செவ்வாய், 25 மார்ச், 2014

ஐந்து லட்சம் கோடிக் கடனும், ஆறுச்சாமியின் குடிசை வீடும்

பிரபலமான தேசிய வங்கியின் மூத்தவழக்கறிஞரிடம் இருந்து அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. பழனிவட்டம், நெய்காரப்பட்டி கிராமம், அக்கமநாயக் கன்புதூர், மேற்குத்தெரு, கதவு எண் 12ல்குடியிருக்கும், மாரியப்பன் மகன் ஆறுச் சாமி என்பவரை, 1 லக்கமிட்டவராக காட்டியும், அவரது மகள் ராஜாத்தியை 2 லக்கமிட்டவராகவும் காட்டி நோட்டீஸ் அனுப்பப்பட் டிருந்தது.நெய்காரபட்டி கிளை போஸ்டாபீஸி லிருந்து மேற்குநோக்கி கொழுமம் மெயின் ரோட்டில் அந்த வயதான போஸ்ட்மேன் பய ணித்தார். அவர் பயணித்த சைக்கிளும் அவரது வயதையொத்தது என்பதால் ஒருவித கிரீச் ஒலியை வலிதாளமுடியாமல் விட்டுவிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
அது போஸ்ட்மேனின் வலியையும் சேர்த்து உணர்த்துவதாக இருந்தது. கொளுத்தும் வெயிலும், தார் ரோடும் எளிய மனிதர்களை வறுத்தெடுப்பதற்கு இணக்கமாக இருந்தது. மெயின்ரோட்டிலிருந்து தெற்குப் பக்கம் பிரிந்து உள்ளே செல்லும் மெட்டல் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்த பிறகு அக்கமநாயக்கன்புதூர், தட்டோட்டுக் கூரையுடன் கூடிய காரை உதிர்ந்த செம்மண் சுவர் வீடு களுடன் பரிதாபமாக வரவேற்றது. ஊருக்கு கடைசியில் உள்ள மேற்குத் தெருவைச் சென்று அடைவதற்குள் போஸ்ட்மேனுக்கு நாக்கு தள்ளிவிட்டது.போஸ்ட்மேனிடம் கைநாட்டுப் போட்டு, தபாலை பெற்றுக் கொண்ட ஆறுச்சாமி அதை அதிசயப் பொருளை பார்ப்பது போல முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டிருந்தார்.
படிக்கத் தெரிந்த மகள் ராஜாத்தி வேலை தேடி பக்கத்து நகருக்குப் போயிருந்தாள். போஸ்ட் மேனைப் படிக்கச் சொல்லி கேட்கலாம் என நினைத்தபொழுது, போஸ்ட்மேன் மேற்குத் தெருவை கடந்து சென்றுவிட்டார் என்பதை அவரது சைக்கிள் கிரீச் ஒலி மூலம் சேதி சொன்னது.ஊர்ச்சாவடியில் ஒருவாரத் தாடியைச் சொறிந்து கொண்டு இருந்த ஓய்வுபெற்ற வாத் தியார் சண்முகம், கவரைப் பக்குவமாய் பிரித்து உள்ளே இருந்த நோட்டீஸைப் பதனமாக வெளியில் எடுத்தார். கொஞ்ச நேரம் பொழுது போவதற்கு ஒரு ஆள் கிடைத்தான் என்ற சந்தோஷத்தில் அகமகிழ்ந்த சண்முகம் வாத்தியார், ஆறுச்சாமியை அருகே உட்காரச் சொல்லி பணித்தார். அதற்குப் பிறகு வாத் தியார் சாவதானமாக ராகமிழுத்துப் படித்த நோட்டிஸ் விபரம் பின்வருமாறு:
தாங்கள் எமது கட்சிக்காரர் வங்கியிடம் இருவரும் சேர்ந்து கல்விக்கடன் கேட்டு மனுச்செய்ததில் (இந்த இடத்தில் வாத்தியார் வாசிப்பதை நிறுத்தி “ஒம்பொண்ணோட சேந்து நீயுமா படிக்க கடன் வாங்குன?” என கேட்டார். அதற்கு பதற்றத்துடன் இருந்த ஆறுச்சாமி ஆமாம் என்றும், இல்லை என்றும் மேலும் கீழுமாகவும், பக்கவாட் டிலும் தலையை வேகமாக ஆட்டி தீட்சண்ய மாக பதில் அளித்ததில் வாத்தியார் பயந்து போனார்) மேற்படி மனுவும் கடன் எண் 2325ல் அங்கீகாரம் பெற்று தாங்கள் 07.12.06ம் தேதியில் கடன் தொகையாக ரூ.1,10,000/ம் பெற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக கொதுவை ஒப்பந்தமும் கடன் பத்திரங்களும் வேறு சில ஆதரவுகளும் வங்கிக்கு எழுதிக் கொடுத்துள்ளீர். மேற்படி கடனுக்கு 12 சதவீதம் வட்டி செலுத்தவும் ஒப்புக் கொண் டுள்ளீர். மேற்படி கடன்தொகையை உரிய கெடுவிற்குள் செலுத்துவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளீர்.
மேற்படி கடன் தொகையை அடைந்து கொண்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை சரிவர செலுத்தாமல் இருந்து வருகிறீர்கள். அதனால் உமது கணக்கை ஆதாயம் தராத கணக்கு என்றும், ஒழுங்கற்ற கணக்கு என்றும் கருத்தில் கொள்ளப்பட்டது. சரியான முறையிலும், ஒழுங்கான முறையிலும் வைத்திருக்கும் வங்கியின் கணக்குப்படி 31.09.2013ம் தேதி வரை தாங்கள், ரூ.2,13,196ஐ செலுத்த வேண்டியுள்ளது. தாங்கள் இருவரும் சேர்ந்து மேற்படி கடன் தொகையை செலுத்த வேண்டும். ஒப்புக் கொண்டபடி தவணைத் தொகைகளை வங்கிக்கு செலுத்தவில்லை. கல்விக்கடனின் பயனை அடைந்து கொண்டு அதனைத் திருப்பி வங்கிக்கு செலுத்தாமல் இருப்பது சரியல்ல. 1.10.2013 முதல் பின்வட்டியும், பின் செலவும் செலுத்த வேண்டும்.ஆகையால், இந்த அறிவிப்பு பார்த்தஒருவார காலத்திற்குள் மேற்படி பாக்கித் தொகை ரூ.2,13,196ம் வட்டியும், 1.10.2013 முதல்பின்வட்டியும் இந்த அறிவிப்புச் செலவு ரூ.600ம் சேர்த்து வங்கியில் செலுத்தி, தக்கரசீது பெற்றுக் கொள்ள வேண்டியது.
தவறினால் தங்கள் மீது சட்டப்பூர்வமான கோர்ட்நடவடிக்கை எடுத்து உடன் ஜப்தி, வாரண்டு போன்ற உத்தரவுகள் பெறப்படும் என்றும், அதனால் எமது கட்சிக்காரர் வங்கிக்கு ஏற்படும் அனைத்து செலவு நஷ்டங் களுக்கும் தாங்களே பொறுப்பு என்றும் இதன் மூலம் கண்டிப்பாக அறிவிக்கலாயிற்று - வழக்கறிஞர்.அடுத்த நாள் காலை 11 மணியளவில் ஆறுச்சாமியும், மகள் ராஜாத்தியும் வங்கி மேலாளரின் முன்பு நின்று இருந்தனர். குளிரூட்டப்பட்ட சொகுசு அறையின் சுழல் நாற்காலியில் ஜாக்சன் துறையைப் போலமேலாளர் வீற்றிருந்தார். ஆனால், ஆறுச்சாமி கட்டபொம்மனைப் போல இல்லாமல், நடுங்கும் கைகளை மறைக்கப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தார். இறுதியாக மேலாளர், “படிக்க வாங்கின கடனை வட்டியோட சேத்துக் கட்டலைன்னா இருக் குற குடிசை வீட்ட ஏலத்துக்கு கொண்டு வந்துடுவோம், வாரண்டுல ஒன்னையும் கைதுபண்ணி உள்ள வச்சிடுவோம்“ என மிரட்டி னார்.
கதிகலங்கிப் போன ஆறுச்சாமியைக் கைத்தாங்கலாய் ராஜாத்தி அழைத்து வந்தாள். வங்கியின் வாசலில் வைத்திருந்த தட்டியில், ஆறுச்சாமி மற்றும் ராஜாத்தியின் புகைப்படங்கள் கடன் செலுத்தாதவர்கள் வரிசையில் ஒட்டப்பட்டிருந்தது. அதை ஆறுச்சாமியின் கண்களில் படாமல் ராஜாத்தி அழைத்துச் சென்ற பொழுது அவமானத்தால், அவள் பாதம்பட்ட பூமி நலுவுவது போலிருந்தது.மறுநாள் காலை செய்தித்தாளில் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், டிசம்பரில் நடத்த இருக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்த செய்தி வந்திருந்தது. மேற்படி செய்தியின் சுருக்கம் பின்வருமாறு:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய வாராக்கடன் கடந்த மார்ச் கணக் குப்படி ரூ.1,64,461/- கோடிகளாகவும், 2007-2013க்கு இடைப்பட்ட காலத்தில் வாராக்கடன் ரூ.5லட்சம் கோடிகளாகவும் அதிகரித் துள்ள நிலையில், கடன் வசூலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மன்மோகன் சிங் தலைமையில் ஆளும் மத்திய அரசு மேலும், மேலும் கடன் தள்ளுபடி செய்வதை கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம் நடை பெறுகிறது.
ஊர்ச்சாவடித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு உரக்க செய்தியைப் படித்த சண்முகம் வாத்தியாரை, அடுத்த பக்கத்தில் வந்திருந்த மற்றொரு செய்தி மௌனமாக சிந்திக்க வைத்தது. அது வேறொன்றும் இல்லை, ஒரு வருடத்தில் இந்திய வங்கிகள் 1,20,000 மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனின் மதிப்பு வெறும் ரூ.900/- கோடி, ஆனால், வங்கிகள் மாணவர்கள் கல்விக்கடன் கட்டத் தவணை தவறினால், கைது, ஜப்தி, திருட்டுக் குற்றவாளிகளின் போட்டோவைப் போட்டு காவல்நிலைய தட்டி போர்டு வைப்பது போல மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் போட்டோ போட்டு வங்கி வாசலில் டிஜிட்டல் போர்டு வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம்.
செய்தித்தாளில் முகம் புதைத்திருந்த சண்முகம் வாத்தியார் வெகுநேரம் கழித்தே எதிரில் நிற்கும் ஆறுச்சாமியைக் கவனித்தார். ஆறுச்சாமியின் வலதுபக்க கை கக்கத்தில் மஞ்சள் பை இருந்தது. “பேங்குல என்னப்பா சொன்னாங்க?” என வாத்தியார் கேட்டார். அதற்கு ஆறுச்சாமி “அதெல்லாம் கெடக்கட்டுங்கய்யா, முப்பாட்டன் காலத்துல இருந்து இருக்கற ஒத்தவீடு அதவித்துக் கடனை அடைக்க ஒரு வழி சொல்லுங்கய்யா” என கக்கத்தில் இருந்து மஞ்சள் பையை பவ்யமாக எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த பொழுது மஞ்சள் பைக்குள் மனைவரித் தோராய பட்டாவும், ஊராட்சிக்கு செலுத்திய சில வீட்டுவரி ரசீதுகளும் இருந்தன.
ஆறுச்சாமியை வினோதமாகப் பார்த்த வாத்தியாரிடம், “மனுசனுக்கு மானம் தான் பெரிசுங்க வாத்தியாரய்யா, நானு, எங்கப்பன், பாட்டன், முப்பாட்டன்னு நாங்க யாருமே படிச்சது இல்லய்யா, ஆனா ஒண்ட ஒரு குடிசை இருந்துச்சு, அரசாங்கம் சொல்லுச்சுன்னு பேங்குல கடன் வாங்கி எம்புள்ளைய படிக்க வச்சது தான் இப்ப குத்தமாப் போச்சு, இருந்த ஒரு குடிசையும் இப்ப கையவிட்டுப் போகுது. கடன் கட்டலைன்னா கைது பண்ணி உள்ள வச்சுருவாங்களாம் அதுக்கப்பறம் இந்த உசுர வச்சுகிட்டு இருக்கிறதுல அர்த்தம் இல்லங்கய்யா ஆன ஒன்னுங்கய்யா, இனி சென்ம சென்மத்துக்கும் மழைக்குக் கூட என் வகையறாப் புள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதுய்யா” என ஆறுச்சாமி தீர்மானகரமாகச் சொன்னான். அந்த எளிய மனிதனின் குரலை எங்கே போய்ச் சொல்லுவது என சண்முகம் வாத்தியார் திகைப்பில் ஆழ்ந்து போனார்.
வரத.இராஜமாணிக்கம் நன்றி தீக்கதிர் 

கருத்துகள் இல்லை: