிர்த்துக் களம் காண்போம்!ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும், அயோக்கியத்தனத்தில் ஈடுபடும் போக்கிரிகளுக்குத்தான் வாழ உரிமையா? நேர்மையாக உழைத்துண்ணும் உழவர்களுக்கு வாழ வழியில்லையா?நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தான காணி நிலத்தை மீட்போம்! வாரீர்! ஒன்று திரள்வீர்! முஷ்டி உயர்த்தி போராட! செங்கொடி இயக்கம் உங்களோடு உடனிருந்து போராட தயாராக இருக்கிறது.------கட்டுரையாளர்: பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

TTA தேர்வில் வெற்றி பெற்றுள்ள தோழர்களை வாழ்த்துகிறோம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கடலூர் மாவட்டத்தில் TTA தேர்வில் கீழ்கண்ட தோழர்கள்  வெற்றி பெற்றுள்ளனர். தோழர்கள் அனைவரையும் நமது மாவட்டச் சங்கம் மனதார பாராட்டுகிறது. .

R. செல்வம் / VLU
E.C. கண்னன் / KAC
V. இளங்கோவன் / VDC
R. ராதாகிருஷ்ணன் / CDL
G. நடராஜன் / CDL

S. செல்வம் / VLU

H. சுந்தர்ராஜ் / ESK

தோழமையுள்ள 
   K.T.சம்பந்தம் 
மாவட்ட செயலர் 

22.08.2015 அன்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்
22.08.2015 அன்று உணவு இடைவேளையில் அரகண்டநல்லூரில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்22.08.2015 அன்று காலை பண்ருட்டியில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்

19.08.2015 அன்று உணவு இடைவேளையில் நெய்வேலியில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்

19.08.2015 அன்று காலை சிதம்பரத்தில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்

18.08.2015 அன்று உணவு இடைவேளையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற செப்டம்பர் 2 பொதுவேலைநிறுத்த விளக்கக்கூட்டத்தின் புகைப்படங்கள்