ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

“தோழமைக்கு மொழி இல்லை”

எஸ்.ஜி.ரமேஷ்பாபுஅரே.. கம்யூனிஸ்ட் பார்டிவாலா ஆகயா, சப் ஆஜாவ்! ஏக் ஜகா பிர் கட்டா ஓ ஜாவோ...” திடூமென ஒரு ஜார்க்கண்ட் இளைஞன் பெருங்குரல் எடுத்து தொழிலாளர்கள் குடியிருப்புகளை நோக்கிஅழைப்பு விடுத்தார். அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் 980 அடி உயரம் கொண்ட கோபுரத்திலிருந்து விழுந்து, உடல் சிதைந்து மரணமடைந்த இரண்டுசக தொழிலாளர்களுக்காக வேலை நிறுத்தம் இருந்த இடம் அது. குடியிருப்புகள் என்ற பெயரில் தகரங்களால் வேயப்பட்ட சிறைச்சாலைகள் அவை. மூவாயிரம் பேர் வசிக்குமிடத்தில் பத்து கழிவறைகள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? சிமெண்ட கட்டைகளால் ஐந்து தொட்டி கள்.

அவைகளில் தான் குளிப்பதும் துணிதுவைப்பதும். தகர கொட்டாய்களில் மின்விசிறி இல்லாத அறைகளில் வெம்மை யில் உழல்கின்றனர். மர நிழலில் அவர் களே முடிதிருத்திக் கொண்டதன் எச்ச மாக கொத்துக்கொத்தாய் ரோமங்கள் அலையாடின. அந்த கொட்டடிகளிலிருந்து மெல்லமெல்ல தலைகள் எங்களை எட்டிப் பார்த்தன. எங்கள் வாகனங்களில் இருந்த செங்கொடி அவர்கள் கண்களில்பட எங்களை நோக்கி பத்து.. நூறு.. பலநூறு.. ஆயிரம்.. இரண்டாயிரம் என இளம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சூழத்துவங்கினர். நாங்கள் நின்ற திடலில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் எங்களை சுற்றி நின்றனர். ஒடிசா, ஜார்க்கண்ட், உத்ராஜ்சல், பீகார், குஜராத், மேற்குவங்கம் இன்னும் பிற மாநிலத்தவர்களும். எவருக்கும் தமிழ் தெரியவில்லை. அவர்கள் தனித்தீவாக வாழ்ந்து வந்த இடம் அது.கடந்த ஜூலை 26ம் தேதி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உருவாகிவரும் ஐ.எல்.எப்.எஸ் அனல்மின் நிலையத்தில் நடந்த விபத்து அது.

அனல்மின் நிலைய உயர் கோபுர கட்டுமானப் பணியின் போது லிப்ட் கம்பிகள்அறுந்ததில் ஐந்து ஒப்பந்தத் தொழிலாளர் கள் கீழே விழுந்தனர். அதில் இருவர் தப் பிக்க சோனுராஜ் (26), முகித்கான் (28) ஆகியபீகார் மாநிலத்தை சார்ந்த இருவர் உடல்சிதறி இறந்தனர். மேலும் கால் துண்டிக் கப்பட்ட வினோத்குமார் (21) பீகாரை சேர்ந்தஇளம் தொழிலாளியும் 30ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் தொடர்ந்து நடந்துவரும் விபத்துக் களின் தொடர்ச்சிதான் இதுவெனினும் இம் முறை நடந்த கோர மரணம் அனைவரையும் உலுக்கி விட்டது. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் 1300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள அந்நிறு வனத்தை பார்வையிட சென்றோம். காவல் துறையினர், நிறுவன அதிகாரிகள், தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே எங்கள் கண்களில் பட்டனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டுவிட்டு அதிகாரிகளிடம் விசாரித்துவிட்டு, வேலைநிறுத்தத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை குடியிருப்புகளில் சந்திக்க சென்றோம். இதுவரை ஒப்பந்தத் தொழிலாளர்களை மிரட்ட மட்டுமே அவர்கள் குடியிருக் கும் பகுதிக்குள் சில அரசியல் கட்சிகள் சென்றுள்ளன.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடந்த மூன்றாண்டு களில் நடக்கும் முதல் கூட்டம் இதுதான். இதுவே அவர்களுக்கு உற்சாகத்தை யும் நம்பிக்கையும் ஊட்டி இருந்தது. அவர்களுடன் “நீங்கள் எந்ததெந்த மாநிலத்திலிருந்தோ வந்துள்ளீர்கள், உங்கள் முகங்களை இப்போதுதான் பார்க்கிறோம். இருப்பினும் நீங்கள் யாருமற்ற அனாதை கள் அல்ல, உங்களுக்கு சகோதரர்களாக, உறவினர்களாக கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் இருக்கிறோம்” என பேசத் துவங்கியதும் அவர்கள் கண்கள் பனிக்ககோஷமிடத் துவங்கினர். முதலாளித் துவத்தின் கோர உழைப்புச் சுரண்டல், அந்த உழைப்புச் சுரண்டலுக்கு பக்கபலமாய் இருக்கும் சில சுயநல அரசியல் இயக்கங் கள், அவைகளை ஆக்கிரமித் துள்ள குண்டர்படை என அவர் கள் பாதிப்புக்களுக்கு நிறைய பின்னணி இருந்தது.

வெளிமாநிலங்களிலிருந்து ஏஜெண்டு கள் மூலம் அழைத்து வரப்படும் இந்த அத்துக்கூலி தொழிலாளர்களுக்கு எவ்விதபணிப் பாதுகாப்பும் இல்லை. மொழி தெரியாத பிரதேசத்திலிருந்து வந்த இவர் களுக்கு தொழிற்சங்கத்தில் சேரும் வாய்ப்பும் இல்லை என்பது கூடுதல் சோகம். ஐ.எல்.எப்.எஸ். நிறுவனம் எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுக்க, எல் அண்ட் டி அவர்களுக்கு கீழே ஹசன் பிரதர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுக்க, அவர்கள் கூலிக்கு ஆட்களை ஏஜெண்டுகள் மூலம் பிடிக்க எல்லோருக்கும் பங்கு போக உண்மையில் உழைப்பவனுக்கு தினக்கூலி என்பது 160 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. உயர் கோபுரங்களில் வேலைசெய்தால் கூலி அதிகம் என கூறினாலும் பொதுவாய் யாருக்கும் அப்படி கொடுப்பதில்லை. அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் இவர்களின் உழைப்புக்கு நேரம் காலம் கிடையாது.

சிலர் 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். எந்த மாதமும் முதல்வாரத்தில் இவர்கள் கூலிவாங்கியது கிடையாது. இன்னும் பலர் எட்டு மாதம் கூலி பெறாமல் உள்ளனர். இவர்கள் சம்பளத்தில் மாதாமாதம் 500ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பணி முடிந்து போகும்போது வாங்கிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் அப்படி இதுவரை வாங்கியதில்லை. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் உரு வாகும், பல்லாயிரம் பேர் பணிபுரியும் இந்தவளாகத்தில் மருத்துவ வசதிக்கான எந்தஏற்பாடும் இல்லை. இந்நிறுவனம் நிலம்வாங்கியது முதல் இன்று வரை அப்பகுதி களில் உள்ள ரவுடிகளுக்கு செய்த செலவை இதற்கு செய்திருந்தால் கோடிரூபாய் முதலீட்டில் நல்ல மருத்துவமனையை உருவாக்கி இருக்கலாம்.

யார் அடிப்பட்டாலும் அல்லது உடல்நிலை பாதிக்கப் பட்டாலும் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரங்கிப் பேட்டைக்குத்தான் போகவேண்டும். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ஆகும் செலவை இவர்கள் கூலியில் ஒப்பந்ததாரர் பிடித்துக்கொள்வார். உணவுக் காக ஆகும் செலவு போக ஒரு நாளைக்கு இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீறுவது 60 முதல் 80 ரூபாய்தான்.அதிக நேரம் வேலை பார்த்து இன் னும் கொஞ்சம் சேர்த்து வீட்டிற்கு அனுப்புவதற்குள் இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. இப்படிதான் இந்தியநாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் இவைகளை தடுக்க அதிகாரம் இல்லாதவர்களாய் கையறு நிலை யில் இருக்கின்றனர். அவர்களால் இந்தநிறுவனங்களின் உள்ளே நுழையக்கூட முடியவில்லை என்பது தான் உண்மை.அதற்கு சிறந்த உதாரணம் இதே நிறுவனத்தில் சிஐடியு அமைப்பு துவக்கப்பட்ட தற்காக ஐந்து பொறியாளர்களை தற் காலிக பணிநீக்கம் செய்தது. மாவட்ட தொழிலாளர் அலுவலர் விசாரணை முடியும் வரை தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என அறிக்கை அனுப்பினார்.

ஆனாலும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஐந்துதொழிலாளர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் தொழிலாளர் நல அலுவலரால் எதுவும் செய்யமுடிய வில்லை. அதற்கான களப்போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நிறுவனம் துவங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் கட்டுமானப் பணிகளில் பல விபத்துக்கள் நடந்துள்ளது. தொழிலாளர்கள் ஒன்று கூடினால் அங்குள்ள நிறுவனத்தின் உள்ளூர் அடியாட்களால் மிரட்டப்பட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டுவிடும். முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு அவர்களை வெளி உலகிற்கு அழைத்து வந்துள்ளது. சார் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கடந்த 29ம் தேதி முதல் முறையாக அங்கு பணியாற்றும் ஒப்பந் தத் தொழிலாளர்கள் தங்குமிடத்தை, அவர்களது பணி நிலைமைகளை ஆய்வு செய்துள்ளனர். உருவாக்கப்பட்ட கோரிக்கை கள் மீது சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவல கத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

பேச்சுவார்த்தையில் ஐ.எல்.எப்.எஸ், எல் அண்ட் டி, செப்கோ என்ற சீன நிறுவனம், ஹசன் பிரதர்ஸ், சரஸ்வதி கான்ட்ராக்டர்ஸ் போன்ற நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள், சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் சிதம்பரம் சட்டமன்ற உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இறந்த ஒப்பந்தத் தொழி லாளர் குடும்பங்களுக்கு தலா 25 லட் சம் வேண்டும் என நாம் கோரிக்கை வைக்க, நிறுவனம் தலா 10.5 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் என ஒப்புக் கொண்டது. இருப்பினும் இந்ததொகை போதாது என நாம் கூறிய தால் மேற்கொண்டு நிறுவனத் தலைமையுடன் கலந்து பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சட்டக்கூலியை அமலாக்கவும் பிரதிமாதம் 10 தேதிக்குள் சம்பளம் வழங்க வும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேஜ்சிலிப் கொடுப்பதென்றும், தொழிலாளர் குறைகளை சுதந்திரமாக தெரிவிக்க தனிப்பதிவேடு வைக்கவும் ஒப்புக் கொண்டனர். மருத்துவ வசதி சம்பந்தமாக தனியே தொழிலாளர் குடியிருப்பினும் மருத்துவர் மற்றும் போதிய மருந்துகளுடன் மையம் துவக்கப்படும்.

தினம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவர் அங்கிருப்பது உறுதிசெய்யப்படும். மேலும் நாற்பது கழிப்பறைகள் உடனடியாக கட்டப்படும், மின் விசிறி இல்லாத அறை களில் உடனடியாக மின்விசிறிகள் பொருத்தப்படும் என்றும் முடிவானது. அதேபோல வெளியாட்கள், குண்டர்கள் தொழிலாளர் குடியிருப்புகளில் புகுந்து மிரட்டுவதை இனி அனுமதிப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது. இவைகள் முறையாக நடை பெறுகிறதா என்பதை ஆய்வு செய்யஇப்பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட குழு மீண்டும் அடுத்த மாதம் சந்தித்து அமலாக்கம் குறித்து பரிசீலனை செய்வது எனவும் முடிவானது. 29ம் தேதி நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை 30ம் தேதி காலை தொழிலாளர் குடியிருப் பில் பல்லாயிரம் தொழிலாளர்கள் மத்தி யில் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்திற்கான ஒரு குழு தேர்ந் தெடுக்கப்பட்டது.நாங்கள் புறப்படும் போது ஒரு குஜ ராத் தொழிலாளி எங்கள் கரங்களை பற்றிக் கொண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டே இருந்தார். எங்களுடன் வந்த மொழிபெயர்க்கும் தோழர் அவர் சொன்னதை மொழிபெயர்க்க துவங்கினார். அவரை இடைமறித்து சொன்னோம். `வேண்டாம் அன்பையும் மனிதத்தையும் புரிந்துக்கொள்ள மொழி அவசியமல்ல. அவர் கையின் பிடிப்பிலேயே அதை அறிந்துக்கொண்டோம்’ என. வஞ்சிக்கப்பட்டு அல்லல்லுறும் தொழிலாளர்களுக்கு குரல்கொடுப்பது காலத் தின் அவசியமல்லவா. அவர்கள் எங் கிருந்து வந்தால் என்ன? எந்த மொழி பேசினால் என்ன? அவர்கள் சக மனிதர்கள் என்பதொன்று போதாதா அவர் களுக்காக நேசக் கரம் நீட்ட!?

கருத்துகள் இல்லை: