வியாழன், 2 ஜனவரி, 2014

மான்சாண்டோக்கள் நலன் மத்திய அரசின் தவம்!


மரபணு நீக்கப்பட்ட பயிர்களை இந்திய வயல்களில் விளைவிக்க அனுமதிக்கக்கூடாது என்று விவசாயிகளும், இயற்கைச் சமநிலைவாதிகள் மட்டுமல்ல, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூட எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது. மத்திய அரசோ அந்த எதிர்ப்புகளைப் புறக் கணித்துவிட்டு, அனுமதிப்பதற்கு சாதகமான நிலைப்பாட்டை உருவாக்க முயன்று வருகிறது என்ற செய்தி ஏற்கெனவே வந்தது. இப்போது, இப்பயிர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவைத் தாக்குவதற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்தை உடன்பட வைக்கவும் மத்திய அரசு தயாராகிவருகிறது என்ற செய்தி வந்துள்ளது.இடைக்கால அறிக்கையை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த உச்சநீதிமன்றக் குழு தற் போது இறுதி அறிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்துகளை மீறி வளரக்கூடிய மரபணு நீக்கப் பயிர்கள் இந்திய மண்ணுக்கு ஏற்றவை அல்ல என்று குழு கூறியிருக் கிறது. பல்லுயிர்த் தன்மை வாய்ந்த இந்திய நிலங்களில் இந்தப் பயிர்கள் ஆழ்ந்த தீங்குகளை ஏற்படுத்திவிடும் என்று குழு எச்சரித்துள்ளது.

இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒழுங்கு முறை கட்டமைப்பு முறையாக இல்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. இப் படிப்பட்ட குறைபாடுகள் களையப்படும் வரை யில் இப்பயிர்களை விதைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பதும் குழுவின் ஒரு பரிந்துரை.குழுவின் ஒரு முக்கியமான விமர்சனம், மர பணு நீக்கப்பட்ட பயிர்களால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், பொருளாதாரப் பாதிப்புகள் ஆகியவை பற்றி கண்டுகொள்ளப்படவில்லை என்பதாகும். தற்போது மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகமும் அறிவியல்துறை அமைச்சகமும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்வதற்காக ஒரு வாக்குமூல அறிக்கை யைத் தயாரித்துள்ளன. அதில், குழுவின் இந்தவிமர்சனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட் டுள்ளதாகத் தெரிய வருகிறது.

குறிப்பாக, இவ்வகை விதைகளின் சமூகப் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து குழு கருத்துக் கூறியிருப் பதை இவ்விரு அமைச்சகங்களும் கடுமையாகச் சாடியுள்ளன. குழுவினர் தங்களது ஆய்வு வரம்புக்கு அப்பால் சென்றுள்ளதாகவும், அறி வியல் அம்சங்களோடு மட்டும் நிற்க வேண்டும் என்று அமைச்சகங்கள் கூறியுள்ளனவாம். சமூகப் பொருளாதாரத்திற்கு சம்பந்தமில்லாத அறிவியல் யாருக்குப் பயன்படும்?ஆராய்ச்சி நோக்கங்களுக்கான இவ் வகைப் பயிர்களை ஒரு விதமாகவும், வணிக நோக் கங்களுக்கான பயிர்களை வேறு விதமாகவும் கையாள வேண்டும் என்பதும் குழுவின் பரிந் துரை. இதற்கு இவ்விரு அமைச்சகங்களும், வணிக நோக்கத்திற்குப் பயன்படுமா என்று மதிப்பிடுவது என்பது ஆராய்ச்சியின் ஒரு பகுதிதான் என்று விளக்கம் அளித்துள்ளன.

ஆக, யாருடைய நலன்களுக்குத் தோதாக மன்மோகன் சிங் அரசு இயங்குகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்திய வேளாண் சந்தையை வளைக்கத் துடிக்கும் மான்சாண்டோ போன்ற அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது மத்திய அரசு. அதற்காக உச்சநீதிமன்றக் குழுவை மட்டுமல்ல, மக்கள் வெளிப்படுத்திவரும் கோபத்தை யும் இந்த அரசு கொஞ்சமும் மதிக்கவில்லை என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.
நன்றி தீக்கதிர் 02.01.2014

கருத்துகள் இல்லை: