“வர்க்கங்களுக்கு இடை யிலான பாகுபாடு, பாலினங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு ஆகியன இந்து சமூகத்தின் ஆன்மாவாகத் திகழ்பவை. அவை மீது கைவைக்காமல் பொரு ளாதாரப் பிரச்சனைகள் மீதான சட்டங் களை இயற்றிக் கொண்டே போவது அரசியல் சாசனத்தைக் கேலிக் கூத்தாக்குவதோடு சாணிக்குவியல் மீது அரண்மனை கட்டுவது போன்றதாகும்”இது 1951 அக்டோபர் 10 அன்று சட்டஅமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற் காக டாக்டர் அம்பேத்கர் எழுதிய கடிதத் தின் வரிகள். எவ்வளவு தீர்க்கமான வார்த்தைகள்! ஆழமான புரிதலைத் தருகிற ஜீவனுள்ள சொற்கள்! டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் ஆண்டை நிறைவு செய்கிற நேரம் இது. ஆனால் அந்த மாமனிதனின் வார்த்தைகள் இன்றைக்கும் இந்தியச் சூழலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.
பாலின சமத்துவத்திற்காக...
அம்பேத்கர் பன்முகப் பார்வையை, பன்முகச் செயல்பாட்டைக் கொண்ட கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆளுமை ஆவார். கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் அவரின் சிந்தனைகள் நிலைத்திருப்பதற்கு காரணமும் அதுவே. வர்க்கம், சாதி, பாலினம் என எல்லாவித ஒடுக்குமுறைகளையும் வேரறுக்கிற ஓர் உலகம் அவரது கனவாய் இருந்தது. அதற்கான வழிமுறைகளில் ஒடுக்குமுறை எதிர்ப்புச் சிந்தனையாளர்கள் மத்தியில்மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம். பலவகையிலான ஒடுக்குமுறைகள் இணைகிற மையப்புள்ளி எது என்பதில் விவாதங்கள் இருந்திருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறை எதிர்ப்பில் நேர்மை யான அணுகுமுறை, உறுதியான செயல் பாடு, சமரசமற்ற நகர்வு என்கிற அளவு கோல்களில் அம்பேத்கர் மிகமிக உயரத்தில் நிற்கிறார்.
அவர் பாலின சமத்துவத்திற்காக நடத்திய போராட்டம் ஓர் உதாரணம்.1947 முதல் 1951 வரை சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் இந்து சீர்திருத்தச் சட்டத்தை நிறை வேற்றப்பாடுபட்டார். திருமணம், வாரிசுரிமை, மணமுறிப்பு ஆகியவற்றில் இந்துப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர நான்கு ஆண்டுகளும் அவர் எடுத்த முயற்சிகள் அளவிடற்கரியது. ஏப்ரல் 11, 1947ல் அறிமுகம் செய்யப்பட்ட சட்டவரைவு செப்டம்பர் 26, 1951ல் கைவிடப்பட்ட போது அவர் பதிவு செய்த வலி மிகுந்த வார்த்தைகள் இவை,“நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் கண்ணீரும் இல்லாமல், ஒப்பாரியும் இல்லாமல் நான்கு சரத்துகளே நிறை வேற்றப்பட்ட நிலையில் அச்சட்ட வரைவு கொல்லப்பட்டுவிட்டது. அவையின் முன் அது பரிசீலனையில் இருந்த போதும் வலியும், இம்சையுமாய் அது வாழ்க்கைக்காக அல்லாடிக் கொண்டிருந்தது”.அச்சட்ட வரைவு நிறைவேறாததால் கடைசியில் நான் உண்மையாக இருக்க வேண்டும், அது நான் வெளியேறுவதன் வாயிலாகவே அமைய முடியுமென்று கூறி பதவி விலகினார்.
எவ்வளவு உயரிய அரசியல் கலாச்சாரம்! அன்று அச்சட்டவரைவு நிறைவேறாமல் இருக்கலாம். ஆனால் அவர் போட்ட விதை, கருத்தாக்கம் 1956ல் துவங்கி பாலின சமத்துவத்திற்கான பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது.பிற்பட்டோர் நலனுக்காக...இன்று சாதிய மோதல்களில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை களமிறக்குவதை காண்கிறோம். அம்பேத்கர் ‘படிநிலைச் சமத்துவமின்மை’ எவ்வாறு சாதியச் சமூகத்தின் உயிரைத் தக்க வைத்திருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார். சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்களின் குறியிலக்கு “பிராமணியக் கட்டமைப்பை” நோக்கியதாக இருக்க வேண்டுமென்ற தெளிவைச் சுட்டினார்.1951ல் அவர் பதவி விலகியதற் கான காரணங்களில் ஒன்று பிற்பட்டோருக் கான இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் மத்திய அரசு காண்பித்த அலட்சியமுமாகும். அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது பிற்பட்டோர் இடஒதுக்கீட்டை குடியரசுத் தலைவரால் உருவாக்கப்படுகிற ஆணையம் பரிசீலிக்க வேண்டும்; அப்பரிந்துரை களின் அடிப்படையில் அரசு நிர்வாகம் அதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாகியும் ஆணையம் அமைப்பதற்கோ, அதற்கான முயற்சிகள் எடுப்பதற்கோ ஓர் அடியைக் கூட முன்னெடுத்து வைக்கவில்லையே என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
பட்டியல் சாதியினர் மத்தியில் ‘படி நிலைச் சமத்துவமின்மை’ உருவாக்குகிற சாதியச் சிந்தனைகளிலும் அவரின் வழிகாட்டல் தெளிவானது. அவர் பிறந்த ‘மகர்’ சாதி மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளோடு வேறுபாடு பாராட்டாமல் இருக்க வேண்டுமென்று அளித்த அறி வுரை மிகமிக முக்கியமானது. தமிழகத்தில் உழைப்பாளி மக்களை ஒருவரோடு ஒருவர் மோதவிடுகிற ‘தலித் எதிர்ப்பு மனோபாவத்தை’ விதைப்பவர்கள் அம்பேத்கரின் பரந்த பார்வையை, பிற்பட்டோர் நலன் காக்க அவர் கொடுத்த குரலை மறைக்கிறார்கள். அம்பேத்கரின் இக்குரல் இந்தியா சுதந்திரம் பெற்று 47வது ஆண்டில்தான் நனவானது என்பது தனிக்கதை. அதுதானே ‘மண்டல் குழு’ அமலாக்கம்.
“ஒரு மனிதன் ஒரு மதிப்பு”
இந்திய அரசியல் ஜனநாயகத்திற்கு அவர் விடுத்த அறிவுரையின் சாரம் இந்த ஒரு சொல்லுக்குள் அடங்கியுள்ளது. 1950 ஜனவரி 26ல் இந்தியக் குடியரசு ஒரு மனிதன் ஒரு வாக்கு, ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்கிற அரசியல் ஜனநாயகத்தை உறுதி செய்கிற வேளை யில் “ஒரு மனிதன் - ஒரு மதிப்பு” என்கிற சமூக, பொருளியல் இலக்கு எட்டப்படாத முரண்பாடு தொடர்வதை அரசியல்சாசன அறிமுக உரையில் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய முரண்பாடு களைத் தொடர நாம் அனுமதித்தால் இந்திய அரசியல் ஜனநாயகமே கேள்விக் குறியாகிவிடும் என்று அவர் விடுத்த எச்சரிக்கை பொருள் பொதிந்தது.ஆனால் ஜனநாயகத்தைப் பயன் படுத்த சாதிய ஒடுக்குமுறைகள் எவ்வாறு குறுக்கே வருகின்றன என பாப்பா பட்டியில், கீரிப்பட்டியில் பார்த்தோம்.
அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களின் உயிர்களே விலையானதற்கு ஜக்கனும், குருதியை ஈந்து உரிமையை நிலைநாட்டியதற்கு கிருஷ்ணவேணியும் சாட்சியங்கள்.அம்பேத்கர் பேசிய பொருளியல் சமத்துவம் தொலை தூர இலக்கு. ஆனால்இன்றைய ஆளும் வர்க்கங்கள் தாங்கள்தந்த உறுதிமொழியைக் கூட நிறை வேற்ற மறுப்பதற்கு எஸ்.சி, எஸ்.டி துணைத்திட்டங்களே சாட்சியங்கள். அம்பேத்கரின் நினைவகங்களுக்கும், சிலைகளுக்கும் சில கோடிகளை வீசியெறிந்து அவரின் மரியாதையைப் போற்றுவதாக நாடகமாடும் மத்திய ஆட்சியாளர்கள் 2016-17 பட்ஜெட்டில் மட்டும் எஸ்.சி, எஸ்.டி துணைத்திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகையை ஒதுக்காமல் பறித்தது ரூ.75,764 கோடிகள். ஒதுக்கப்பட்ட தொகையும் கூட எங்கே ஒதுங்கியது என்பது தனிக் கேள்வி. 2015-16ல் மாணவ, மாணவியரின் விடுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 75 கோடிகளில் செலவழிக்கப்பட்டது வெறும் ரூ.13 கோடிதான். எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கான வினை மூலதனம், கடன் உத்தரவாத நிதிக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டதெனில் செலவழிக்கப்பட்டது வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே. இத் துணைத் திட்டங்களின் அமலாக்கத்திற்கு அயராது பாடுபட்டு வருகிற பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், “அம்பேத்கரின் கற்பி, ஒன்று சேர், போராடு என்ற முழக்கத்தில் கல்விக்குமுக்கியத்துவம் அளித்தார். ஆனால் அரசின் செயல்பாடோ இப்படி இருக் கிறது” என்று வெளியிடும் வருத்தம் ஆட்சியாளர்களின் அரசியல் உறுதியின்மையை இடித்துரைக்கிறது.
இவர்களின் உறுதிமொழியையே காப் பாற்றாதவர்கள் எப்படி நிலச்சீர்திருத்தம் போன்ற அடிப்படைத் தீர்வுகளை நோக்கி நகர்வார்கள். வறட்சி மாவட்டங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களுக்கு உயர்த்தப்படுமென்று அறிவித்து விட்டு அதற்குரிய தொகையை ஒதுக்கீடுசெய்யாததால் 40 நாள் வேலைக்கே கூலி தரமுடியாமல் ஜனவரி மாதமேகல்லாப்பெட்டி காலி எனக் கைவிரிப் பதைப் பார்க்கிறோம். வர்க்க ஒடுக்கு முறை, சாதிய ஒடுக்குமுறையும் ஒரு சேர ஏவிவிடப்படுவதன் அடையாளங்கள் இவை.
சிவப்பும், நீலமும்...
டாக்டர் அம்பேத்கர் - 125வது பிறந்த நாள் கொண்டாட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் திருவிழாவிற்கு ஒப்பானது. அவரின் கருத்துக்களை காலமெல்லாம் எதிர்த்தவர்கள் கூட இவ்விழாவைக் கொண்டாடுவது அவரின் இருப்பை, தாக்கத்தை நிராகரிக்க இயலாத பொருத்தப்பாட்டிற்கு சாட்சியம். எனவேதான் இந்து சீர்திருத்த சட்டவரைவைக் கொளுத்தியவர்கள், இந்தியப் பொருளியல் கட்டமைப்பில் சாதி முக்கியமானது என்பவர்கள், கழிப்பறைகள் சுத்தம் செய்கிற பணி சாதிரீதி யாய்ச் சுமத்தப்படுவதை கடவுளின் கட்டளை என்பவர்கள், இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோருபவர்கள் எல்லாம் அம்பேத்கரைக் கொண்டாட முனைகிறார்கள். அம்பேத் கரைத் தன்வயப்படுத்திக் கொள்ள கருத்துத் திரிப்பில் கூட ஈடுபடுகிறார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி “அம்பேத்கர் ஆலகால விஷத்தை உண்டு மற்றவர் களுக்கெல்லாம் அமிர்தம் தந்தவர்”என்று வர்ணித்துள்ளார். நமது கேள்வியும் அதுதான். எத்தனை காலம் தான் அம்பேத்கரின் வாரிசுகளும் ஆலகால விஷத்தை உணவாகக்கொள்வது? எத்தனை காலம்தான் பொருளாதாரத் திலும், சமூகத்திலும் மேலாதிக்கம் செலுத்துபவர்கள் அமிர்தத்தை அபகரிப்பது நடந்து கொண்டே இருப்பது?ரோகித் வெமுலாவின் கழுத்தை இறுக்கிய கயிறும், உடுமலைப்பேட்டை சங்கரின் கழுத்தில் இறங்கிய வெட்டரிவாளின் கூர்மையும் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலிகேட்பது? எவ்வளவு குருதியைத்தான் சாதி வெறியின் நாவு ருசிக்கு தந்து கொண்டே இருப்பது?சிவப்பும், நீலமும் வேறுபடுகிற புள்ளிகள் இருக்கலாம். ஆனால் ஒடுக்கு முறையற்ற உலகம் என்ற அழகான கோலத்தில் இணைய வேண்டிய புள்ளி கள் அவை. மனம் திறந்த விவாதங்கள், தீர்வுகளை நோக்கிய தர்க்கங்கள், சங்கமிக்க வேண்டிய களங்கள் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டி யுள்ளது.
டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளிலேயே“மத சம்பிரதாயங்களில் ஆத்மாவின் விடுதலைக்கு பக்தி ஓர் மார்க்கமாக சொல்லப்படலாம்.ஆனால் அரசியலில் பக்தியும், தனிநபர் வழிபாடும் சீரழிவுக்கான பாதை என்பது நிச்சயம். அது இறுதியில் சர்வாதிகாரத்திற்கே இட்டுச்செல்லும்”இன்று ஒற்றைக் கலாச்சாரம், தனிநபர் வழிபாடு என்ற பிற்போக்கு அரசியல் மேலோங்கியிருக்கிற வேளையில் அம்பேத்கரின் இக்கருத்து எவ்வளவு மேன்மை மிக்கது! உயரிய ஜனநாயகம்! இந்திய தேசத்திற்கான கருத்தை உருவாக்குவதற்கான சிந்தனைகளைத் தட்டியெழுப்புகிற ஆளுமை!
நன்றி தீக்கதிர் 14.04.2016 ( தோழர் க.சுவாமிநாதன் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக