சமீபத்தில்
இந்தியப் பிரதமர் திரு வாளர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக
“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தை முன் வைத்து 500 இந்திய பெரு நிறுவன
அதிபர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். “மேக் இன் இந்தியா” கவர்ச்சியான
முழக் கந்தான். எதை உருவாக்கப் போகி றோம்?யாருக்காக உருவாக்க போகிறோம்?
என்பதெல்லாம் மிகப் பெரும் கேள்விகள்தாம். வெற்று முழக்கங்களை கனஜோராக
உருவாக்குவதில் உள்ள பெரிய அனு கூலம், அம்முழக்கங்களின் ஊடேபாதகமான
உண்மைகளை முழுக்கமறைத்து, ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து விடுவது என்பது
தான்.உடல் முழுவதும் இயந்திர பாகங்கள் சுழலும் சிங்கத்தின் படத்தை “மேக்
இன் இந்தியா” கொள்கைக்கு சின்னமாக அறி முகப்படுத்திய மோடி “இது சிங்
கத்தின் முதல் அடி” என்றார்.
அதாவது இந்தியா எனும் சிங்கம்
இப்போதுதான் தன்னை சிங்கமாக பாவித்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்
கிறது என்று அவருக்கே உரிய பாணியில் நீட்டி முழக்கி, நுட்பமான உடல்
மொழியால் பிரஸ் தாபித்தார். உண்மையில் பெரு முதலாளிகளின் உலகம் இவரைஎந்த
நோக்கத்திற்காக முன்னிலைப் படுத்தி பிரதமர் ஆக்கியதோ, அந்தநோக்கத்தை
நிறைவேற்ற மோடிஎடுத்து வைக்கும் முதல் தப்படி தான் இது.இந்நிகழ்ச்சியில்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தலைவர் சைரஸ்
மிஸ்ரி, பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, உள்ளிட்ட இந்தியாவின்
500 பெருநிறுவன முதலாளிகள் பங்கேற்றனர்.
இந்தியத் தொழில் துறையின்
எதிர்காலம் இந்த 500 முதலாளிமார்களிடம்தான் உள்ளது. என்ற தோற்றத்தை உரு
வாக்குவதே இதன் நோக்கம், “இந்த நாடு உங்களுடையது, நமது நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்களாக மாறவேண்டும், நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள்
உலகம் முழுக்க வலம் வரவேண்டும், நம் தேசம்இறக்குமதிகளை நிறுத்திவிட்டு,
ஏற்றுமதிகளை பெருமளவில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தடை யாக உள்ள எல்லா
விசயங்களும் அடித்து நொறுக்கப்படும்”என்றும் முழங்கியுள்ளார் மோடி.
அமெரிக்காவில்
இவ்விசயம் குறித்து மிக வெளிப்படையாகவே உரை நிகழ்த்தியுள்ளார் மோடி. “இனி
அரசுகள் தொழில் செய்ய முயற்சிக்கக் கூடாது, அரசுகளின் வேலை தொழில்களுக்கு
உறு துணையாக இருப்பது மட்டுமே” இப்படி உறுதுணையாக இருக்க தற்போதுள்ள
சட்டங்கள் தடை யாக இருக்குமானால் அவற்றை தூக்கியெறியவும் தயாராக இருக்
கிறேன். எனவே தொழில் துவங்க இந்தியா வாருங்கள் , உங்களுக்கு தோதான இந்தியா
தயாராக இருக் குமென உரையாற்றியுள்ளார்.
இந்தியாவில் தேவையற்ற
சட்டங்களாக மோடி கருதுவது, சட்ட புத்தங்களிலாவது இன்னும்உயிரோடு இருக்கும்,
சுரண்டலுக்கு எதிரான சட்டங்கள் நீர், நிலம், வனம், சுற்றுச் சூழல்
பாதுகாப்பு சார்ந்தும், தொழிலாளர் நலன் சார்ந்தும் இருப்பவைதான். பெரு
நிறுவனங்களின் எல்லையற்ற கொள்ளைக்கு தடையாக இருக்கும் இச்சட்டங்களைத்தான்
நீக்குவது, அல்லது திருத்தி நீர்த்துப் போக செய்வதற்கான
உத்தரவாதங்களைத்தான் மோடி அமெரிக்காவில் வழங்கியுள்ளார்.மோடி அரசின் தொழில்
மற்றும் ஊக்குவிப்புத்துறை செயலாளர் அமிதாப் காந்த், குழுவின் கையில்
இப்படி தூக்கியெறியக் கூடியவை என்ற பட்டியலில் 22 தொழிலாளர் நலச்சட்ட
விதிகள் உள்ளன.
இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களின் வரலாறு என்பது
வங்கம், சென்னை மற்றும் மும்பை மாகாணத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்களின்
ஒன்று பட்ட இயக்கங்களின் பயனாக உருவானது. நிரந்தர ஊழியர்கள் 100 பேருக்கு
மேல் பணியாற்றும் ஒரு ஆலையை மூட தீர்மானிக்கும் முன் தொழிலாளர் துறையின்
அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி தற்போது உள்ளது. இந்த விதியை 1000
பேருக்கு மேல் பணியாற்றும் ஆலைக்குத்தான் என திருத்த மோடி அரசு முயல்கிறது.
அதாவது
நோக்கியா போன்ற ஆலையில் 999 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருக்கும் நிலை
யில் எந்த அறிவிப்பும் அனுமதியும் இன்றி மூடிவிடலாம் என்பதுதான். தற்போது
அந்த ஆலை மூடப்பட்டு விட்டது.இந்த படுபாதக சட்டத் திருத்தங்களை இந்தியாவில்
நடைமுறைப் படுத்த பாஜக ஆளும் மாநிலமான இராஜஸ் தானில் முன்னோட்டம் பார்க்க
முயன்றுள்ளது மோடி அரசு.இம் மாநிலத்தில் மத்திய தொழிலாளர் சட்டங்களான,
தொழில்துறை தகராறு சட்டம் 1947, ஒப்பந்தத் தொழிலாளர் கட்டுபாடு சட்டம்
மற்றும் தொழிற்சாலை சட்டம் 1948 ஆகிய மூன்று முக்கிய சட்டங்களிலும்
திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தொழில்துறை யினை தாராளமய மாக்கும்
நோக் கிலேயே இச் சட்டங் களை திருத்தம் செய்துள்ளது இராஜஸ்தான் மாநில அரசு
மேலும் பிரநிதித்துவபடுத்தும் தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டுமெனில்
தொழிலாளர்கள் 15 சதவீதம் வாக்களித் தால் போதுமென்ற தற்போதைய விதி 50
சதவீதமாக மாற்றப்பட் டுள்ளது.
இதே போல ஒரு நிறு வனத்தில் ஒப்பந்த
தொழிலாளர் சட்டம் அமல்படுத்த வேண்டு மெனில் ஒப்பந்த தொழிலாளர் களின்
எண்ணிக்கை 20 இருந்தால்போதுமென்ற தற்போதைய விதி 100 என்ற அளவில்
உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தொழிற் சாலை சட்ட அமலாக்கத்திற்கான
தொழிற்கூடங்களின் வரையறை களையும், ஷரத்துக்களையும் மிக மோசமான வகையில்,
தொழிலாளர்களை பாதிக்கும் விதத்தில் திருத்தம் செய்துள்ளது இராஜஸ்தான் மாநில
அரசு.
இதே போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களை
கையகப்படுத்தும் சட்ட விதிகளிலும், விவசாயிகளை பாதிக்கும் விதத்திலேயே
திருத் தங்களை செய்துள்ளது இம்மாநில அரசு இவை யாவும் தனியார் அந்நிய
முதலாளிகளின் நலன்களுக்காக தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் அப்பட்டமான
வெளிப்பாடாகும். இந்த நிகழ்ச்சி நிரலைத்தான் நாடு முழுவதும் விஸ்தரிக்க
முயலுகிறது மோடியின் பாஜக அரசு.
- என்.பகத்சிங் ......நன்றி தீக்கதிர் 30.10.2014.